mardi 31 juillet 2018

சொற்பின்வருநிலை யணி



சொற்பின்வருநிலை
யணி
  
1.
அணிபடிக்கும் பெண்ணே! அணியே! அணியாய்ப்
பணிபடைக்கும் நற்பாவாய் பாராய்! - அணிசெய்[து]
அணிகொண்டு வாழ்கின்றாய்! ஆரமுதே உன்னால்
பிணிகொண்டு நீளுமென் பித்து!
  
அணி - இலக்கணம், அழகு. படை, அவங்காரம், பெருமை,
  
2.
காலை உதித்ததடி! காலை முழங்குதடி!
காலை கசக்குதடி கட்டழகே! - வேலை
வெறுக்குதடி! நற்காலை வேண்டியே பாடல்
கிறுக்குதடி நெஞ்சம் கிடந்து!
  
காலை - கதிரவன், முரசம், விடியற்காலை, நற்றருணம்.
  
3.
நுாலை நிகர்த்தவளே! நுாலை சுமப்பதுமேன்?
நுாலை யறியாமல் நோக்குவதேன? - மாலையுடன்
நுாலை அணிந்திடவும் நுாலை அமைத்திடவும்
நுாலை உணர்ந்தே நுவல்
  
நுால் - பஞ்சிநுால், படிக்கும் சுவடி, சாத்திரம், மங்கலநாண், ஆகமம், ஆலோசனை.
  
4.
குளிர்முருகு காய்க்குதடி! கோன்முருகு கோவில்
ஒளிர்முருகு காணுதடி! ஊரே - தெளிமுருகு
ஏற்றுச் சிறக்குதடி! இன்முருகு மாலையுடன்
போற்று! மனமுருகு பூத்து!
  
முருகு - எலுமிச்சை, முருகன், திருவிழா, அழகு, மணம், இளமை.
  
5.
மெய்யொளிர் பேரழகே! மெய்மொழி கூறுகிறேன்!
மெய்யொளிர் மேனியன் மேலாணை! - மெய்யுயிர்
ஒன்றும் உறவாக ஓர்நிலை ஊற்றிடுவோம்!
என்றும் உயிர்மெய் இசைத்து!
  
மெய் - உடல், உண்மை, மெய்ப்பொருள், ஒற்றெழுத்து, அறிவு.
  
6.
தேமா பழுத்ததடி! சீர்மா செழித்ததடி!
வா..மா விரைந்து வளமாபோல் - பாமா..உன்
கார்மா விழிகள் கவிமா புனையும்..நீ
தார்மா அணங்கின் தகை!
  
மா : மாமரம், நிலம், குதிரை, வண்டு, அழகு, இலக்குமி
  
7.
பாரொளி நாதனைப் பாடிப் பணிந்திடுவோம்!
காரொளி வானழகை கண்டுவப்போம்! - சீரொளி
பெண்ணழகே! பொன்னொளி பெற்றிடுவோம்! தாமரைக்
கண்ணழகே! இன்னொளி காட்டு!
  
ஒளி: சூரியன், நிலவு, விளக்கு, புகழ்
8.
ஆவி நிகர்த்தவளே! அன்பே! அரும்தேநீர்
ஆவி பறக்க அளித்தனையே! - ஆவியெனை
மேவி மயக்குதடி! மெய்யாவி பூக்குதடி!
கூவி நடத்துதடி கூத்து!
  
ஆவி : உயிர், புகை, வாசம், குளம்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
31.07.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire