samedi 8 septembre 2012

நல்லதமிழ் [பகுதி - 2]




கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது

            கடை அருகாமையில் இருக்கிறது என்ற அடி தவறாகும். கடை அருகில் இருக்கிறது என்ற அடியே சரியாகும்.

பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்

            பொம்மை செய்ய முயற்சித்தான் என்று எழுதுவது தவறாகும். முயற்சித்தல் என்ற சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுதல் சரியாகும்.

அலமேல் மங்கை - அலர்மேல் மங்கை

            அலர்மேல் மங்கை என்று வருவதே சரியாகும். (அலர் : பூ ) பூவின் மேல் அமர்ந்திருக்கின்ற மங்கை

நாட்கள் - நாள்கள்

   கால்கள் என்ற சொல்லைக் காற்கள் என்று எழுதுவதில்லை. எனவே நாட்கள், நூற்கள், தொழிற்கள,; ஆகிய சொற்களை நாள்கள், நூல்கள், தொழில்கள்; எனறே எழுதுக.

எந்தன் - என்றன்

            எந்தன் என்று எழுதுவது தவறாகும். என்  தன்  என்றன் என்று புணரும். (என் - ஒருமை, தன் - ஒருமை,) எம்  தம்  எந்தம் என்று புணரும். (எம் - பன்மை, தம் - பன்மை,) எந்தன் என்பதில் (எம் - பன்மை, தன் - ஒருமை, இது தவறான புணர்ச்சியாகும்

சாற்றுக்கவி - சாற்றுகவி

            சாற்றுக்கவி என்று 'க்' மிகுத்து எழுதுதல் தவறாகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும். ஆனால் சாற்றுகவி என்பது வினைத் தொகையாகும், வினைத் தொகையில் வல்லினம் மிகா, வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து வினைத்தொகையாக வந்தால் வல்லினம் மிகாமல் எழுதுதல் மரபாகும். பாரதியார் எழுதிய விநாயகர் நான்மணி மாலையில் முதலடியில் 'பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்'  என மிகாமல் இருப்பதைக் காண்க.

கொக்குப் பறந்தது - கொக்கு பறந்தது

            கொக்கு என்ற சொல் வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.  வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும்.  வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து எழுவாய்த் தொடராக வந்தால் வல்லினம் மிகா. கொக்கு பறந்தது என்பது எழுவாய்த் தொடராகும். ஏனவே கொக்குப் பறந்தது என எழுதுதல் தவறாகும்.

பாப் படைத்தான் - பா படைத்தான்

            ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும். (தீச்சுடர், நாப்பழக்கம்,) ''பா'' ஓரெழுத்து ஒரு மொழிதான், ஆனால் பா படைத்தான் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகா. ஓரெழுத்து ஒரு மொழியாக இருந்து, இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரின், வல்லினம் மிகா. எனவே பாபடைத்தான் என்பதே சரியாகும்.


வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்

            வறுமைகளை ஒழிப்போம் என்பது தவறாகும். வறுமையை ஒழிப்போம் என்று எழுதுக. (வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது, (புல், நீர் தாகம், ஆகியவற்றிற்கும் பன்மை கிடையாது) ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும், ஆடுகள் புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறாகும், பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்பது சரியாகும். நண்பர்களின் தாகங்களை நீக்கினேன என்பது தவறாகும,; நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.

மனதை - மனத்தை

            மனதை என்று எழுதுவது தவறாகும். மனம்    மனத்தை என்றே வரும். பணம்    பணத்தை என்றே வரும். பணதை என்று வாரா.. தனம், வனம், சினம், கனம், இனம், குணம், பிணம்,  ஆகிய சொற்களுடன் சேர்ந்தால் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, குணத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும். தனதை, வனதை, இனதை, குணதை,,, என எழுதமாட்டோம். எனவே மனத்தை என்று எழுதுக
                                                             (தொடரும்)

6 commentaires:

  1. ஒவ்வொன்றையும் அருமையாக விளக்கத்துடன் கொடுத்து உள்ளீர்கள்... மற்ற சில பதிவுகளைப் படித்தேன்... படிக்க படிக்க ஆவல் கூடுகிறது... நேரம் கிடைப்பின் மற்ற பதிவுகளையும் படிக்க வேண்டும்...

    என் தளத்தில் இட்ட கருத்துரை மூலம், தங்களின் தளம் அறிய முடிந்தது... மிக்க மகிழ்ச்சி... உங்கள் தளத்தில் Follower ஆகி விட்டேன்… இனி தொடர்வேன்…

    தங்களின் கருத்து எனக்கு ஆசீர்வாதம்... மிக்க நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      திண்டுக்கல் வாழும் தனபாலன் நல்வரவைக்
      கொண்டாடும் நெஞ்சம் குளிா்ந்து!

      Supprimer
  2. நன்று இரண்டாவதும் படித்து அறிந்தேன்.
    மனதை மகிழச் செய்தது.- தவறு
    மனத்தை மகிழச் செய்தது.
    மனத்தை மகிழ்வித்தது.
    மனம் மகிழச் செய்தது.

    சரியன்றோ?
    வேதா. இலங்காதிலகம்.

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      இரண்டாம் தொடரை இனிதே படித்தீர்!
      கரங்கள் குவித்தேன் கனிந்து!

      Supprimer

  3. நல்ல தமிழ்படைக்கும் வல்ல கவிவாணர்!
    வெல்லச் சுவையினை விஞ்சுபவா்! - அல்லிமலர்க்
    காடாக உள்ளம் கமழ்பவர்! இன்றாதை
    ஏடாகத் தந்தார் இதை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாழை மணமாகத் தந்த உரைபடித்து
      வாழை வளமாக வாழ்த்துரைத்தீா்! - ஏழையெனக்[கு]
      ஈடிலாச் செல்வத்தை இன்றமிழ்த் தாய்தந்தாள்!
      பாடுலா சென்றேன் பறந்து!

      Supprimer