mardi 9 avril 2013

அடிமைத் தமிழன்                
நெஞ்சு பொறுக்க திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே

         தம்மக்களின் நிலை கண்டு மகாகவி பாரதியார் வடித்த கண்ணீர் அடிகள் இவை. தாய் நாட்டின் அடிமை விலங்கு உடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும், தமிழனின் அடிமைச் செயல்கள் ஒழியவே இல்லை. அயல்மொழி அடிமை, அயல் பண்பாட்டில் அடிமை, சொல்லடிமை, செயலடிமை, மத அடிமை, சாதி அடிமை, பொன்னடிமை, பொருளடிமை, பெண்ணடிமை, மண்ணடிமை என இவனின் அடிமைச் செயல்கள் தொடர்கின்றன.....

         உரிமை இழந்து வாழ்வதிலே சட்டையை உயர்த்திக் கொள்ளும் தமிழனைப் பார்க்கிறேன். மதம் என்னும் மதம் பிடித்துக் குலைகின்ற தமிழனைக் காண்கிறேன். அயல்மொழி மோகத்தில் தன்னிலை மறந்து தாழ்வுறும் தமிழனைப் பார்க்கிறேன். தான் யார்? தன் சீர் என்ன? என்பதை உணராமல் உறங்குகின்ற தமிழனைக் காண்கிறேன். நலங்கள் பலவற்றை தருகின்ற பிரான்சு நாட்டில் வாழ்கின்ற தமிழன் சுதந்தரமாக வாழாமல் அடிமையாய் வாழ்வதைப் பார்க்கிறேன்.

         ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவன் அந்த நிறுவனத்திற்குப் பற்றுடையவனாக இருப்பது வேறு, அடிமையாக இருப்பது வேறு, இவ்விரண்டு நிலைகளில் உள்ள வேறுபாட்டை உணருதல் வேண்டும். பற்றுடன் வேலை செய்யலாம், முதலாளிக்கு அடிமையாக வேலை செய்யக் கூடாது. அயலவர்களுக்கு அடிமையாக இருப்பதிலே பெருமை கொண்டு அடிமையிலும் அடிமையாகக் கிடக்கின்றான் தமிழன்.

         சட்டத்துக்கு மாறாகக் கடுமையான வேலை செய்தாலும் சரி, கொடுமையான வேலை செய்தாலும் சரி, செய்துவிட்டு எலும்புத் துண்டுகளுக்கு வால் ஆட்டுகிறான் தமிழன். அவனைப் பின்தொடர்ந்து வேலை செய்யும் அவன் இனத்தவர் அடிமை ஆக்கப்படுவார் என்பதை மறந்து தான் வாழ்ந்தால் போதும் எனத் தன்னலவாதியாக வாழ்கிறான். தான் வாழ அடுத்தவர் வாழ்வைக் கெடுப்பவனை மனிதனாக ஏற்க முடியாது. இங்கொன்றும் அங்கொன்றும் சொல்லித் தன் வாழ்வை உயர்த்திக் கொள்பவனை மனிதனாக ஏற்க முடியாது. உரிமை இழந்து அடிமையாய்  வாழ்வதில் மகிழ்கின்றவனை மனிதனாக ஏற்க முடியாது.

         அயன்மொழிகளைப் படித்துச் சிறப்புறுவது தவறன்று. எத்தனை மொழிகளை வேண்டுமானலும் ஒருவன் படிக்கலாம், தவறன்று. தாய்மொழியைக் கற்காமல் இருப்பது பெரும் தவறாகும். உலகிலேயே தாய்மொழியைக் கற்க விரும்பாமல் அயன் மொழியைக் கற்று மகிழும் இனமாகத் தமிழினம் இப்பொழுது தாழ்ந்து கிடக்கிறது. ஆங்கில மொழியின் அடிமையாக இருப்பதில் தமிழன் நெகிழ்கின்றான். தமிழகத்தில் தாய்மொழிக் கல்வியை எதிர்த்துத் தமிழனே நிற்கின்றான். அடுத்த தலைமுறையில் தமிழ்ப்பிள்ளைகள் தமிழைப் பேசுவார்களா? படிப்பார்களா? என்று ஐயுறும் அளவிற்குத் தமிழன் ஆங்கில அடிமையாய் வாழ்கின்றான். நாட்டு விடுதலை பெற்ற தமிழன், மொழி விடுதலை அடைதல் என்றோ? 

கம்பன் இதழ் 15.09.2002

13 commentaires:

 1. ஐயா...

  சாட்டைகொண்டு அடிக்கின்ற பதிவு.
  எத்தனை சொன்னாலும் சுய உணர்வுடன் முழு விருப்புடன் விளங்கிக்கொண்டு நடந்தாலொழிய விடிவில்லை.
  என்றுதான் இதற்கெல்லாம் விடிவு வருமோ?...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   வேட்டை நரிகள் விளையாடும் நம்முடைய
   நாட்டைத் திருத்திடவே நாம்எழுவோம்! - காட்டை
   நிகா்த்த காரிருளை நீக்கிடுவோம்! இன்பம்
   முகிழ்த்த தமிழை மொழிந்து!

   Supprimer
 2. ஓர் இனத்தை அழிப்பதற்கு செய்ய வேண்டிய முதல் வேலை, அதன் மொழியில் மற்ற மொழிச் சொற்களைக் கலந்து, கலந்து, சிறிது சிறிதாக அம் மொழியினைஅழிப்பதுதான் என்று சொல்வார்கள்.தமிழின் பெருமைமிகு படைப்புகள் எல்லாம், அறியமையின் விளைவாக, பழையன கழிதல் புதியன புகுதல் என்னும் பெயரில் தீக்கு இறையாக்கப் பட்டோ, ஆற்றில் விடப்பட்டோ அழிக்கப் பட்டு விட்டன. எஞ்சியவற்றை வைத்துக் கொண்டுதான் மொழியின் பெருமை பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கின்றேர்ம்.
  இன்று ஒற்றுமையின்றி சீர் குலைந்து கிடைப்பது தமிழினம்தான் அய்யா. என்று உணரப் போகின்றோமோ?

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   போ்குலைந்து போகும்! பிறந்த மொழிமறந்தால்
   சீா்குலைந்து போகும் சிறுத்து!

   Supprimer
 3. பிற மொழி அறிதல் தவறன்று, தாய்மொழி அறியாமையே இழுக்கென்னும் ஒரு வலிய செய்தியை எடுத்துரைத்தப் பதிவுக்குப் பாராட்டுகள் ஐயா.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இன்னிசை மின்னும் எழிற்றமிழ்போல் வேறுமொழி
   மண்மிசை உண்டே மணந்து!

   Supprimer
 4. தமிழ் மொழியை முழுமையாக புரிந்து படிக்கா விட்டால், வேறு எந்த மொழியையும் அறிந்து, தெரிந்து கொள்ளவே முடியும்... முழுமையாக புரிந்து கொள்வது மிகுந்த சிரமம் ஐயா...

  சிறப்பான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தாய்மொழி யாலே தழைத்தாடும் சிந்தனைகள்!
   சேய்மகிழ ஊட்டுவீா் சோ்த்து!

   Supprimer
 5. அயன்மொழிகளைப் படித்துச் சிறப்புறுவது தவறன்று. எத்தனை மொழிகளை வேண்டுமானலும் ஒருவன் படிக்கலாம், தவறன்று. தாய்மொழியைக் கற்காமல் இருப்பது பெரும் தவறாகும். //

  இந்த உண்மையை யார் அறிவார் ?

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சங்கெடுத்து ஊதிநாம் சாற்றித் திரிந்தாலும்
   இங்கெடுத்து கேட்பார் இலை!

   Supprimer
 6. நாட்டு விடுதலை பெற்ற தமிழன், மொழி விடுதலை அடைதல் என்றோ?

  ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது. இதற்கு மாற்று மருந்து என்னவோ ? அவரவர் உணர வேண்டும்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   அடிமைச் செயலகற்றி வாழ்கின்ற நாளே
   குடிமை விடுதலையாம் கொள்!

   Supprimer

 7. வணக்கம்

  இன்றமிழ்த் தேன்பருக என்வலை வந்தவா்க்கு
  மென்றமி ழாலே விளைக்கின்றேன் - என்நன்றி!
  நம்மின் தமிழ்உயர நன்றே உழைத்திடுவோம்!
  நம்..மின் வலையில் நடந்து!

  RépondreSupprimer