உயர்தமிழ் காப்பாய் உடன்!
தொடக்கக் கவிதை
சொல்லிக் கொடுத்த பா..வகையைச்
சுடரும் வண்ணம் பாடுவதால்
வெள்ளி மரபு பாவரங்கம்
மேலாம் பெயரைப் பெற்றதுவோ?
அள்ளி அமுதை அளித்திடவே
துள்ளிக் கவிஞர் வருகின்றார்!
நெல்லிக் கனிபோல் நற்சத்தை
நெஞ்சுள் கொடுப்பார் சுவைத்திடுவோம்!
தமிழ்ப் புதுவை
புதுவை நகரம் புலவர்களின்
புலமைக் கோட்டை! பூந்தமிழின்
மதுவைச் சுரக்கும் மலர்ச்சோலை!
மணக்கும் கவிதைத் தலைவாயில்!
புதுமைக் கவிஞன் பாரதியின்
புகழைப் பாடும் திருக்கோயில்!
எதுகை மோனை தொழிற்சாலை!
என்றன் ஊருக் கிணையுண்டோ?
அவை வணக்கம்
என்னை இங்கே ஒருபொருட்டாய்
எண்ணி அழைத்தீர்! உயர்வளித்தீர்!
பொன்னை வைக்கும் இடத்தினிலே
பூவை வைத்தீர்! வணங்குகிறேன்!
அன்னைத் தமிழின் அருள்என்பேன்!
ஆசான் என்றும் துணையென்பேன்!
தென்னை மரத்தின் இளநீரைத்
திரட்டும் என்..பா சுவைத்திடுவீர்!
என்றன் குருவே! அறிவொளியே!
இதயம் புகுந்த அன்பொளியே!
இன்தேன் கவிதைக் கலை..தந்த
ஈடில் அரிய புத்திரரே!
உன்றன் நினைவை உள்ளேந்தி
உயர்ந்த அரங்கில் நிற்கின்றேன்!
நன்றுன் அருளை வழங்குகவே!
நல்ல தமிழை முழங்குகவே!
எந்தை கவி.தே. சனார்த்தனனின்
இன்தாள் வணங்கித் தொடர்கின்றேன்!
சிந்தை முழுதும் தமிழ்மணக்கும்!
செல்லும் பாதை தமிழ்செழிக்கும்!
பந்தைப் போன்று பகைவர்களைப்
பறக்கச் செய்த பாவேந்தர்
விந்தைப் பெயரை நான்பெற்றேன்!
வெல்லும் கவியாய் வளர்க்கின்றேன்!
சந்தம் சிந்தும் பாவகைக்குச்
சொந்தம் அரங்க. நடராசர்!
எந்த நாளும் எந்நொடியும்
எழுத்தை வடிக்கும் தமிழ்ச்சிற்பி!
இந்த உலகில் தமிழ்பரவ
இயங்கும் தொண்டர்! பெரும்புலவர்!
கந்தம் கமழும் கவிதூவிக்
கால்கள் தொட்டு வணங்குகிறேன்!
பாட்டறிஞர் இலக்கியனார்
பாவரங்கில் பயின்றவரே!
பசுமைப் பாக்கள்
தீட்டறிஞர் திறனுடைய
சான்றோரே! ஆன்றோரே!
தமிழின் தேனைக்
கூட்டறிஞர் இங்கிருக்க
என்தலைமை ஏன்அய்யா?
கொள்கை ஏந்திக்
காட்டறிஞர் கவிபோல
என்கவிதை இருக்குமெனில்
கம்பன் செய்கை!
புதுவைப் பாவலர் பயிற்சிப் பட்டறை நடத்திய பாட்டரங்கத் தலைமைக் கவிதை 05.2011
RépondreSupprimerஓங்கு புதுவையில் ஓதிய பா..கண்டேன்!
துாங்கு தமிழன் துணிவுறவே! - ஈங்கு..நீ
தேங்கு புகழுடைய தீங்கவி தீட்டிட
நீங்கும் துயரம் நிலைத்து!
Supprimerவணக்கம்!
புதுவைப் பெரும்புலவன் பாவேந்தன் போன்று
புதுமைக் கவிகள் புனைவேனா? என்தோழா!
தன்னல மிக்க தமிழனை மாற்றி..நான்
பொன்னலம்செய் வேனா புகல்?
புதுவையில் பிறந்த பாக்கள் அருமை ஐயா
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
சீா்புதுவை வாழ்ந்த செழுந்தமிழ்ப் பாரதிபோல்
பார்ப்பொதுமை காட்டுமென் பா!
எத்தனை இன்மொழி இங்கிருந்தும் எம்தமிழ்தான்
RépondreSupprimerமுத்தென நன்றொளிரும் செம்மொழியே! - சத்தெனச்
சித்தமெலாம் உம்கவி நீங்கிடா திங்கிருக்கத்
தித்திக்க ஏதுளதோ சொல்!
வணக்கம் ஐயா!
உங்கள் கவிகளின் சிறப்பினைச் சொல்லிட வார்த்தைகள் இல்லை.
அத்தனை இனிமை. கற்றிட மிக எளிமை.
எந்தனுக்கும் உங்கள் பாக்கள் தரும் ஊக்கத்தால் ஆவலில் எழுதுகிறேன்.
தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தம் தந்தருள வேண்டுகிறேன்...
மிக்க நன்றி!
என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!
Supprimerவணக்கம்!
சித்திக்கும் எண்ணங்கள்! சிந்தனை வண்ணங்கள்!
புத்திக்குத் தந்துவக்கும் புத்தமுதை! - நித்தமும்
தித்திக்கும் தீந்தமிழின் சீா்புகழ் தாமறிந்து
எத்திக்கும் போற்றும் எழுந்து!
உங்கள் ஆற்றல்களை அளவிட முடியுமோ?
RépondreSupprimerகாட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டு
ஓடுகிறது கவிதை!
அருமை! வாழ்த்துக்கள் கவிஞரே!
Supprimerவணக்கம்!
பூங்கொடி தந்த புகழுரையை எந்நாளும்
தேங்கனி என்பேன் தெளிந்து
கவிதை அருவியில் நனைத்தேன்... இளம் மழைச் சாரலாய் ஊற்றெடுக்கும் தமிழ்....
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
புதுவையில் பூத்த தமிழ்ப்பா, இனிக்கும்
மதுவை வழங்கும் மகிழ்ந்து