mercredi 27 novembre 2013

பாவாணர் (தாயும் சேயும்)

மொழிஞாயிறு 
ஞா. தேவநேயப் பாவாணா்

மொழிபலவும் உணர்ந்தவராய் இருந்த தாலே
       முத்தமிழே உயர்ந்ததெனும் முடிவைக் கண்டார்!
பழிபலவும் தன்முன்னர்ச் சூழ்ந்திட் டாலும்
       பைந்தமிழின் சீருரைக்கத் தயங்க மாட்டார்!
வழிபலவும் வாழ்வதற்கே இருந்திட் டாலும்
       மதிமயக்கும் வேற்றுமொழி பேச மாட்டார்!
இழிவுபல சிறுமதியார் செய்திட் டாலும்
       எழில்தமிழைக் காத்திடவே தவற மாட்டார்!

முந்துதமிழ் மூவேந்தர் முறையாய்க் காத்த
       முத்தமிழ்தாம் மொழிகளிலே மூத்த தாகும்!
செந்தமிழில் வடசொற்கள் சேரு மாயின்
       சிறப்பான நம்மொழியும் சிதைந்து போகும்!
அந்தமிழர் துயில்வதனால் ஆங்கி லந்தான்
       அருந்தமிழை விரைவாக விழுங்கக் கூடும்!
நந்தமிழர் இவையுணர்ந்து நாட்டத் தோடு
       நற்றமிழைப் போற்றிடவே வேண்டும் என்றார்!

செந்தமிழின் வேர்ச்சொல்லைச் சீராய் ஆய்ந்து
       சிறப்பான ஆய்வுரைகள் செய்[து] உயர்ந்தார்!
சிந்தைமகிழ் புதுமைகளைச் செப்பி நின்று
       சிறுமதியோர் சூழ்ச்சிக்கு வேட்டு வைத்தார்!
நந்தமிழே ஆரியத்தின் மூல மென்று
       நறுக்காகத் தெளிவுறவே எடுத்து ரைத்தார்!
வந்துபுகா(து) அயற்சொற்கள் அவர்ப டைப்பில்
       வண்டமிழை உயிரெனவே கொண்ட தாலே!

முத்தமிழ்ச்சீர் இயலிசைசேர் நாட கத்தை
       மூவேந்தர் வளர்த்திட்டார் அந்த நாளில்!
முத்தான செந்தமிழாம் நந்தம் தாயை
       முறையாகக் கல்லாதார் தமிழர் ஆகார்!
சொத்தாகும் தமிழ்நூலைக் கற்றுங் கூடச்
       சொல்வேறு செயல்வேறாய்த் திரிகின் றாரே
'செத்தாலும் தமிழ்பேசிச் சாவீர்' என்றே
       சீறிவரும் சொல்லெடுத்துச் சாடி னாரே!

தம்நலத்தைப் பாராமல் கண்துஞ் சாமல்
       தமிழ்மொழியின் உயர்வுக்கே பாடு பட்டார்!
நம்பெயரை நாம்வாழும் ஊரின் பேரை
       நற்றமிழில் கண்டிடவே விருப்பப் பட்டார்!
பம்பரமாய்த் தமிழ்த்தொண்டு துணிச்ச லோடு
       பாரினிலே புரிந்தவரை மறக்கப் போமோ?
செம்மொழியாம் நம்மொழியைக் காலப் போக்கில்
       சிதைக்கவந்த பிறமொழியைத் துரத்திட் டாரே!

தாய்மொழியின் உணர்வொடு,தாய் நாட்டுப் பற்றும்,
       தந்நலமே இல்லாத வாழ்வுங் கொண்டு
தூய்மையதாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகத்
       தொடர்ந்துபல நற்பணிகள் புரிந்து நின்றார்!
வாய்மறையாம் குறளுக்குப் புதிய தாக
       வளமான உரைகண்டு மகிழ்ந்து போனார்!
சேய்பிறக்கத் தாய்மகிழுந் தன்மை போன்று
       செந்தமிழ்த்தாய் மகிழ்ந்தனள்பா வாண ராலே!

(தாய் - தமிழ், சேய் - பாவாணர், 
23-03-2002 அன்று புதுவை நற்றமிழ் இதழ் நடத்திய 
பாவாணர் நூற்றாண்டு விழா மலருக்கு எழுதிய பாக்கள்)

6 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    அருமை வாழ்த்துக்கள் ஐயா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. பாக்கள் அனைத்தும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. வணக்கம் கவிஞரே....!

    வான் மழையில்
    வந்து நான் நனைந்திட்டேன்
    வண்டமிழின் பெருமையினை
    உணர்ந்திட்டேன் செம்மொழியாம்
    நம்மொழியில் திளைத்திட்டேன் சேய்
    பிறக்கத் தாய் மகிழும் தன்மை போன்று
    உம் பாவண்ணம் கண்டு நான் மலர்ந்திட்டேன்.

    அருமை வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா!..

    பாவாணர் அருமைதனை எண்சீர் விருத்தமதில்
    அழகுறத் தந்தீர்கள்...
    பெருமைக்குப் பெருமை சேர்த்தன பாக்கள்!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  5. "முந்துதமிழ் மூவேந்தர் முறையாய்க் காத்த
    முத்தமிழ்தாம் மொழிகளிலே மூத்த தாகும்!
    செந்தமிழில் வடசொற்கள் சேரு மாயின்
    சிறப்பான நம்மொழியும் சிதைந்து போகும்!
    அந்தமிழர் துயில்வதனால் ஆங்கி லந்தான்
    அருந்தமிழை விரைவாக விழுங்கக் கூடும்!
    நந்தமிழர் இவையுணர்ந்து நாட்டத் தோடு
    நற்றமிழைப் போற்றிடவே வேண்டும் என்றார்!" என்ற
    பாடல் அடிகளை
    உலகத் தமிழர் ஒவ்வொருவரும்
    மீள மீளப் படித்தால்
    எம் தாய்மொழி அழியாது பேண
    மொழிஞாயிறு
    ஞா. தேவநேயப் பாவாணா் ஐயா சொன்னது
    நினைவில் வருமே!
    தங்களது இச்சிறந்த பதிவை வரவேற்கிறேன்.

    RépondreSupprimer
  6. பாவாணர் புகழ் போற்றுவோம்

    RépondreSupprimer