samedi 29 août 2020

இரட்டித்து வந்த இலாவணி


சிந்துப்பா மேடை - 11
                                             
இரட்டித்து வந்த இலாவணி

1.
பொய்யுரையை வீசிடுவான்! நெய்யொழுகப் பேசிடுவான்!
பூவையுடன் கொண்டிடுவான் கூட்டு கூட்டு...!
பொன்னுடையை நாடிடுவான்! மின்னகையைச் சூடிடுவான்!
போலியுருச் சாமிகளை ஓட்டு ஓட்டு...!
மெய்யுரையை மூடிடுவான்! மொய்யுணர்வில் கூடிடுவான்!
மேடைகளில் பாடிடுவான் பாட்டு பாட்டு...!
வீடுகளை வாங்கிடுவான்! கேடுகளில் ஓங்கிடுவான்!
வேசர்களைக் கம்பியெண்ணப் பூட்டு பூட்டு!

2.
கூத்திடுவான் பத்தியென! பூத்திடுவான் முத்தியென!
கோடிகளைச் சேர்ப்பவனா ஞானி ஞானி...?
கொஞ்சுகின்ற காமவெறி விஞ்சுகின்ற துன்துறவி
கொண்டவுளம்  நாறுகின்ற சாணி சாணி...!
காத்திடுவான் பொய்யெனவே! ஆற்றிடுவான் தொண்டெனவே!
கள்ளமிடும் தாடிகளா சாமி சாமி...?
கன்னியரின் பித்தர்களைப் புண்ணியராய்ப் போற்றுவதோ?
கடல்பொங்கி அழியட்டும் பூமி பூமி...!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

இலாவணியின் இலக்கணத்தைச் சிந்துப்பா மேடை 9 ஆம் பகுதியில் கண்டோம். இலாவணியின் ஓரடி 8 சீர்களைப் பெற்றுவரும். அவ்வடி இரட்டித்து 16 சீர்களைப் பெற்று வருவதுண்டு.

மேலுள்ள இலாவணி முதல் கண்ணி 'பொய்யுரையை' என்பது முதல் 'ஓட்டு' என்பது வரையில் ஓரடி.  ஒவ்வொரு அரையடியும் பொழிப்பெதுகைப் பெற்றுள்ளது [பொய் - நெய்] [பொன் - மின்] [மெய் - மொய்] [விடு - கேடு]

ஒவ்வொரு அரையடியின் முடிவும் அடுக்குத்தொடராக இயைபினைப் பெற்றுள்ளது. [கூட்டு கூட்டு, ஓட்டு ஓட்டு, பாட்டு பாட்டு, பூட்டு பூட்டு]

இரண்டு அரையடிகள் ஓர் இயைபையும், அடுத்த இரண்டு அரையடிகள் மற்றோர் இயைபையும் பெற்று வருவதுண்டு. மேலுள்ள இரண்டாம் கண்ணி இதற்குச் சான்றாகும்.

இவ்வாறு16 சீர்களைப் பெற்று வந்த இரண்டு அடிகள் ஓரெதுகையில் அமைவது இரட்டித்த இலாவணியில் ஒரு கண்ணியாகும். [பொய்யுரையை - மெய்யுரையை]

விரும்பிய பொருளில் ' இரட்டித்து வந்த இலாவணி' யில் ஒரு கண்ணி பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்,
கம்பன் கழகம், பிரான்சு,
தொல்காப்பியர் கழகம், பிரான்சு.
27.05.2020.

Aucun commentaire:

Enregistrer un commentaire