dimanche 10 novembre 2013

கருணைக்கடல் - பகுதி 2




கருணைக்கடல்

தொடக்கக் கவிதை

இனிக்கும் கவிதை அரங்கத்தை
     இருகை கொண்டு திறக்கின்றேன்!
மினுக்கும் பட்டுப் பூச்சியென
     மிதக்கும் வண்ணக் கற்பனைகள்!
நினைக்கும் பொழுதே தேனூறும்
     நேயத் தமிழின் திருப்பாக்கள்!
எனக்கும் கவிதைக் கலையூந்தே
     என்றும் காப்பாய் தமிழணங்கே!

பின்னைப் பிறக்கும் பிறவிகளில்
     அன்னைத் தமிழின் மைந்தனென
என்னைப் பிறக்க வைத்திடுவாய்
     பொன்னை நிகர்த்த திருராமா!
தென்னை நல்கும் இளநீராய்,
     தென்றல் நல்கும் நல்லிதமாய்,
முன்னைத் தமிழை நான்பாட
     முகுந்தா! முகிலா! அருள்வாயே!

கம்பன் கழகக் கவிஞர்கள்
     கருணைக் கடலில் நீந்திடவே
இம்மன் றேறி வந்திடுவார்!
     இனிக்கும் தமிழைத் தந்திடுவார்!
நம்மின் நெஞ்சம் தேனேந்த!
     நல்லோர் வாழ்ந்த மாண்பேந்த!
செம்பொன் இராமா அருளுகவே!
     செல்வத் தமிழ்த்தாய் ஓங்குகவே!

வள்ளல் படைத்த அருட்பாவை
     வடிவாய் ஓதும் அரங்கிரண்டில்
உள்ளம் மணக்கும் வண்ணத்தில்
     உயர்ந்த கருணைக் கடல்நீந்தத்
தௌ்ளத் தெளிந்த மனத்தோடு
     திரண்டு வந்த உறவுகளே!
அள்ள அள்ளச் சுரக்கின்ற
     அன்பால் வணங்கி மகிழ்கின்றேன்!

நிறைவு கவிதை

பலாச்சுளைப் பாக்களைப் பாடும் தணிகா
உலாவரும் பண்பின் உரு!

மகத்துவம் மிக்க மலர்க்கவி தந்தார்
அகத்துள் தமிழை அணிந்து!

கருணைக் கடலில் குளித்த..மதி வாணன்
உருவை அடையும் ஒளி!

அருமை அருணா அளித்தார் கவிதை
கருணைக் கடலைக் கடைந்து!

பாப்புப் படைத்த கருணைக் கடல்குளித்தால்
மூப்பு வருமோ மொழி!

அய்யா சிவஅரியார் இங்களித்த அந்தமிழில்
நெய்யாய் உருகும் நினைவு!

பூக்களாய் இங்குப் பொழிந்திட்ட பக்களை
ஈக்களாய் மொய்த்தோம் இனித்து!

சிவப்பிர காசம் சிறப்புறும் வண்ணம்
தவத்தமிழ் தந்தார் தழைத்து!

கொஞ்சும் தமிழெடுத்துப் பெஞ்சமின் தேன்கொடுத்தார்!
நெஞ்சம் நெகிழும் நினைந்து!

மல்லன் மனத்துள் மணக்கும் கருணைமலர்
மல்லிகா என்பேன் மகிழ்ந்து!

கருணைக் கடலைக் கவிதையில் தந்தார்
பெருமை அனைத்தும் பிணைத்து!

தலைவர் சிமோன்இங் களித்த தமிழ்ப்பா
நிலையென நிற்கும் நிலத்து!

சந்த நடையொளிரத் தந்த கவிதைகள்
முந்தும் புகழை முனைந்து!

பாப்பு படைத்த கருணைக் கடல்குளித்தால்
மூப்பு வருமோ மொழி!

கருணைக் கடலின் கவிதந்த
     கவிஞர் வாழ்க! ஒளிர்கின்ற
அருணைத் தமிழின் அகங்கொண்ட
     அன்பர் வாழ்க! இவ்வரங்கைப்
பெருமை செய்ய வந்தமர்ந்த
     பெரியோர்! பெண்டீர்! வாழ்க!நல்
அருமை மனத்தோன் பாரதிநான்
     அளித்தேன் நன்றி! சந்திப்போம்!

தொடரும்

5 commentaires:

  1. உள்ளம் நிறைய உவந்தீர்கள் அருப்பா அரங்கின் ஆரம்பக் கவியமுதை.
    கன்னற் பாச்சுவை மிகவே சிறப்பாக இருந்தது!..

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  2. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொரு வரியிலும் தமிழ்ச்சுவை ததும்புது...வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. பாற்கடல் முதல் பசிபிக் கடல் வரை பார்த்திருக்கிறேன் ...ஆனால்
    கருணை மிகுந்த கருணைக் கடலை கவிதையாய்
    இன்று தான் பார்க்கிறேன் ....
    அன்புடன் மாமல்லன் ...

    RépondreSupprimer

  4. அருட்பா அரங்கில் அளித்த கவிகள்
    கரும்பாய் இனித்திடக் காண்டேன்! - பொருட்பார்த்[து]
    எழுதும் புலமையை என்னென்பேன்? உன்வலை..எப்
    பொழுதும் மணக்கும் பொலிந்து!

    RépondreSupprimer