lundi 12 mai 2014

அன்னை குறள்

 அன்னை குறள்


அன்பென்னும் சொல்லை அளித்தவள் அன்னை!இங்(கு)
இன்தேன் இணையோ இயம்பு?

அம்மா எனும்சொல்லே ஆனந்தம்! ஆனந்தம்!
இம்மா நிலத்தில்ஏ(து) ஈடு?

ஒருபிடிச் சோற்றையும் உண்ணென ஊட்டி
இருந்தாள் பசியால் இருண்டு!

என்னையே எண்ணி இருந்தவள்! என்மனனே
அன்னையே தெய்வமென ஆடு!

நான்வாழ வேண்டி நலந்தரும் கண்ணனிடம்
ஊன்வாடி நின்றாள் உறைந்து!

என்பிள்ளை.. என்பிள்ளை.. என்றோதும் அன்னையவள்
இன்சொல்லை எந்நாளும் ஏத்து!

நினைவுகள் குன்றும் நிலையடைந்தும் தன்சேய்க்
கனவுகள் காண்பாள் கமழ்ந்து!

தாய்நாடு தாய்மொழி என்றுரைத்தால் நம்முடைய
வாய்நாடும் இன்ப வளம்!

அயல்நாட்டில் வாழ்ந்தாலும் அன்னையின் எண்ணம்
துயர்ஓட்டிக் காக்கும் துணை!

என்னென் றுரைத்திடுவேன்? ஏதென் றெழுதிடுவேன்?
அன்னைச்சீர் ஆழ்கட லாம்!

11.05.2014

4 commentaires:

  1. அனைத்தும் அருமை ஐயா...

    அன்னையர் தின வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. வணக்கம் ஐயா !
    தங்களின் சிறப்பான குறள் கண்டு ரசித்தேன் வாழ்த்துக்கள் .

    RépondreSupprimer
  3. சிறந்த எண்ணங்களை
    குறள் வெணபாவில்
    அடுக்கியே
    அன்னையை எண்ண வைத்தீர்களே!

    RépondreSupprimer
  4. அன்னைக்குப் பத்து குறள்-தமிழ்
    அன்னைக்கும் ஏற்ற குறள்!
    என்னைக் கவர்ந்த குறள் - உள்
    இதயத்தில் வைத்த குறள்

    RépondreSupprimer