lundi 17 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 1 ]

காதல் ஆயிரம் நுால் ( வெண்பா 1000 ) எழுதிய பின் சில ஆண்டுகலாகக் காதலைக் குறித்து நுால் எதுவும் எழுதவில்லை. நண்பா்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று ஏக்கம் 100 என்ற இச்சிறு நுாலை எண்சீா் விருத்தப்பாவில் படைக்கின்றேன். மின்வலை நண்பா்களும் சுவைத்திடுவீா!  


ஏக்கம் நுாறு [ பகுதி - 1 ]



ஒருபார்வை கணைபோதும்! என்றன் நெஞ்சை
       ஒருநுாறு முறைதாக்கும்! சொக்கும் உன்றன்
அரும்பார்வை அழகென்னை வா,,வா என்றே
       அழைக்குதடி! அனைக்குதடி!உயிரை நெய்யும்
திருப்பார்வை பேரழகே! தேனே! காணும்
       திசையெல்லாம் தெரிகின்றாய்! உன்னை எண்ணி
ஒருபாடல் பாடுகிறேன்! நுாறாய் யாகி
       உள்ளத்துள் ஒலிக்குதடி! என்ன செய்வேன்? 1

இதயத்துள் வலி!இன்னும் இன்னும்! அன்பே!
       இருக்கின்றாய் என்பதனால் இருக்கின் றேன்நான்!
உதயத்துள் பறவையினம் கரையும் சத்தம்!
       உள்ளத்துள் உன்னினைவு! உறக்கம் இல்லை!
விதிசுற்றிச் சுற்றியெனைத் தாக்கும்! அன்று
       வீட்டுவரை வரவில்லை! கால்கள் சோர்ந்து
மதிசுற்ற மனம்சுற்ற ஊமை யானேன்!
       மலா்விழியின் மதுவுண்டால் மயக்கம்  தீரும்! 2

வருகின்றாய் என்றவுடன் சிறகி ரண்டு
       வந்தெனக்கும் இதமாக வாய்க்கும்! முத்தம்
தருகின்றாய் என்றவுடன் உணா்வு பொங்கித்
       தலையுச்சி கால்வரைக்கும் பாயும்! பாட்டின்
கரு..நன்றாய் வளா்விக்கும் சொர்க்கம் நீயே!
       கடற்கண்ணி! கனித்தோட்டம்! கண்ணே என்னுள்
இரு..நன்றாய்! ஈடில்லாக் கம்பன் காளி 
       எழுத்துலகை நான்வெல்லும் புலமை பூக்க! 3

பாலிருக்கும்! பழமிருக்கும்! பட்டு மெத்தை
              
பளபளக்கும்! பள்ளியரை மணங்கொ டுக்கும்!
சேலிருக்கும் கண்ணழகைக் கண்டு கண்டு
              
சோ்ந்தினிக்கும் கற்பனைகள்! தொங்கும் நீண்ட
வாலிருக்கும் குரங்கைப்போல் நெஞ்சம் துள்ளி
              
வட்டமிடும்! கொட்டமிடும்! ஆகா அந்த
மாலிருக்கும் உலகென்ன? வற்றா தின்ப
              
வளமிருக்கும் வடிவழகே! அருகே வா!வா!!  4

விழிநான்கும் விடுகின்ற காதல் தெப்பம்!
       விண்மீன்கள் கைதட்டி வாழ்த்து கூறும்!
வழிநான்கு திறந்திங்கு மலா்கள் துாவி
       வானுலகத் தேவதைகள் நடனம் செய்வார்!
மொழிநான்கு தெரிந்திருந்தும் மௌனம் தானே
       முதலீடு! முத்தமெனும் தொழிற் கூடம்!
பழிநான்கு  என்செய்யும்! பருவ ஏட்டின்
       பக்கங்கள் தேனுாறும்! குடிப்போம் வாடி! 5

10 commentaires:

  1. தமிழ்ப்பால் அருந்தி மகிழ்ந்தேன் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பத் தமிழ்ப்பாலை ஏந்தித் குடிக்கின்றீர்!
      துன்பம் வருமோ துணிந்து?

      Supprimer
  2. அருமை அருமை...

    தொடரும் படைப்புக்களை படிக்க ஆவலுடன் உள்ளோம் ஐயா...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமை அருமையென ஆடிக் களித்தீா்
      பெருமை அடிகளைப் பெற்று!

      Supprimer
  3. காதல்ரசம் சொட்டுவது என்பது என்னவோ உண்மை.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல்தேன் சொட்டும் கவிதைகளைத் தாம்குடித்து
      ஓதும் கருத்தே உயர்வு!

      Supprimer
  4. கவிப்பால், தமிழ்பால் இன்னும் வேண்டும்.என்று மனம் கேட்குது.
    அருமை...அருமை....கருத்து எழுதும் அருகதை எனக்கு இல்லை. ரசித்தேன்.
    மிக்கநன்றி. நான் படிக்கிறேன்.
    வேதா. இலங்காதிலகம்.
    (கம்பன் கழகத்தில் நம் உறவினர் திரு யெயராஜ் எனது முதல் நூலுக்கு முகவுரை எழுதினார். என் ஒன்று விட்ட தங்கை (பெரியப்பா மகள்) மகன் தான் பிரசாந்.)

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கம்பன் உறவானாய்! கன்னல் சுவையானாய்!
      உம்மின் குடியை உரைத்து!

      Supprimer

  5. ஏக்க விருத்தத்தை எண்ணிப் படித்தே..என்
    துாக்கம் இழந்து துவள்கின்றேன்! - தாக்கும்
    கணையாகக் காதல் கவிபாயும்! தேடி
    இணையாகச் சொல்வேன் எதை?

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்!

      காதல் கமழ்கின்ற கன்னல் கவிதைகளை
      ஓதி உவந்தே உயிர்உருகும்! - ஆதாமும்
      ஏவாளும் எய்த இனிப்புண்ணும்! பூங்குயில்
      கூவா திருக்குமோ கூறு?

      Supprimer