வெண்பா மேடை - 80
இயைபு வெண்பா
வண்ணத் தமிழ்மொழியை வாயார நீ..வேண்டு!
நண்ணும் நலத்தை நனிவேண்டு! - பண்வேண்டு!
மண்ணும் மகிழ்ந்திடவே மன்னும் வளம்வேண்டு!
விண்ணும் பொழிந்திடவே வேண்டு!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
திருமுடியில் கண்ணியும் மாலையும் பாம்பு!
திருமார்பில் ஆரமும் பாம்பு! - பெருமான்
திருவரையில் கட்டிய கச்சையும் பாம்பு!
பெருபுயத்தில் கங்கணமும் பாம்பு!
[அருட்டிரு குமரகுருபர சுவாமிகள், சிதம்பரச் செய்யுள் கோவை]
எங்கும் தமிழ்மொழியை ஏந்தி மனம்பாடு!
பொங்கும் புகழ்நடை பூத்தாடு! - செங்காடு!
தங்கும் நலங்களைச் சாற்றும் குறளேடு!
தொங்கும் மணியெழில் சூடு!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
மேற்கண்ட வெண்பாக்கள் அடிதோறும் இயைபு பெற்று வந்துள்ளதால் இயைபு வெண்பா என்று பெயர்பெறும்.
முதல் வெண்பா 'வேண்டு' என்ற சொல்லை அடிதோறும் ஈற்றில் பெற்றிள்ளது. இரண்டாம் வெண்பா 'பாம்பு' என்ற சொல்லை ஈற்றில் பெற்றிள்ளது. முன்றாம் வெண்பா 'டு' என்ற எழுத்தை ஈற்றில் பெற்றிள்ளது.
சீரால் அல்லது அசையால், அடிதோறும் ஈற்றில் ஒன்றிவரும் வண்ணம் இயைபு வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் கிளி வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.07.2018
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
16.07.2018

Aucun commentaire:
Enregistrer un commentaire