mercredi 20 novembre 2013

முருகன் தூதர்




முருகன் தூதர்

சொல்லவரும் கருத்தெல்லாம் முருகன் சீரே!
     சுடர்நெஞ்சின் நினைவெல்லாம் தமிழின் வாழ்வே!
நல்லருள்சேர் நெறியெல்லாம் உலகோர் ஏற்க
     நன்குரைத்த பொழிவெல்லாம் இன்பத் தேனே!
அல்லலுறும் புவியோர்தம் துன்பம் தீர
     ஆய்ந்தளித்த நூலெல்லாம் அருளின் மாண்பே!
வல்லதமிழ் வளங்காத்த கிருபா னந்த
     வாரியார்போல் இனியொருவர் காணப் போமோ?

சந்தமொலிர் திருப்புகழைப் பாடிப் பாடி,
     சாந்தமொளிர் அருட்பாவை நெஞ்சிற் சூடி,
எந்தையொளிர் கம்பனவன் கவியிற் கூடி,
     இன்பமொளிர் நல்லுரைகள் தந்தார் கோடி!
கந்தனொளிர் புகழ்பரப்ப வந்த தூதர்!
     கந்தமொளிர் செயல்படைக்கப் பிறந்த தொண்டர்!
சிந்தையொளிர் அருண்மணக்கும் கிருபா னந்த
     வாரியார்போல் சீருலகில் காணப் போமோ?

06-11-2002

7 commentaires:

  1. சிறப்பிற்கு சிறப்பு ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. எண்சீர் விருத்தமதில் இந்துமதம் வளர்த்த
    இணையிலாப் புகழ்கொண்ட வாரியாரையேற்றிப்
    பாடிய பாக்கள் மிகச் சிறப்பு ஐயா!

    அவர்போல் யார் வருவார் இனி!..

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  3. வணக்கம் !
    அருட் பெரும் கடலைத் தன் கவி அமுதினால் மகிழ்வித்த
    பக்தன் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா .

    RépondreSupprimer
  4. முருக பக்தர் கிருபானந்த வாரியார்
    பெருமை கூறிய கவிதை பக்தி மணம் பரப்பியது.

    அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  5. வணக்கம்
    ஐயா

    முருகன் தூதர் பற்றி சிறப்பான கவிதை ரசித்தேன்..வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer

  6. முருகன் திருப்பெயரை முப்பொழுதும் ஓதி
    உருகும் உளத்தை உடையார்! - பெரும்புகழ்
    வாரியார் சீரை வடித்தகவி, இன்பத்தை
    மாரியாய் நல்கும் மனத்து!

    RépondreSupprimer