mercredi 17 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 77]




காதல் ஆயிரம் [பகுதி - 77]


756.
நீ..அமர்ந்த நன்னிடத்தில் நான்..அமர்ந்து இன்புற்றேன்
தீ..அமர்ந்த என்னெஞ்சம் தேரிடவே! - ஈ..அமா்ந்த
பூவழகு! என்னுள் புகுந்த நினைவழகு!
மூவழகு முத்தமிழே வா!

757.
உன்றன் உடையை உணர்வுகள் தொட்டுவக்கும்!
என்றன் உயிரே! இனியவளே! - என்றென்றும்
கற்பனைப் பூக்கள் கமழ்ந்தாட என்னவளே
நற்றுணை செய்வாய் நயந்து!

758
நோக்கு கலைகற்ற நுண்விழியோ! நீள்வடிவ
முக்கு! சுவையிதழ் முக்கனியோ! தாக்கியனைப்
பந்தாடும் பாவை! பசுந்தமிழ் கொண்டுள்ள
சிந்தாடும் பாவை சிரிப்பு!

759.
முழுநிலா கொண்ட முகத்தழகு என்னுள்  
பழுதிலாப் பாக்கள் படைக்கும் - பொழுதெலாம்
கண்முன் வளம்வரும் காரிகையே! கண்ணே..நீ
பெண்ணின் பெருமைப் பெருக்கு!

760.
இமைகளில் தந்திட்ட முத்தங்கள் கண்ணே!
எமையிங் கெழுந்திடச் செய்யா! -  உமையவள்போல்
ஒப்பில் அருளுள்ளம் கெண்டவளே! என்வாழ்வைத்
தப்பில் விழுந்திடத் தாங்கு!

(தொடரும்)

8 commentaires:

  1. காதலினிமை கூட்டுவது கவியா? சந்தத் தமிழா? கவியினிமை கூட்டுவது காதலா? கல்கண்டுத் தமிழாவென வாய்பிளந்து ரசித்து நிற்கிறேன். பாராட்டுகள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நனிநன்றி!

      சந்தத் தமிழ்மணக்க! தங்க உடல்மினுக்க!
      வந்த வளமதி வாழ்வானாள்! - சொந்தமெனத்
      தந்த கவிதைகள் தந்தத் தவிதைகள்!
      இந்த உலகே இணை!

      Supprimer
  2. வர்ணனையை மிகவும் ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள் பல...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்பனை மின்னும் கவிதைகளை யான்பாட
      நற்றுணை நல்கும் நறுந்தவத்தாள்! - கற்போர்தம்
      உள்ளம் களிப்படையும்! ஒப்பிலா ஓங்குதமிழ்
      வெள்ளம் பெருகும் விரைந்து!

      Supprimer
  3. ஈ..அமா்ந்த
    பூவழகு! என்னுள் புகுந்த நினைவழகு!
    மூவழகு முத்தமிழே வா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகுக்[கு] அழகூட்டி அன்னவளைப் பாட
      பொழுதுக்கும் இன்பம் பொழியும்! - பழகுதமிழ்
      கை..கூடும்! காதல் கலையொளிரும்! புத்தாண்டாம்
      தை..சூடும் இன்பம் தழைத்து!

      Supprimer
  4. ஐயா...மிகமிக அருமை!
    அழகழகாய்த் துள்ளிவிளையாடும் உங்கள் பா அழகு...

    வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!...

    கந்தத்தமிழணங்கு கனிந்திட்ட மொழியழகு
    சிந்தும் தேனெனவே பண்ணும்பாவழகு
    முந்திச்செய்திட்ட நம்நல்வினை தானழகு
    சந்தக்கவியே சாலச்சிறக்கும் உம்புகழழகே...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எல்லா அழகும் இனியவளின் முன்னமா்ந்து
      அல்லா எனவேண்டும்! அப்பப்பா! - பொல்லா
      அழகிற் புதைகின்றேன்! அன்னவளைக் கூடிப்
      பழகிப் புனைகின்றேன் பா!

      Supprimer