lundi 9 juillet 2018

வாடுகிறேன்!


வாடுகிறேன்!
  
கோடி முத்தம் கொடுத்தவளே!
   கோபம் ஏனோ உனக்கின்று?
பாடிப் பாடி உன்னழகைப்
   பருகும் புலவன் வாடுகிறேன்!
மாடி மீது நாம்கண்ட
   மகிழ்வை எண்ணி மனமேங்கும்!
ஆடிக் களித்த நாள்யாவும்
   அன்பே கண்முன் தெரியுதடி!
  
செல்லக் கிளியே! செங்கனியே!
   சீற்றம் ஏனோ உனக்கின்று?
சொல்லச் சொல்லச் சுவையேறிக்
   சொக்கும் புலவன் வாடுகிறேன்!
வெல்லம் கூடக் கசக்குதடி
   விழிகள் பேசும் கவியின்றி!
இல்லம் இருளில் முழுகுவதோ?
   இனிய நிலவே வந்திடுவாய்!
  
கொஞ்சிப் பேசும் பூங்குயிலே!
   கொத்தி உயிரைக் கிழிக்காதே!
நெஞ்சிக் குள்ளே ஆசையலை
   விஞ்சிப் பாயும் தடுக்காதே!
நஞ்சிக் கிழியும் துணியாக
   நாள்கள் நகரும் நீ..யின்றி!
வஞ்சிக் கொடியே வந்திடுவாய்!
   வளத்தை மீண்டும் தந்திடுவாய்!
  
வீசும் காற்றைத் தடுப்பார்..யார்?
   விரிவான் கதிரை மறைப்பார்..யார்?
பாச வுணர்வைச் சிறையிட்டுப்
   பதுக்கி வைக்க முடிந்திடுமோ?
பேசும் திருவாய் வாடுதடி!
   பெண்ணே உன்னைத் தேடுதடி!
வாச மலரே! வானமுதே!
   மழைபோல் இன்பம் பொழிவாயே!
  
சிங்கக் குட்டி என்பாயே!
   சிரித்து மனத்தைக் கொல்வாயே!
தங்கக் கட்டி என்பாயே!
   தமிழால் என்னை வெல்வாயே!
சங்கப் புலவன் என்பாயே!
   சந்தம் மீட்டச் சொல்வாயே!
சுங்கச் சிதறும் கற்கள்போல்
   துாய நெஞ்சை உடைப்பதுவோ?
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.07.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire