[என் தாயாருடன் நான்]
கருணைக்கடல்
அம்மா அன்பு இரண்டல்ல!
அமுதும்
தேனும் வேறல்ல!
இம்மா நிலத்தில் உயர்ந்தொளிரும்
இறைவன்
கோயில் இணையில்லை!
சும்மா கிடந்த எனையிங்குச்
சுடரும்
பொன்னாய் மாற்றியவள்!
செம்மாந் துரைப்பேன்! தாய்என்னும்
சீரே
கருணைப் பெருங்கடலாம்!
பத்துத் திங்கள் எனையேந்திப்
பட்ட
பாட்டை எண்ணுகிறேன்!
கத்தும் வலியை நீயேற்றுக்
கண்ணே
என்று அணைத்தாயே!
முத்தும் மணியும் பொன்பொருளும்
முத்தம்
ஒன்றுக் கீடாமோ?
கொத்து மலரே தாயுள்ளம்
குளிர்ந்த
கருணைப் பெருங்கடலாம்!
கண்ணின் இமைபோல் காத்திட்டாள்
கண்ணீ
ராலே நோய்தீர்த்தாள்!
விண்ணில் உலவும் விண்மதியாய்
மண்ணில்
என்னை நினைத்திட்டாள்!
புண்ணில் கிடந்த காலத்தில்
பண்ணில்
என்னைப் படித்திட்டாள்!
எண்ணில் பெருகும் தாய்அழகே!
இனிக்கும்
கருணைப் பெருங்கடலாம்!
கோலம் வரைந்து சீராட்டி!
கொஞ்சும்
மொழியால் பாராட்டி!
காலம் அறிந்து பாலூட்டி!
கண்கள்
உறங்கத் தாலாட்டி!
ஞாலம் புகழும் தமிழூட்டி!
நல்லோர்
நவின்ற வழிகாட்டி!
ஆலம் போன்றே வாழ்வீந்த
அன்னை
கருணைப் பெருங்கடலாம்!
மூப்புப் பருவம் அடைந்தாலும்
மூளை
முழுதும் என்நினைவே!
யாப்புச் சுவையா? இசைக்கின்ற
யாழின்
சுவையா? இவ்வுலகின்
தோப்புக் கனிகள் அத்தனையும்
தோற்றே
ஓடும்! வாழ்நூலின்
காப்புக் கவிதை தாயன்றே!
கமழும்
கருணைப் பெருங்கடலாம்!
09.11.2013 தொடரும்
அன்னை அருகே அருங்கவியே
RépondreSupprimerஅழகாய் உள்ளார் உம்தாயே!
உன்னை இங்கு தந்தவரோ
உவந்தேன் காணும் போதினிலே!
பண்பைக் குணத்தைப் பருக்கியதன்
பலனை உம்மில் காண்கின்றோம்!
அன்பும் அறிவும் ஊட்டியதால்
அறிஞன் உம்புகழ் ஒளிர்கிறதே!..
வணக்கம் ஐயா!..
அழகிய புகைப்படமும் அருமையான கவியும் கண்டு மகிழ்ந்தேன்.
தொடருங்கள்...
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
Supprimerவணக்கம்!
என்னை உலகில் எழில்பெறச் செய்திடும்
அன்னை அளித்த அருள்!
அன்னையைப்பற்றி அருமையான பாடல்.
RépondreSupprimer//பத்துத் திங்கள் எனையேந்திப்
பட்ட பாட்டை எண்ணுகிறேன்!
கத்தும் வலியை நீயேற்றுக்
கண்ணே என்று அணைத்தாயே!//
மிக அருமையான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
Supprimerவணக்கம்!
கண்முன் இருக்கும் கருணைக் கடவுள்..தாய்!
விண்ணில் உளதோ விளம்பு?
அம்மாவுடன் அருகே நீங்களா கவிஞரே!...
RépondreSupprimerநன்றாக உள்ளது படம். அம்மாவைப் பற்றிப் பாடிய கவிதையும்
அன்புத் தாயைப் போலவே அழகாக இருக்கின்றது.
மிகவும் நினைந்துருகிப் பாடியுள்ளீர்கள்! அருமை!
வாழ்த்துக்கள்!
Supprimerவணக்கம்!
தாயின் அழகைத் தமிழிசையில் பாடிட
வாயும் மணக்கும் மலா்ந்து
!
வணக்கம்
RépondreSupprimerஐயா
தாயின் பெருமை பற்றிய கவிதை அருமை வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Supprimerவணக்கம்!
பெற்றவள் மேன்மையை முற்றும் மொழிந்திடச்
சொற்றொடா் ஓங்கும் சுடா்ந்து!
"அம்மா அன்பு இரண்டல்ல!
RépondreSupprimerஅமுதும் தேனும் வேறல்ல!" என்ற அடிகளில்
தாயையே நேரில கண்ட உணர்வு
அன்பெனும் தேன் கலந்து
அமுது ஊட்டிய அம்மாவையே
காணமுடிகிறதே!
Supprimerவணக்கம்!
அம்மா இலாமல் அருந்தமிழ்த் தோழனே
இம்மா நிலமே இலை!
கருணைக் கடல்...
RépondreSupprimerகடலலையாய் அர்ப்பரிக்கிறது...
வாழ்த்துக்கள் ஐயா.
Supprimerவணக்கம்!
நற்றவக் கோயில்! நறுமணப் பூஞ்சோலை!
பெற்றவள் உள்ளமெனப் பேணு!
தாயிற் சிறந்த கோயிலுமில்லை
RépondreSupprimer
Supprimerதாயே கடவுளெனச் சாற்றித் தொழுதிட
மாயும் மனம்கொண்ட மாசு!
தாய் எனும் தெய்வத்தை கவிதையில் வணங்கியிருக்கும் விதம் அருமை !
RépondreSupprimerத.ம 5
Supprimerவணக்கம்!
என்னைக் கவிஞனாய் இங்குப் படைத்திட்ட
அன்னை அகமே அழகு!
தாய் எனும் தெய்வத்தை கவிதையில் வணங்கியிருக்கும் விதம் அருமை !
RépondreSupprimerத.ம 5
அன்னையிடத்து அன்பும்,
RépondreSupprimerஅழகும் தெரிகிறது
கண்ணில் அறிவுச்
சுடரும் ஒளிர்கிறது
அதன் விளைவும்
உம்மில் விளைகிறது என்றும்
வான் புகழ் கீர்த்தி கிட்டிட வாழ்த்துகிறேன்
Supprimerவணக்கம்!
சான்றோன் எனஎன்னை ஆன்றோர் புகழ்ந்திட
ஈன்றவள் உற்றாள் இனிப்பு
RépondreSupprimerநற்றவம் மின்னும் நறுந்தமிழில் நல்கினீா்
கற்றவா் போற்றும் கவிதையை! - பற்றுடன்
பெற்றவள் கொண்ட பெருமையைப் பேணுதல்
உற்ற உயிரின் உயா்வு!
Supprimerவணக்கம்!
கருணைக் கடலெனக் கண்முன் கமழ்ந்து
பெருமை அளித்தவளைப் பேணி - அருமையாய்
வெண்பா படைத்து வியப்புறச் செய்தனையே!
நண்பா பெறுக நலம்!