samedi 6 avril 2013

ஒற்றுமை ஓங்கட்டும்ஒற்றுமை ஓங்கட்டும்
                         
   தமிழர்கள் தமக்கு ஏற்படும் துயர்நிலையை அறிந்தும் அறியாதவர்கள்போல் வாழ்கின்றார்கள். தம்மினத்தவரை வேறு இனத்தவர் தூற்றுவதைக் கேட்டும் கேட்காதவர்போல் இருக்கின்றார்கள். தம்மினத்தவரை வேறு இனத்தவர் தாக்குவதைப் பார்த்தும் பார்க்காதவர்போல் செல்கின்றார்கள். இனத்தின் பண்பாட்டைக் காக்காமல், தாய்மொழியின் செம்மையை எண்ணாமல், ஒற்றுமையை நாடாமல், பிறந்த நாட்டின் மேன்மையைப் போற்றாமல், மனித நேயத்தை ஏற்காமல், தன்னலப் போக்கில் வாழ்வை அமைத்து, ஆணவச் சேறாம் குளத்தில் குளித்து, சாதியெனும் முள் அணியை அணிந்து, இறைவன் பெயரால் வேற்றுமையை விளைத்து வாழ்ந்து வரும் தமிழர்களைக் காணும் பொழுதெல்லாம்

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலேகொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு

கோடியென் றால்அது பெரிதாமோ?

என்னும் மகாகவி பாரதியின் பாடல் நெஞ்சைத் தாக்கும்தமிழர்களிடத்தில் ஏன் ஒற்றுமை இல்லையெனும் கேள்வியை எழுப்பினால், ''அது தமிழர்களின் தலையெழுத்து'' என்னும் பதிலே தரப்படுகிறது. நம் முன்னோர்கள் ஒற்றுமைக்காகப் பல பாடல்களைப் பாடி வைத்தது, பிற்காலத்தில் தமிழர்கள் ஒற்றுமை இழந்து வாழ்வார்கள் என்ற காரணத்தாலோ என எண்ணத் தோன்றுகிறது.

ஓர்ஆளுக் கோர்அமைப்பு வைத்திருக்க வேண்டும்

ஒவ்வொருவ ரும்தலைவர் ஆகிவிட வேண்டும்

பேர்படங்கள் நாளிதழில் வந்துவிட வேண்டும்

பேச்சென்றால் நேரத்தை மறந்துவிட வேண்டும் 

சார்,பட்,சோ, . கே, ப்ளீசு தாங்க்சு,என்னும் சொற்கள்

தமிழ்ப்பேச்சின் இடையினிலே கலந்துவர வேண்டும்

யார் கால் கை பிடித்தேனும் வாழ்ந்துவிட வேண்டும்

என்று பாடிய முனைவர் இரா. திருமுருகனாரின் விருத்தப்பாடல் இன்றைய தமிழரின் நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. நான் தலைவன், நீ செயலாளன், அவன் பொருளாளன் என்ற நிலையில் பிரான்சில் பல அமைப்புகள் நின்று விடுகின்றன. தங்களுக்குள் உள்ள பிரிவினையால் சில அமைப்புகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன.

   தாய்மொழிக்கும் இனத்திற்கும், வாழ்கின்ற மண்ணிற்கும் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்துச் செயல் பட்டால் எதிர்காலம் நம்மை வாழ்த்தும்இல்லையெனில் தூற்றும்!

   ஒற்றுமை மனித இனத்தின் முதுகெலும்பு! உயிர்களைச் செழிக்கச் செய்யும் வான்மழை! உலகை அழிவில் இருந்து காக்கும் நல்மருந்து! திகட்டா இனிக்கும் தீங்கனி! உடலின் கவசமாய்க் கொள்ள வேண்டிய உயர் அணி!

ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

என்பதை உணர்ந்தால் வாழ்க்கை உயரும்! நாளைய உலகம் நம்மைப் புகழும்தன்னலப் பகைமை, நற்செயல்களுக்கு உதவாமை, கற்றோர் சொலலை ஏற்காமை, இனத்தின் உயர்வை எண்ணாமை, மொழியைக் காவாமை ஆகிய செயற்பாட்டுத் தவறுகளை நீக்கி, திருத்தமுறச் செயல் பட்டால் தமிழினம் தழைத்தோங்கும்!

   ஒற்றுமையை நாடுகவே! ஒண்டமிழைப் போற்றுகவே!!

6 commentaires:

 1. எந்த விசயத்தில் அய்யா, தமிழன் ஒன்று பட்டு குரல் கொடுத்துள்ளான்ஒருமைப்பாடு என்பது வெறும் ஏட்டில் உள்ள எழுத்தாகவல்லவா மாறிவிட்டது. இன்னிலை என்று மாறுமோ?

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   தன்னலம் போக்கைத் தகா்த்திட்டால் செந்தமிழன்
   பொன்னலம் காண்பான் பொலிந்து

   Supprimer
 2. சரியாகச் சொன்னீர்கள்... அவரவர் உணர வேண்டிய கருத்துக்கள் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இங்கே தமிழா் இணைந்து செயற்பட்டால்
   பொங்கும் இனிமை பொலிந்து!

   Supprimer
 3. வணக்கம் ஐயா...

  நன்றே சொன்னீர்கள். தன்னலமும், ஒற்றுமைக்குறைவும் நிறைந்தே இன்றைய எம் இனத்தவரின் வாழ்கையாகி மீளும்தன்மை இழந்து சாபக்கேடாகிக் கிடக்கின்றது.

  பெரியவர்கள் தம்மை வழிப்படுதினால் ஒற்றுமையைப் பேணினால் இளையோர் விழித்துக்கொள்ளுவார்கள். நல்வழிகளைப் பின்பற்றுவார்கள்.
  ஆக வழிநடத்துவோர் கையிலும் வழிநடப்போர் தன்மை இருக்கின்றது.

  நல்ல பதிவும் பகிர்வும். மிக்க நன்றி ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   வழிநடத்தும் ஆற்றல் மதியொளி ஏற்ற
   வழிநடப்போர் காண்பார் வளம்!

   Supprimer