samedi 13 avril 2013

ஆசைக்கு உண்டோ அளவு!ஆசைக்கு உண்டோ அளவு!

     போதிமரத்துத் தத்துவ ஞானி புத்தர் ''ஆசையே அழிவுக்குக் காரணம்'' என்றுரைத்தார். நம் முன்னோர் ''பேராசையே பெரும் நட்டம்'' எனப்பகர்ந்தார். ஆசை இல்லாத மனிதன் உண்டா? ஆசை இல்லாமல் வாழ முடியுமா? பட்டம், பதவி, புகழ், பொன், பொருள் இவைமேல் நாம் கொண்டுள ஆசையை நீக்க முடியுமா? ஆசைதான் வாழ்க்கையைத் தொடங்குகிறது, இயக்குகிறது, முடிக்கிறது.

            மண்ணாசையால் நடந்த அழிவைக் காட்டுவது மகாபாரதம். பெண்ணாசையால் நடந்த விளைவைக் காட்டுவது இராமாயணம்.

            நாடுகளைப் பிடிப்பதிலே பேராசை பிடித்த ''இட்லர்'' எங்கே இறந்தான் என்பது உலகுக்குத் தெரியவில்லை. மதவாதிகளின் பேராசையால் உலகம் பலமுறை தலை குனிந்திருக்கிறது.

            பேராசை ஆட்சியைக் கலைத்திருக்கிறது. பெற்ற புகழைக் குலைத்திருக்கிறது. தவறுகளையும், கொடுமைகளையும், பாவங்களையும் செய்யப் பணித்திருக்கிறது. மனிதனை விலங்காய் மாற்றி இருக்கிறது.

            ஆசையின் எல்லை எது? ஆசையின் இலக்கணம் என்ன? ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவன் மிதிவண்டியில் செல்ல ஆசைப்படுவான். மிதிவண்டி கிடைத்ததும் சிறிய மோட்டார் வண்டியின் மீது ஆசைப்படுவான். மோட்டார் வண்டி கிடைத்ததும். பெரிய மோட்டார் வண்டியின் மீது ஆசைப்படுவான். பெரியது கிடைத்ததும் மகிழுந்திவின்(கார்) மீது ஆசைப்படுவான். அது கிடைத்ததும் வெளிநாட்டு மகிழுந்திவின் மீது ஆசைப்படுவான். இப்படி முற்றுப் பெறாமல் வளர்ந்து கொண்டே எல்லை இல்லாமல் செல்வதுதான் ஆசையின் இலக்கணம்.       

     மனிதப் பிறவியின் நோக்கம் ''பிறப்பில்லாப் பெரும் நிலையை அடைவதுதான்'' என்று மொழிகிறது இறையியல். இந்நிலையை அடையவிடாமல் எல்லா உயிர்களிடமும் எல்லா காலமும் தோன்றி முளைக்கும் விதையாகும் ஆசை!

     தீமை விளைக்கும் ஆசைகளை நீக்கி வாழ்வதற்கு ஈடாகச் செல்வம் வேறில்லை! தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவர். முற்றும் துறவாதார் தூய துறவியாக மாட்டார். ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குப் காரணமாக இருப்பது ஆசையே! பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தால் கெடாமல் வாழ்வதற்குறிய நிலை வாய்க்கும். ஆசை இல்லாதவனுக்குத் துன்பம் இல்லை. ஆசை உண்டானால் அதைத் தொடர்ந்து துன்பம் மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கும். இக்கருத்துக்களை வள்ளுவரின் பொதுமறை நமக்கு உணர்த்துகிறது.

     ஆசையற்றவன் தன் மனத்தைக் கட்டுப்படுத்தலாம். தன் உறவினர்களை மகிழ்விக்கலாம். ஊரை வாழ்விக்கலாம். எல்லா உலகத்தையும் தனக்கு அடிமை யாக்கிக் கொள்ளலாம் என்று நீதி வெண்பா கூறுகிறது.

                     ஆசைக்கு அடியான் அகில லோகத்தினுக்கும் 
                     ஆசற்ற நல்லடியான் ஆவானே - ஆசை
                     தனையடிமை கொண்டவனே தப்பாது உலகம்
                     தனையடிமை கொண்டவனே தான்
                                                                                                              நீதி வெண்பா- 12
ஆசைக்கு அடிமையானவன் எல்லா உலகங்களுக்கும் அடிமையாவான்.   ஆசையற்றவன் உலகத்தை வெல்வான்.

     ஆசையின் தூண்டுதலால் வரவுக்கு மீறிய செலவுகளைச் செய்து வருந்துகிறோம், ''வட்டிக்கு வாங்கி அட்டிகை செய்து அட்டிகையை விற்று வட்டியைக் கொடுத்தானாம்''. என்ற பழமொழியை உணராமல் வாழ்கின்றவர்கள் இன்றும் உண்டு. தன்னிலை அறியாமல் கடன் வாங்கி வீடு கட்டுவார், பின் கடனை அடைக்க முடியாமல் கடன் கொடுத்தவரிடம் வீட்டைக் கொடுத்துவிட்டுத் தெருவில் நின்றவர்களை நான் பார்த்திருக்கிறேன். 

மண்ணாசை

     குசராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டால் தமிழ்நாட்டில் காணிக்கல்கள் இடம் மாற்றம் என்று நகைச்சுவையாக எழுதும் அளவிற்கு மண்ணாசை மக்கள் மனத்தில் நிறைந்துள்ளது. வயல் வரப்புச் சண்டையிலும், வீட்டு வேலிச் சண்டையிலும் வெட்டிக் கொண்டு மாய்ந்தவர்கள் உண்டு. அடுத்தவர் மண்ணைத் தன் மண்ணாக ஆக்கிக்கொள்ள இழிச்செயல் புரிந்தவர்கள் உண்டு, கண் கவரும் கட்டடங்களைத் தன் சொத்தாக மாற்றிக்கொண்ட அரசியல்வாதிகள் உண்டு, பூட்டி இருக்கும் வீடுகளைக் கட்சி மன்றமாகவும், தன் சொத்தாகவும் மாற்றிக்கொண்ட கொடியவர்கள் உண்டு, கோயில் மண்ணை மறைத்துக்கொண்ட தீயவர்கள் உண்டு, அரசின் சொத்தை வளைத்துக்கொண்ட கன்னெஞ்சர்கள் உண்டு, ஏழைகளுக்கு வழங்கும் விலையில்லா மனைகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்ட பேராசை நரிகள் உண்டு. 

     நாட்டின் எல்லைப் பகுதிகளைப் பிடிப்பதிலும், நாட்டைப் பிடிப்பதிலும் இவ்வுலகில் ஏற்பட்ட இழப்புகள் சொல்லில் அடங்கா, அயலவர்களின் படையெடுப்பால் இந்தியா அடைந்த கொடுமைகள் எண்ணில் அடங்கா, இந்திய வரலாற்றில் அசோகரின் ஆட்சி பொற்காலமாகப் போற்றப்படுவதுபோல், அவருடைய படையெடுப்பால் விளைந்த இழப்புகளும் சொல்லப்படுகின்றன.

     மண்ணுக்காகத் தந்தையை எதிர்த்து நிற்கும் பிள்ளையையும், மண்ணுக்காக அண்ணனை எதிர்த்து நிற்கும் தம்பியையும், மண்ணுக்காக உடன்பிறந்தாரை எதிர்த்து நிற்கும் சகோதரிகளையும் எப்படித் திருத்துவதோ? தன் மனைக்குப் பக்கத்தில் உள்ள மனையின் உரிமையாளர் அயல் நாட்டில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு, அடுத்தவர் மனையிலும் வீட்டைக் கட்டிக் கொள்ளும் கயவர்களை எப்படித் திருத்துவதோ?

     நாட்டையும் வீட்டையும் ஏமாற்றி, ஊரையும் உறவையும் ஏமாற்றி, நண்பரையும் நம்பியவரையும் ஏமாற்றிச் சேர்த்திடுவார் சொத்து! ஏமாற்றிச் சேர்த்த சொத்துக்களை அவர்தம் பிள்ளைகள் ஆள முடியாமல் இருப்பதையும் வீணாக அழித்து அழிவதையும் காண்கின்றேன்.

     ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா! என்பதை உணர்ந்தால் மண்மீது உண்டாகும் பேராசை நீங்கும். மனிதநேயம் ஓங்கும்.       
                                              
பெண்ணாசை

                                                பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோhர்க்கு
                                                அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

            மற்றவர் மனைவியை எண்ணாத ஆண்தகமை, சால்புடையார்க்கு அறனாகவும், நிரம்பிய ஒழுக்கமாகவும் திகழும். அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தவரிடத்தில் பிறர் மனையாளை விரும்புகின்ற அறியாமை இருக்காது.

            நம்பியவருடைய மனைவியிடத்தே விருப்பம் கொண்டு தீமையைச் செய்து நடப்பவர், உயிரோடு இருப்பினும் இறந்தவரே யாவர்.

            இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன் எப்போதும் அழியாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான். பகை, பாவம், அச்சம், பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் அவனைவிட்டு நீங்காவாம்.

            காம மயக்கத்தால் நெறி தவறி வாழ்பவன் முன்னோர்தம் பெருமையை இழப்பான். புகழை இழப்பான். பொருளை இழப்பான். முடிவில் வாழ்க்கையே இழப்பான்.

            கல்லூரி மாணவன் தீய படங்களைப் பார்த்தும், வேண்டாத நூல்களைப் படித்தும் காமம் தலைக்கேறிப் பாதை மாறிச் சென்றதால் கல்வி இழந்து, உடல் மெலிந்து, உள்ளம் தளர்ந்து வாடுவதை என்னென்பேன்.

            நெறி தவறி இளம் வயதில் பெறுகின்ற இன்பத்தை, முதுமையில் அழுது கழிக்க வேண்டும். பெண்ணாசை கொண்டு இளமையில் செய்த பாவத்தால் முதுமையில் துன்புறுவதையும் அவரின் பிள்ளைகள் பாவத்தை அனுபவிப்பகதையும் யான் பார்த்திருக்கிறேன். பாவியாகிய அவன் பல பெண்களை நாடினான். அவளின் மகன் கட்டிய தன் மனைவிடம் வாழ முடியாமல் இருக்கின்றான். அவனின் இரண்டாவது மகனின் மனைவிக்கு நோய், அதனால் உறவின்றி வாழ்கின்றனர். அவனின் மகளோ மனமுடிவு பெற்று விட்டில் நிற்கின்றாள். முன் செய்த பாவம், பின்னே தன்னையும் தன் பிள்ளைகளையும் தாக்கும் என்பது உண்மை.

            தன்னை நம்பி வந்த மனைவிக்கும், பிள்ளைக்கும் தீங்கிழைக்கும் செயலாம் விலைமாதுவை நாடுதல், மனைவி துயர்க்கடலில் ஆழ, பிள்ளைகள் நடுத்தெருவில் நிற்க, தந்தை தாய் தலை குனிய, உறவினர் தூற்ற, ஊரார் இழிந்து பேச, மதிப்புக் குன்றி, மானம் போக வாழ்வது வாழ்வா?

            நெறி தவறிச் செய்யும் செயல்கள் இன்று சரியென்று தோன்றும், நாளை தவறு எனப் புரியும் பின்னே வருந்திப் பயனில்லை. எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதை உணர்ந்து வாழ்தல் வேண்டும்.

            தவறுகளைத் தட்டிக் கேட்பவர் யார்? கேட்பதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? எனக் கூறித் தவறுகளைத் தொடர்ந்து செய்பவனின் செயல் ஒருநாள் அடங்கும். துயரம் தொடங்கும.; மனிதராய்ப் பிறத்தல் அரிது மனிதப் மாண்பை உணராமல் பாவத்தைச் செய்து உழலுவதோ? காம மயக்கத்தில் காலத்தைக் கழிப்பதோ? அறிவை இழந்து அழிவை நாடுவதே? 

            மனிதப் பிறவியின் நோக்கம் என்ன? எதற்காகப் பிறந்தோம் என்பதை உணர்ந்தால் வாழ்க்கை புரியும்! வாழும் வழிகள் தெரியும்.

கம்பன் இதழ் 15.11.2001

11 commentaires:

 1. சிந்திக்க வைக்கும் கருத்க்க்கள் ஐயா!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   காசைக் கடவுளாய்க் கட்டிக் களித்திடும்
   ஆசை அறுமின்! அரும்புகழ் - ஓசைக்[கு]
   அடிமை அடைவதுவோ! ஆன்மத் தெளிவுற்று
   மிடிமை அகற்றுக மீண்டு!

   Supprimer
 2. ஆசை பேராசையாய் உருவெடுக்கும்போது உண்டாகும் சீர்கேடுகள் பற்றிய அருமையான அலசலுக்குப் பாராட்டுகள் ஐயா.

  பொதுவாக மனிதருக்கு ஆசை இருக்கலாம். ஆசை இல்லாவிடில் வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படுவது எங்ஙனம்? ஆனால் பேராசைகளோ, வரம்பு மீறிய ஆசைகளோ கூடவே கூடாது. தன் மனைவி மக்கள் மீது ஆசை வைக்காதவனால் இல்லற வாழ்க்கை இனிக்காது. தன் நாட்டின் மீது ஆசை (பற்று) வைக்காதவனால் நாடு வளம் பெறாது. அளவுக்குள் அடங்கிய நியாயமான ஆசைகளே நம்மை வாழ்விக்கின்றன என்பது என் கருத்து.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   நல்ல கருத்தை நயமுறத் தந்துள்ளீா்!
   வல்ல மனத்தை வணங்குகிறேன்! - எல்லாத்
   துயருக்கும் ஆசையே துாண்டுகோல்!ஆன்ம
   உயா்வுக்குத் நாளும் உழை!

   Supprimer
 3. அருமை... விரிவான விளக்கம்... அவரவர் உணர வேண்டிய பல கருத்துக்கள்...

  எனது சிறிய அலசல்... நேரம் கிடைப்பின் வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்... தங்களின் கருத்துரைக்காக :

  http://dindiguldhanabalan.blogspot.com/2011/11/blog-post_14.html (மனிதனுக்கு கடைசி வரை இருக்கும் குணம் என்ன?)

  நன்றி ஐயா...

  தொடர வாழ்த்துக்கள்...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஊசை எடுத்தே உருகும் பொருளுக்கும்
   ஆசை எடுத்தே அழிகின்றீா்! - பூசைக்கு
   நின்றாளும் போடும் நெடுங்கணக்கு! பேராசை
   எந்நாளும் தீரா இடா்!

   Supprimer
 4. வணக்கம் ஐயா!
  இன்று நல்லதொரு விடயம்...

  ”ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசரோடாயினும் ஆசை அறுமின்”

  இதைமட்டுமே நினைக்கத்தோன்றுகிறது.
  அருமையான பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி!

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   ஆசை அறுத்திடுவீா் ஆசை அறுத்திடுவீா்!
   ஈசரோ டாயினும் ஆசை அறுத்திடுவீா்!
   துாய நெறியுணா்ந்தால் துன்பம் புகுந்திடுமோ?
   மாயம் அகலும் மறைந்து!

   Supprimer
 5. சிந்திக்க வைக்கம் பதிவு அய்யா.தங்களுக்கம், தங்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பிரான்சு வாழ் தமிழர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அய்யா

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   மண்ணாசை நீக்கி மதியுறுக! துன்பூறும்
   பெண்ணாசை நீக்கிப் பிழைப்புறுக! - பொன்னாசை
   பொல்லாப் பொருளாசை பொங்கும் புகழாசை
   எல்லாம் இடுப்பை இடும்

   Supprimer
 6. " ஆசை அறுத்தல் " என்பது முற்றிலும் முடியுமா ? பூமியில் பச்சிளம் சிசுவாய் பிறந்தலிருந்து பற்கள் இழந்து கூன் கண்ட கிழவனாபிறகும், இறுதிமூச்சுவரை ஏதோவொரு ஆசைக்கு அட்பட்டுதான் வாழ்ந்து மடிகிறான் மனிதன் ! முற்றும் துறந்த முனிக்கும் மூலத்தை அடைய ஆசைதானே ? கடல் கடந்த தேசத்திலும் தமிழ் கவிதையே மூச்சாய் வாழ நீங்கள் ஆசைப்படுவதை தீதென கூற முடியுமா ? !

  ஆசை என்ற நிலை எப்பாடுபட்டாவது, எதை செய்தாவது அடைந்தே தீரவேண்டும் என்ற பேராசையாய் மாறும்போதுதான் பிரச்சனை !

  ஆசை நம்மை அழித்துவிடாமல் தாமரை இலை தண்ணீராய் வாழ வழி... கண்ணபிரானின் போதனை தான் ! கடமையை செய் ! பலனை எதிர்பார்க்காதே !!

  நன்றி

  எனது வலைப்பூ : http://saamaaniyan.blogspot.fr/

  RépondreSupprimer