mercredi 7 mai 2014

மாதவ மங்கையர் - பகுதி 7




கவியரங்கம்

மாதவ மங்கையர்

கண்ணகி, மாதவி, மணிமேகலை, கோப்பெரும்தேவி
[தலைமைக் கவிதை]

கோப்பெரும் தேவியின் மாண்பு

இளங்கோ அடிகள் இயற்றிய சிலம்பு
வளந்தரும் தமிழின் மணங்கவர் காவியம்!
கண்ணகி கோவலன் காதை யாகினும்
பெண்மயில் மாதவி பெருமை பேசினும்
ஒருவனுக் கொருத்தி என்பதை மறந்தால்
உருப்படா தென்றும் உலகோர் வாழ்வே!
ஒப்பிலா இந்த உயர்ந்த கருத்தைச்
செப்பிடும் நூலே சிலப்பதி காரம்!
கண்ணகி பிரிந்த கணவனை அடைந்தாள்!
கண்மணி மாதவி காதலன் துறந்தாள்!
எல்லாப் பொருளும் இழந்த நிலையில்
செல்வன் கோவலன் சிலம்பொடு மதுரை
மாநகர் அடைந்தான்! நஞ்சுடை வஞ்சகன்
கோ..நவில் சொல்லால் கொடுமை புரிந்தான்!
கள்வன் என்று கழுத்தை வெட்டி
உள்ளம் எரிய ஊறுபழி செய்தான்!

நீதி தவறிய மன்னனை நேரில்
மோதினால் கண்ணகி முறையைக் கூறியே!
ஆராய்ந்து பாராது அளித்த தீர்பர்பால்
பாரோர் பழிக்கப் பழிபட மாய்ந்தான்!
கோ..அவன் மனைவியே கோப்பெரும் தேவி!
பூஅவள்! புவியின் புகழ்வள் என்பேன்!
இறந்தான் கணவன் என்றதும் தன்னுயிர்
துறந்தாள் இந்தத் தூயவள் என்பேன்!
சிறிய பாத்திரம் சிலம்பினில்! என்றும்
சிறந்த பாத்திரம் கோப்பெரும் தேவியே!

தொடரும்
 

14 commentaires:

  1. கோப்பெரும் தேவியின் மாண்பு சிறப்பு ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மாண்புடன் வந்து வடித்த எழுத்துக்கள்
      யாண்டும் இனிக்கும் எனக்கு!

      Supprimer
  2. ஒருவனுக் கொருத்தி என்பதை மறந்தால்
    உருப்படா தென்றும் உலகோர் வாழ்வே!
    ஒப்பிலா இந்த உயர்ந்த கருத்தைச்
    செப்பிடும் நூலே சிலப்பதி காரம்!

    சுருங்கச் சொல்லி விளங்க வைத்தீர்
    அருந்தமிழ் செற்களை அழகாய் தைத்தீர்
    ஒப்பில் கருத்தை ஒதும் வரிகள்
    செப்புப் தகட்டில் சொதுக்கிய நெறிகள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவாின் சொல்லெல்லாம் பூந்தேன் பொழிந்து
      குலவும் மனத்துள் குவிந்து!

      Supprimer
  3. வணக்கம் !
    கண்ணகித் தாயைப் போற்றியே இங்கு
    கனிந்த நற் கவிதை தனைக் கண்டுள்ளம் மகிழ்ந்தது ..
    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பாள் அடியாள் அளித்த எழுத்துக்கள்
      செம்பால் இனிமைத் திரட்டு!

      Supprimer
  4. மிகச் சரளமாக வார்த்தைகள்
    வந்திருந்து வடம் பிடித்து
    கவிதைத் தேரை இழுத்துச் செல்வது
    பிரமிப்பூட்டுகிறது
    சிலம்பின் கதாபாத்திரங்கள் குறித்து
    தொடர் நிலைச் செய்யுள் வடிவிலேயே
    சொல்லிப்போனது கூடுதல் சிறப்பு
    கற்றுக் கொள்கிறோம்
    தொடர வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எண்ணம் இனி்க்கும் எழுத்தால் இழுக்கின்றேன்
      வண்ணத் தமிழ்தோ் வடம்!

      Supprimer

  5. மாதவ மங்கையாின் மாண்புகளைத் தாமெண்ணித்
    தா..தவத் தண்டமிழை! என்தோழா! - பா..தவழ்
    சீரெல்லாம் என்னுடைய சிந்தைக்குள் நின்றாடும்!
    பாரெல்லாம் ஈடோ பகா்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கோப்பெரும் தேவியார் கொண்ட சிறப்பினைப்
      பாப்பெரும் சீாில் படைத்துள்ளேன்! - காப்பிடும்
      வண்ணத் தமிழ்வாழ்க! வல்ல நெறிவாழ்க!
      நண்ணும் நலம்வாழ்க நன்கு!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      பெருமை பெருக்கும்நற் பெண்மணியின் சீரை
      அருமைத் தமிழே அளி!

      Supprimer
  7. அருமை ஐயா! தொடருங்கள்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்ல கவிதைகளை நாளும் படித்திட்டால்
      வல்ல கவிதை வரும்!

      Supprimer