samedi 2 novembre 2013

கம்பனில் ஒளிர்வது - பகுதி 4




கம்பன் கவியில் ஓங்கி ஒளிர்வது
(கருணை ஒளி, காதல் ஒளி, கடமை ஒளி, கற்பின் ஒளி)

தலைமைக் கவிதை

காதல் ஒளி

மாமன்னன் தசரதனும் நாட்டின் மீதே
     மாசில்லாப் பெருங்காதல் கொண்டே வாழ்ந்தான்!
ஆ..மன்னன் என்றுருகி இராமன் மீதே
     அயோத்திவாழ் மக்களெலாம் காதல் வைத்தார்!
சீ..மன்னன் நீயெல்லாம் சிதைந்து நின்ற
     இராவணனும் வீரத்தைக் காதல் செய்தான்!
மாமன்னன் நம்கம்பன் படைத்த பாட்டில்
     பாவலர்கள் தீராத காதல் பூண்டார்!

பால்கடலில் துயில்கொண்ட பரமன், இந்தப்
     பார்த்துயரை அகற்றிடவே அவத ரித்தான்!
சேல்கடலில் விளையாடும்! செய்யாள் கண்ணில்
     சேர்ந்தகதை தான்கண்டு காதல் கொண்டான்!
மால்கடலில், அவ்வானில், பெற்ற துண்டோ?
     மலர்மகளின் பொன்விழிகள் நல்கும் போதை!
நூல்கடலில் நுண்கம்பன் நாளும் நீந்தி
     நுட்பமுடன் நுவன்றகவி காதல் வீசும்!

அன்பொழுகும் சொல்வேண்டும்! ஆசை பொங்கி
     அமுதொழுகும் கவிவேண்டும்! இதயக் கூட்டில்
இன்பொழுகும் கற்பனைகள் நொடிகள் தோறும்
     இனிப்பொழுகும் நிலைவேண்டும்! பார்க்கா நாள்கள்
துன்பொழுகும்! துயரொழுகும்! உயிரும் ஏங்கித்
     துவண்டொழுகும் நோய்வேண்டும்! படிப்போர் தம்மின்
என்பொழுகும் வண்ணத்தில் கம்ப நாடன்
     இனியதமிழ்க் காதலினைப் பாடி வைத்தான்!

அண்ணலவன் நோக்கியதைக் காதல் பொங்க
     அருந்தமிழில் நம்கம்பன் பாடி வைத்தான்!
கண்ணிலவள் புரிந்திட்ட வித்தை கண்டு
     காகுத்தன் இவ்வுலகை மறந்து நின்றான்!
மண்ணிலவள் அழகுரைக்கச் சொல்லே இல்லை!
     மாயவனின் மனம்புகுந்து செய்தாள் தொல்லை!
எண்ணிலவள் மாண்புரைக்க ஏதாம் எல்லை?
     இன்காதல் கவியாவும் மணக்கும் கொல்லை!

கனற்கவிஞன் பாரதியும் காதல் காதல்
     காதலெனக் கமழ்கவிதை ஈந்தான்! எங்கள்
இனக்கவிஞன் பாவேந்தன் காதல் தன்னை
     இவ்வுலகின் உயிர்இயற்கை என்றான்! பூக்கும்
வனக்கவிஞன் நான்கூடக் காதல் கொண்டு
     மதுவெண்பா ஆயிரத்தை நெய்தேன்! என்றன்
மனக்கவிஞன் அருங்கம்பன் காத லுக்கு
     மணிமுடியை அணிவித்தே ஆளச் செய்தான்!

(தொடரும்)

8 commentaires:

  1. ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

    RépondreSupprimer
  2. மிகவும் சிறப்பு ஐயா..

    இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
    மனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...

    RépondreSupprimer
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  5. சந்தம் விளையாடுகிறது ஐயா தங்கள் கவியில். கம்பனின் கவி மாண்பை தங்கள் கவி மேலும் மெருகூட்டுகிறது

    RépondreSupprimer
  6. தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வர்வாழ்த்துகள்.
    வேதா.இலங்காதிலகம்.

    RépondreSupprimer
  7. காதல் இன்றிக் காப்பியம் ஏதுண்டு? கூதல் தருகின்ற கவிபாடி எம்மைக்
    கோதாக்கிக் குளிரூட்டி வியக்க வைக்கின்றீர்கள்!
    சாதலில்லை இனி. நம்மொழி நன்றே வாழும்!

    மிக மிக அருமை ஐயா!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும்!

    RépondreSupprimer

  8. வணக்கம்!

    காதல் ஒளியில் கமழும் கவிதைகளை
    ஓதும் மறையாய் ஒலித்திடுவேன்! - மோதும்
    மனத்துள் உணா்வலைகள்! வண்ணங்கள் மின்னும்
    இனத்துள் நினைவை இணைத்து!

    RépondreSupprimer