mercredi 21 mai 2014

நன்மொழியாள்




நன்மொழியாள்!

எடுப்பு

நன்மொழிப் பெண்ணே! - இன்பப்
பொன்மழை பொழியுதே உன்னொளிர் கண்ணே!
                                        (நன்மொழி)

தொடுப்பு

என்னுயிர் ஆனாய்! இனித்திடும் செந்தேனாய்! - உன்னை
எழுதிடும் கவிகள் மின்னிடும் விண்மீனாய்!
                                        (நன்மொழி)

முடிப்பு

வலைவிரித்துப் பேசும் விழியே வா!வா! - கவிதைக்
கலைவிரித்து வீசும் மொழியே வா!வா!
சிலைவடித்து மின்னும் அழகே வா!வா! - கூந்தல்
தலைமுடித்துப் பின்னும் அமுதே வா!வா!
                                        (நன்மொழி)

சிட்டழகு காட்டிச் சிந்தை புகுந்தாய்! - தேன்
மெட்டழகு மீட்டி விந்தை புரிந்தாய்!
கட்டழகு காட்டிக் கண்ணுள் நுழைந்தாய்! - இளம்
மொட்டழகு காட்டி மோகம் பொழிந்தாய்!
                                        (நன்மொழி)

உனையெண்ணித் பாடும் சொற்கள் இனிக்கும்! - நீ
உட்கார்ந்து செல்லும் கற்கள் மணக்கும்!
மனையெண்ணி ஆசைப் பூக்கள் சிரிக்கும்! - கூடும்
வினைபின்னி இளமை பாக்கள் விரிக்கும்!
                                        (நன்மொழி)

ஊற்றாகப் பொங்கும் உன்றன் நினைவு! - அன்பே
உறவாடிப் பொங்கும் காதல் கனவு!
ஆற்றாகப் பொங்கும் அகத்துள் உணர்வு! - கண்ணே
அமுதாகப் பொங்கும் அன்பின் புணர்வு!
                                        (நன்மொழி)

கூரியநுண் பார்வை அம்பாய்க் குத்தும்! - புது
வீரியமென் கூட்டில் விளைந்து முற்றும்!
சீரியநற் பணிகள் செழித்து நிற்கும்! - கலை
தேறியஎன் னெஞ்சம் திளைத்துச் சொக்கும்!
                                        (நன்மொழி)

பொன்னெழிலைக் கண்டு புலமை பெருகும்! - மனம்
மென்னடையைக் கண்டு வியந்து உருகும்!
அன்பமுதைக் கண்டு ஆடிப் பருகும்! - தினம்
உன்னுடலைக் கண்டு உயிரும் சொருகும்!
                                        (நன்மொழி)

21.05.2014

8 commentaires:

  1. ரசித்தேன்.... ஒவ்வொன்றும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. வணக்கம் !
    கற்கண்டுச் சொல்லெடுத்துக் கவிதை படைக்கும் நற் தொண்டு
    நிலைக்கும் உயர்ந்து ! வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
  3. சொல் விளையாட்டு...
    கவிதை
    அருமை..
    http://www.malartharu.org/2014/02/eppadiyum-sollalm-era-edwin.html

    RépondreSupprimer

  4. "சிட்டழகு காட்டிச் சிந்தை புகுந்தாய்! - தேன்
    மெட்டழகு மீட்டி விந்தை புரிந்தாய்!
    கட்டழகு காட்டிக் கண்ணுள் நுழைந்தாய்! - இளம்
    மொட்டழகு காட்டி மோகம் பொழிந்தாய்!" என
    அழகான இசைப்பா படித்தேன்.
    சிறந்த பாடல் பகிர்வு.

    RépondreSupprimer
  5. ஐயா வணக்கம்! படிகத்தூண்டும் கவிதை வரிகள்அருமை, அருமை.பகிர்விற்குநன்றி.

    RépondreSupprimer

  6. நன்மொழியாள் உம்மை நன்கே புரட்டியுள்ளாள்!
    பன்மொழி பலகலை பாவையவள் அறிந்தவளோ?
    இன்மொழி பேசியே இலகுவாய் உம்மைத்தன்
    கண்வழியே கவர்ந்து கலந்திருப்பள் கவனித்திரும்

    RépondreSupprimer
  7. பொங்கும்அழ கெங்கும்அவள் தங்கும்இட மாக
    தொங்கும்இள தெங்கின்சுவை அங்கேமொழி யாகும் !
    அங்கம்அதில் மங்கும்எனத் திங்கள்முகம் வேகும்!
    நங்கைஇவள் எங்காதலில் இங்கென்நினைவாகும்!

    RépondreSupprimer