lundi 22 avril 2013

இயற்கையைப் பாடுவோம்!
ஞாயிறு

ஈரோட்டுப் புகழ்ப்பெரியார்! தமிழர் நாட்டின்
       இருளழித்த ஞாயிறென உரைப்பேன்! நன்றே
சீர்தீட்டிச் செந்தமிழின் சிறப்பைச் சென்ன
       பாவாணர் மொழிஞாயி(று) என்பேன்! இங்கே
கூர்ஈட்டிக் கவிபடைத்த கொள்கை வீரர்
       பாரதியார் அருங்கவிதைப் பரிதி என்பேன்!
பாராட்டித் தமிழினத்தின் மேன்மை தந்தேன்!
       படுத்துறங்கும் தமிழரெலாம் விழித்தல் என்றோ?

நிலவு

நிலவெனும் தலைப்பினிலே கவிதை பாட
       நினைத்தவுடன் அவள்முகமே என்முன் மின்னும்!
குளமென்றும் வயலென்றும் கோயில் என்றும்
       கூடிமனம் பேசியநாள் நெஞ்சுள் மின்னும்!
உளம்பின்னும் ஆசையினால் அவளின் பின்னே
       ஓடுகின்ற நாயானேன்! ஊரார் எம்மின்
குலமென்ன கோத்திரமும் என்ன? என்று
       குறுக்கிட்டே எமைப்பிரித்தார்! ஐயோ! ஐயோ!

வெண்ணிலவே! உன்னைப்போல் என்றன் நெஞ்சம்
       வெண்மையடி! உண்மையடி! அதனால் அன்றோ
தண்ணிலவே! வாழ்வோங்கும் புகழைப் பெற்றேன்!
       தந்நலத்தைத் தலைசூடி வாழும் சில்லோர்
விண்ணிலவே! எனைச்சாய்க்க ஒன்றதாய்க் கூடி
       வினைசெய்தார்! பகையழித்து வெற்றி சூடிப்
பொன்னிலவே! புத்துலகை இங்கே செய்வேன்!
       பூந்தமிழை அரசாள வைப்பேன் யானே!

தென்றல்

சோலையிலே சுற்றிவரும் தென்றல்! வண்ண
       சுடர்தமிழ்போல் ஓடிவரும் தென்றல்! இன்ப
மாலையிலே மயக்கவரும் தென்றல்! காதல்
       மங்கைதரும் நல்லுறவைக் கூட்டும் தென்றல்!
காலையிலே எனையெழுப்பும் தென்றல்! காட்டுக்
       கழனியெலாம் பாட்டொளிரக் கமழும் தென்றல்!
பாலையில் வீசுதடி தென்றல்! வல்ல
       பாவலரின் கற்பனைபோல் படரும் தென்றல்!

மழை

அன்பென்னும் மழைபொழிந்தால் பகைதான் உண்டோ?
       அறிவென்னும் மழைபொழிந்தால் துயர்தான் உண்டோ?
பண்பென்னும் மழைபொழிந்தால் சிறுமை உண்டோ?
       பண்ணென்னும் மழைபொழிந்தால் துன்பம் உண்டோ?
இன்பென்னும் மழைபொழிந்தால் ஆட்டம் போட்டே
       எளியவரை வதைப்பவர்கள் நிலைத்தல் உண்டோ?
துன்பென்னும் மழைபொழிந்தால், துணிவை ஏந்தித்
       தொடர்ந்துநீ போராடு; தோல்வி உண்டோ?

13 commentaires:

 1. அன்பென்னும் மழைபொழிந்தால் பகைதான் உண்டோ?
  அறிவென்னும் மழைபொழிந்தால் துயர்தான் உண்டோ?
  பண்பென்னும் மழைபொழிந்தால் சிறுமை உண்டோ?
  பண்ணென்னும் மழைபொழிந்தால் துன்பம் உண்டோ?
  இன்பென்னும் மழைபொழிந்தால் ஆட்டம் போட்டே
  எளியவரை வதைப்பவர்கள் நிலைத்தல் உண்டோ?
  துன்பென்னும் மழைபொழிந்தால், துணிவை ஏந்தித்
  தொடர்ந்துநீ போராடு; தோல்வி உண்டோ?

  மனம் கவர்ந்த வரிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா !

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்

   மழைபோல் பொழிந்தேன் மனம்நிறை நன்றி!
   குழல்போல் இனிமை குழைத்து!

   Supprimer
 2. அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

  மழையுடன் கூடிய தென்றல் மிகவும் பிடித்தது...

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   மழையில் நனைந்து மணத்தென்றல் தொட்டு
   நுழைந்தீா் இனிமை நுவன்று!

   Supprimer
 3. இயற்கையை அருமையாகப் படம் பிடித்த
  இனிய கவிதைகளுகுப் பாராட்டுக்கள்..

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இயற்கைச் சிரிப்பில் எழுதிய பாக்கள்
   உயா்..கை கொடுத்த ஒளி!

   Supprimer
 4. ஐயா... அழகிய கவிகள்! அருமையாக இருக்கின்றது.
  என் வணக்கமும் வாழ்த்துக்களும்!

  இயம்பிய கவிதன்னில் இயற்கையதன்
  இனிதாக அதன்வளங்கள் குணத்தினொடு
  பலவேறு சொற்களாலேபாவியற்றியே
  பருகத்தந்த தமிழமுதம் பரிமளத்தேனே...

  த.ம. 4

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   இளமதி தந்த எழுத்துக்கள் என்றன்
   உளமதில் நிற்கும் ஒளிர்ந்து!

   Supprimer
 5. ஞாயிறு, நிலவு, மழை, தென்றல் இதமாக வருடிச்சென்ற வரிகள் இன்பத்தை கொடுக்கும் சந்தம்.

  RépondreSupprimer
  Réponses

  1. வணக்கம்!

   சசிகலா தந்த தமிழ்கண்டேன்! வானின்
   மதியுலா தத்த மகிழ்வு!

   Supprimer

 6. மின்வலை உறவுகளுக்கு வணக்கம்

  இன்று வருகைதந்த இன்றமிழ் அன்பருக்கு
  நன்று பகன்றேன் நயந்து!

  RépondreSupprimer
 7. வணக்கம்
  இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட…இதோ.
  http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_16.html?showComment=1381898980443#c4078958374580460760
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்

  RépondreSupprimer
 8. தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில்

  http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_16.html

  RépondreSupprimer