mardi 3 juin 2014

இராமகிருட்டினன் மணிவிழா




திருமிகு இராமகிருட்டினர் மணிவிழா வாழ்த்துமலர்

மணிவிழாச் செல்வர்!நன் மாண்புடை யாளர்!
அணிவிழா யாவும் அடைக! - மணவிழாத்
தந்த நறுமணத்தைத் தாங்கி வளர்கவே
எந்தப் பொழுதும் இனித்து!

அறுப தென்னும் அகவையினை
     அடைந்த நண்பர்! தமிழன்பர்!
இருப தென்னும் இளமையுடன்
     இதயம் இருக்கக் காண்கின்றேன்!
உறுவ தெல்லாம் உயர்ந்தோர்கள்
     உரைத்த நெறியே! நற்பணியே!
அறுகம் புல்போல் மனைதழைத்து
     ஆள்க இராம கிருட்டினரே!

பிள்ளைச் செல்வம் உயர்ந்தோங்க!
     பெற்ற செல்வம் நிறைந்தோங்க!
கொள்ளை கொண்ட நன்மனையாள்
     கொஞ்சும் இன்பம் கொழித்தோங்க!
கிள்ளைப் பேர்த்தி பேரன்கள்
     கீர்த்தி யோடு பிறந்தோங்க!
வெள்ளை மனத்தோன் திருவருளால்
     வெல்க இராம கிருட்டினரே!

கற்ற கல்வி மணந்திடவும்
     கலைகள் வாழ்வில் கமழ்ந்திடவும்
உற்ற உறவு நண்பர்கள்
     உயிராய் இருந்து மகிழ்ந்திடவும்
பெற்ற பெருமை பேறெல்லாம்
     பெருகி நன்றே திகழ்ந்திடவும்
நற்ற வத்தோன் அருள்நல்க
     வாழ்க இராம கிருட்டினரே!

கம்பன் கவிகள் பல்லாண்டு!
     கண்ணன் காதல் பல்லாண்டு!
நம்பன் ஈசன் பல்லாண்டு!
     நங்கை உமையாள் பல்லாண்டு!
செம்பொன் முருகன் பல்லாண்டு!
     தெய்வ வள்ளி பல்லாண்டு!
இம்மண் போற்றிப் பல்லாண்டே
     ஏற்பீர் இராம கிருட்டினரே!

30.05.2014

6 commentaires:

  1. மணியான கவிமூலம் வாழ்த்துப் பெற்ற
    மணிவிழாத் தம்பதியினர்
    பூரண நலத்தோடும் நிறைந்த வளத்தோடும்
    நீடூழி வாழ மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. அய்யா,
    வணக்கம். உங்களோடு இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.
    வாழ்க பல்லாண்டு!!!

    RépondreSupprimer
  3. வணக்கம் !
    சிறப்பான நல் வாழ்த்துப்பா இதனை ஏற்ற தம்பதியினர் வாழ்க
    வாழ்க பல்லாண்டு !

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா!

    அருமையான கவி வாழ்த்து!
    அகம் நிறைய நாமும் மணிவிழாக் கண்ட
    இனிய தம்பதியரை வாழ்த்துகிறோம்!

    வாழ்க நலம் சூழ!

    RépondreSupprimer
  5. மணிவிழாத் தம்பதியினருக்கு எனது வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  6. மணிவிழா வாழ்த்துப்பா அருமை..

    RépondreSupprimer