vendredi 15 novembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 14



நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

உறைபனி நாட்டில் வந்தே
     உற்றிடும் துயரை எண்ணி
இறைப்பணி உள்ளம் கொண்ட
     இனியநல் லம்பாள் பாடல்
நிறைபணி யாற்றும் என்றன்
     நினைவினில் நிலையாய் நிற்கும்!
முறையினி யாவும் மாறும்
     முற்றிய கலிசெய் காலம்!
 
09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பிணிவடம் போட்டு நிற்கும்
     பிறமொழிச் சொல்லை நீக்கி
அணிவடம் என்றே நல்ல
     அருந்தமிழ்ச் சொல்லைத் தந்தாய்!
கனியிடம் சுவையைப் பெற்றுக்
     கவிதைகள் தீட்டும் வேதா!
தனியிடம் பெறுவார் பாட்டில்!
     தண்டமிழ்ப் புலவா் ஏட்டில்!

09.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

என்றன் வலையில் இரவுதரும் புன்னகையை
இன்தமிழ் யாப்பில் இசைத்துள்ளேன்! - இன்றே
வருகையைத் தந்திடுவீா்! வானமிழ்து உண்டு
கருத்தைப் பதிப்பீா் கணித்து!

10.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

அஞ்சா மறவன்! கவிஅரிமா!
     அமுதச் சிந்தின் அருந்தந்தை!
துஞ்சா துழைத்துப் பாட்டுலகைத்
     துாய்மை செய்த தமிழ்த்தொண்டன்!
பஞ்சாய்ப் பகைவா் பறந்தோடப்
     பழமை மூட வழக்கோட
நெஞ்சாய் மண்ணை எண்ணியவன்
     நெருப்புப் புலவன் பாரதியே!

11.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

காலத்தை வீணாக்கும் பதிவை எல்லாம்
     கண்டிப்பாய் நீக்கவேண்டும் ............ .............!
ஞாலத்தை உய்விக்கும் ஊக்கம் வேண்டும்!
     நற்றமிழே மணம்வீசும் ஆக்கம் வேண்டும்!
பாலத்தை அமைப்பதுபோல் வன்மை மிக்க
     பார்வையினைப் பதிப்புலகில் படைக்க வேண்டும்
ஆலத்தை வேலத்தை மனத்தில் கொள்க!
     அருந்தமிழின் பற்றேந்தி உரைத்தேன் நானே!

11.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முத்துக் குமரன் இன்வலையை
     முந்தி வந்து படித்திட்டேன்!
கொத்து மலா்கள் பூத்தாடும்
     கோலம் கண்டு மகிழ்ந்திட்டேன்!
கத்து கடலின் தொடா்அலைபோல்
     கவிதை அலையை எழுப்பிடுக!
சத்து மிக்க தண்டமிழைச்
     சாற்றி நன்றே வளா்ந்திடுக!

11.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

என்னினிய நாடும் எழிற்றமிழ் மக்களும்
என்றினிய கல்வியை ஏற்பாரோ? - அன்றே
நடிகா்மேல் கெண்ட அடிமையுளம் நீங்கும்!
முடிவைத் தமிழே மொழி!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்

கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் வன்கவிதை!
எண்ணத்தில் நிற்கும் எழுந்து!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தோ்ந்த படங்கள்! மனம்விட்டுச்
     சிரிக்க! நன்றே சிந்திக்க
ஈந்த கருத்தை எண்ணுகிறேன்!
     எளிய நடையை வாழ்த்துகிறேன்!
சோர்ந்த நெஞ்சை உசுப்பிவிடும்!
     துன்பம் போக்கித் துணிவுதரும்!
காந்தம் போன்றே என்மனத்தைக்
     கவ்வும் உன்றன் மின்வலையே!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

நல்ல நல்ல செய்திகளை
     நன்றே அளிக்கும் இன்ஆரி!
மெல்ல மெல்ல உன்பதிவை
     மேய்ந்து பார்த்தேன்! சுவைஅதிகம்!
சொல்லச் சொல்ல இனிக்கின்ற
     துாய தமிழில் பெயா்மாற்று!
வல்ல வல்ல திறமைகளை
     வாரி வழங்கி வளருகவே!

12.12.2012

--------------------------------------------------------------------------------------------------------
 

24 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    கன்னத்தில் ஓங்கி அறைந்ததுபோல் வன்கவிதை!
    எண்ணத்தில் நிற்கும் எழுந்து!

    அழகான கவித்துவம் ...காலையில் படிக்கும் போது மனசுக்கு ஒருவித ரிதம்...ஐயா...நண்பர்களின் வலைப்பூவில் உங்களின் கவிப்பூக்கள் என்றால் அந்த தளத்தின் சுட்டியை பதிவிட்டால் நன்றாக இருக்கும் ஐயா.... நாங்களும் பார்வயைிடலாம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காலைப் பொழுது களிப்புறும் வண்ணம்,என்
      சோலைக் கவிகளைச் சூடு!

      Supprimer
  2. வண்ணமயமான கவிபூக்களின்
    தொகுப்பூ அருமை.. பாராட்டுக்கள்..!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வலையில் மலா்ந்த மலா்களை உங்கள்
      தலையில் தரித்தீா் தழைத்து

      Supprimer
  3. அருமை ஐயா.... வாழ்த்துக்கள்.....

    From Friend's L.Top...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓடி வருகைதரும் ஒப்பில் தனபாலன்
      நாடி அளிப்பார் நலம்!

      Supprimer
  4. அத்தனையும் அழகு...

    தொகுப்பிற்கு வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நற்கவிதை வீதியார் நல்லதமிழ் சௌந்தா்
      பற்றுடன் வந்தார் பறந்து

      Supprimer
  5. கவிப்பூக்கள் தந்து களிப்பினை ஊட்டி
    வியப்புகளைக் கண்ட மகிழ்வு!

    அனைத்தும் மிக அருமை! ரசித்தேன்!

    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கன்னல் கவிதைகளைக் கற்றுக் களித்திடுவீா்
      கண்கள் கமழும் கனிந்து!


      Supprimer
  6. வணக்கம் ஐயா !
    இனிய நற் கருத்துக்களை இங்கே கோர்வையாக்கி வெளியிட்ட போதும் கூட
    அம்பாளடியாளின் நினைவும் தவறமால் மலர்ந்திருப்பது கண்டு மகிழ்வுற்றேன் .
    மிக்க நன்றி .வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தோழி வருகையால் தோன்றும் இனிமை!பல்
      லாழி வளங்கள் அளித்து

      Supprimer
  7. ஆஹா... வலைப்பூகளில் உங்கள் கவிப்பூக்கள்
    மணம் பரப்புகின்றதே!.

    அத்தனையும் அருமை!

    தொடருங்கள் கவிஞரே! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உன்றன் வலைபூவில் என்றன் கவிப்பூக்கள்
      என்றும் மணக்கும் இனித்து

      Supprimer
  8. வணக்கம் அய்யா..
    அனைத்தும் அருமை அய்யா. பின்னூட்டக் கவியை எல்லாம் தொகுத்து பதிவாய் தந்தவிதம் ரசிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காலம் களித்துவக்கக் கன்னல் கவிதைகளின்
      கோலம் கொடுத்தேன் குளிர்ந்து!

      Supprimer

  9. நண்பா்தம் மின்வலையில் நன்றே நவின்றதமிழ்ப்
    பண்கள்எம் நெஞ்சைப் பருகினவே! - தண்டமிழ்ப்
    பாரதி தாசனே! பாட்டுலகை ஆள்கின்றாய்
    பாரதிர் யாப்பைப் படைத்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாரொளிர் பாக்களைப் பாடிப் படைத்தாலும்
      சீரொளி காண்பாரோ செந்தமிழா்? - தாரொளிர்
      வாழ்விழந்தார்! பெற்ற தமிழ்மறந்தார்! மண்துாற்றத்
      தாழ்வடைந்தார் தந்நலம் சார்ந்து

      Supprimer
  10. Réponses

    1. வணக்கம்!

      வருகைக்குத் தந்தேன் வணக்கம்! எழுதும்
      அருமைக்குத் தந்தேன் அமுது!

      Supprimer
  11. மறுமொழியும் கவிதையிலே
    மனங்குளிர அளிக்கின்றீர்
    நறுமணமே ஒவ்வொன்றும்
    நற்றமிழில் கரும்பென்றும்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      உம்மென் றுரைக்கும்முன் ஓடிவரும் பாட்டருவி
      நம்மொழி கொண்ட நலம்

      Supprimer
  12. ஏற்றம் தரும் கவிகளையே ஈகின்றீர் மனம் நிறைய
    ஊக்கம் தரும் வரிகளையே உவக்கின்றீர் மனம் உவந்து
    போற்றும் உம் பொன் எண்ணம் வாழ்க என்றென்றும்
    புண்ணியமும் செதிடனும் பிறப்பதற்கு உம் போன்று

    நன்றி வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனியா படைத்த எழுத்திற்கு, நன்றி
      பனியாய்ப் பொழிவேன் பணிந்து!

      Supprimer