lundi 11 novembre 2013

உயர்தமிழ் காப்பாய் உடன் - 1




உயர்தமிழ் காப்பாய் உடன்!

வள்ளுவன் தந்த வளர்மறைக் கீடாக
உள்ளதோ ஓர்நூல் உலகினிலே! - துள்ளும்
கயல்விழிப் பெண்ணே! அயல்மொழி நீக்கி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

முன்னே பிறந்ததமிழ்! முத்தாய் ஒளிர்ந்ததமிழ்!
என்னே உரைப்பேன் இணையாக? - பின்னே
மயர்நிலை ஏனோ? மடங்குநிலை வேண்டாம்
உயர்தமிழ் காப்பாய் உடன்!

உயிர்த்தமிழ் என்றும் உடல்தமிழ் என்றும்
குயில்தமிழ் கூவிய கொள்கை! - துயர்சேர்
அயல்மொழி நீக்கி அருஞ்சுவை நல்கி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

இயற்கை எழில்மணக்கும்! இன்தேன் சுரக்கும்!
செயற்கை இலாது சிறக்கும்! - இயக்கும்
வியன்தமிழ்த் தாயை விரைந்தர(சு) ஏற்றி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

சற்;றே அயர்ந்திடில் முற்றும் இழந்திடுவாய்!
பற்றே இலையெனில் ஏதுபயன்? - நற்றேன்
நயக்கும் நறுந்தமிழை நண்ணுநிலை எண்ணி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

எங்கும் தமிழென எல்லாம் தமிழெனத்
தங்கும் உணர்வுடல் தாங்குக! - பொங்கும்
புயலெனச் சீறுக! போந்தபகை வீழ்த்தி
உயர்தமிழ் காப்பாய் உடன்!

கம்பன் படைத்த கனித்தோட்டம்! பூத்தாடும்
செம்பொன் மலர்க்கூட்டம்! செந்தமிழா! - செம்மை
வயல்வெளி பேரழகு! வாய்த்தநம் தாயாம்
உயர்தமிழ் காப்பாய் உடன்!

பருகுநீர்! நல்லுணவு! பற்றிப் படர்ந்து
பெருகும் இனிமை!பேறு எல்லாம் - அரிய
கயல்,வில், புலிக்கொடி கண்ட மொழியாம்
உயர்தமிழ் காப்பாய் உடன்!

சந்தம் ஒலித்திடச் சிந்தும் செழித்திடத்
தந்த தனத்தன தாளமிட! - முந்தும்
இயலிசை நாடகம் இன்மரபு ஓங்க
உயர்தமிழ் காப்பாய் உடன்!

அன்னை அறமோங்க, ஆற்றல் நிறைந்தோங்க,
பொன்னை நிகர்த்த புகழோங்க! - உன்னைத்
துயர்வழி தள்ளும் தொடர்பகை நீங்க
உயர்தமிழ் காப்பாய் உடன்!

புதுவைப் பாவலர் பயிற்சிப் பட்டறை நடத்திய பாட்டரங்கத்
தலைமைக் கவிதை 05.2011

தொடரும் 

18 commentaires:

  1. ஆழமான கருத்துடன் கூடிய
    அற்புதமான கவிதைகள்
    தங்கள் கவிதை முழுவதையும்
    ஒருமுறை வாசிப்பவர் எவரும்
    நற்கவிஞர் ஆகிவிட நிச்சயம் சாத்தியமே
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நாளும் தமிழை நயமுடன் கற்றுணா்ந்தால்
      மூளும் கவிதை மொழி!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா

    சந்தம் ஒலித்திடச் சிந்தும் செழித்திடத்
    தந்த தனத்தன தாளமிட! - முந்தும்
    இயலிசை நாடகம் இன்மரபு ஓங்க
    உயர்தமிழ் காப்பாய் உடன்!

    அருமையான கவிவரிகள்.... இரசித்தேன் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      அன்புடன் வந்தே அளித்த கருத்திற்கு
      நன்றி நவில்கின்றேன் நான்!

      Supprimer
  3. மடங்குநிலை வேண்டாம் - என்பதை மறந்துவிட வேண்டாம் தமிழா! - என்பதே எனது பின்னூட்டம். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்)

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அரிய கருத்துரைத்தீா்! கண்டுவந்தேன் உம்மில்
      பெரிய புலமை பெருக்கு

      Supprimer

    2. வணக்கம்!

      மடங்குநிலை வேண்டாம் என்பதை
      மடிந்திட வேண்டாம் என்றுதான் முதலில் எழுதினேன்

      பின
      மடங்குநிலை வேண்டாம் என்று மாற்றி எழுதினேன்.

      சிறந்த கருத்துரைத்த தங்களுக்கு
      என் வணக்கமும் வாழ்த்துக்களும்


      Supprimer
  4. அருமை ஐயா... (நண்பரின் கைபேசி மூலம் இந்தக் கருத்துரை) நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மை..பூசி என்னை மயக்கியது! உன்நண்பா்
      கைப்பேசி தந்த கருத்து!

      Supprimer
  5. அயராது உங்கள் அரும்பணியால் இங்கே
    துயரேதும் காணாள் தமிழே! - உயர்வாகப்
    போற்றிப் புகழ்வோம் பலனுண்டு நல்லொளி
    ஏற்றிக் களித்திடுவோம் இன்று!

    ஐயா!... அழகு வெண்பாக்களால் அருந்தமிழ்ப் பெருமைதனை
    உலகம் உணரத் தந்தீர்கள்! மிக அருமை!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  6. சந்தம் ஒலித்திடச் சிந்தும் செழித்திடத்
    தந்த தனத்தன தாளமிட! - முந்தும்
    இயலிசை நாடகம் இன்மரபு ஓங்க
    உயர்தமிழ் காப்பாய் உடன்!

    அமுதத்தமிழில் அழகான பாடல்கள்..பாராட்டுக்கள்..!

    RépondreSupprimer
  7. உயர்தமிழ் காப்பாய் உடன்!!!

    உணர்வுபூர்வமான அன்புக் கட்டளை.
    உங்கள் அழகு வெண்பாக்களைக் கண்டு
    மனம் ஒன்றிக் களித்தேன்.

    உங்கள் பணி அளப்பரியது! எங்கள் தமிழ் ஓங்கும் கவிஞரே!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  8. மல்லிகை மணக்கிறது என்று சொல்லவா வேண்டும்! வெண்பா வேந்தே! அனைத்தும்
    இனிக்கிறது!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மல்லிகை போன்று மணக்கிறது! நெஞ்சுவந்து
      சொல்லிய சொற்கள் சுவை!

      Supprimer

  9. சூடற்ற மாந்தனைத் தொட்டே எழுப்பும்..பா!
    பீடற்ற வாழ்வைப் பிழியும்..பா! - நாடற்ற
    துன்பை நசுக்கும்..பா! இன்பை இசைக்கும்..பா!
    அன்பை அளிக்கும்..பா ஆழ்ந்து!

    RépondreSupprimer
  10. வணக்கம் ஐயா!

    குற்றுயலுகரம் மற்றும் குற்றியலிகரம் என்றால் என்ன?
    அதனைக் கவனிக்க வேண்டிய இடங்களையும்
    விளக்கிக் கூறினால் நல்லதென எண்ணுகிறேன்.

    மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓசையில் குன்றும் உகர இகரத்தை
      ஆசையுடன் சொல்வேன்! அறி

      Supprimer

  11. வணக்கம்!

    வாக்களித் தென்னை வளமுறச் செய்கின்றீா்
    பூக்களின் தேனைப் பொழிந்து!

    RépondreSupprimer