dimanche 29 juillet 2018

வெண்பா மேடை - 90


வெண்பா மேடை - 90

சொற்பின் வருநிலையணி  வெண்பா

மாலை மயங்குதடி! மாலை தொடுத்திவோம்!
மாலை வணங்கி மகிழ்ந்திடுவோம்! - சோலைமதுப்
பாமாலை பாடிப் படைத்திடுவோம்! முன்வினையாம்
மாமாலை நீங்கும் மனத்து!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

ஒரு செய்யுளில் ஒரு சொல் பலமுறை வேறு வேறு பொருளில் பயின்று வருவது சொற்பின் வருநிலையணி எனப்படும்.

மேற்கண்ட வெண்பாவில் 'மாலை' என்ற சொல் ஐந்து முறை வந்து வேறு வேறு பொருளைக் கொண்டுள்ளது. [மாலைப்பொழுது, மலர்மாலை, திருமால், செய்யுள், இருள்]

இவ்வெண்பாவில் மாலை என்னும் சொலே  பின்னும் பல இடத்தும் வந்து வேறு பல பொருள் அளித்தமையால் சொற்பின் வருநிலையணி யாயிற்று.

இவ்வாறு ஓரேசொல் வேறு வேறு பொருளில் மூன்றுமுறைக்குக் குறையாமல்
வருமாறு, விரும்பிய பொருளில்  ஒரு வெண்பா பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து சொற்பின் வருநிலையணி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!

அன்புடன்

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
29.07.2018



Aucun commentaire:

Enregistrer un commentaire