samedi 24 mai 2014

கோபம் ஏனடி?



கோபம் ஏனடி?

கோபம் ஏனடி? - பொய்க்
கோலம் ஏனடி? - கண்ணே...  
                                                                                                   (கோபம்)

தொடுப்பு

தீபம் நீயடி! - என்
தீபம் நீயடி! - பெண்ணே...
                           (கோபம்)

முடிப்பு

கொஞ்சும் கிளியே! கொள்ளை அழகே! -  இளம்
வஞ்சிக் கொடியே! வண்ண மயிலே!
விஞ்சும் சுவையில் விளைந்த கனியே! - என்
நெஞ்சுக் குள்ளே நிறைந்த தமிழே! ...என்மேல்
                                        (கோபம்)

கொடியும் தானே கொழித்து வளரும்! - பூஞ்
செடியும் தானே செழித்து மலரும்!
விடியும் பொழுதும் விரையும் நதியும் - தாமே
தொடரும் செயலாய்ப் படரும் உறவே! ...என்மேல்
                                        (கோபம்)

மண்ணை வெறுக்கும் மழையும் உண்டோ? - நம்
கண்ணை வெறுக்கும் கலையும் உண்டோ?
விண்ணை வெறுக்கும் விண்மீன் உண்டோ? - நற்
பண்ணை வெறுக்கும் புலவன் உண்டோ? ...என்மேல்
                                        (கோபம்)

வண்டை வெறுக்கும் மலரும் உண்டோ? - சுவை
கண்டை வெறுக்கும் நாவும் உண்டோ?
தண்டை வெறுக்கும் காலும் உண்டோ? - உயர்
தொண்டை வெறுக்கும் உலகம் உண்டோ? ...என்மேல்
                                        (கோபம்)

அன்பைப் பொழியும் அருளே! அழகே! - வான்
அமுதைப் பொழியும் அறமே! அறிவே!
இன்பைப் பொழியும் நிலவே! நினைவே! - வாழ்வு
இயலைப் பொழியும் வரமே! வாழ்வே! ...என்மேல்
                                        (கோபம்)

22.05.2014

12 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    மனதை அள்ளிச்செல்லும் பாடல்... ஒவ்வொரு சீரும் நன்றாக உள்ளது.பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  3. இப்படியெல்லாம் பாடல் கிடைக்கும் என்றால்
    அந்தப் பெண் கோபத்துடனேயே இருக்கலாம் தான்!!

    அழகானப் பாடல். அருமை.

    RépondreSupprimer
  4. அழகான பாடல், அடடா கோபம் கொண்டால் தான் வஞ்சிக்கு பெருமையோ. இனிய பாடல் கொடுத்தால் யார் தான் கோபிக்க மாட்டார்கள்.
    நன்றி வாழ்த்துக்கள் ....!

    RépondreSupprimer
  5. மனதை கொள்ளை கொள்ளும் பாடல்

    RépondreSupprimer
  6. வணக்கம் !
    அது சரி இந்தப் பாடலை பார்த்த பின்னரும் எந்தக் கோவமும் நிலைக்காதே ! :))
    வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான வரிகளிற்கு .

    RépondreSupprimer
  7. இத்தனை சிறப்பு மிக்கவளுக்கு அப்படிக் கோபம் வர
    என்ன செய்தீர்கள் கவிஞரே?..:)

    கவிதை மிக மிக அருமை!
    வாழ்த்துக்கள் கவிஞரையா!

    RépondreSupprimer
  8. அழகான சிறப்புமிக்கவரிகள் கொண்ட பாடல்.

    RépondreSupprimer
  9. சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  10. கொஞ்சு தமிழ்க்கவிதை கேட்க விருப்புற்றோ
    வஞ்சிவராக் கோபம் வருவித்தாள் - நெஞ்சம்
    இனிப்புற்று நின்றோம் இதம்நல்கும் சந்த
    கனிபற்றி நின்ற கவி!

    RépondreSupprimer
  11. சிறந்த இசைப் பாடல் ஐயா!

    RépondreSupprimer
  12. இன்பக் கவிஈந்த ஏழிசை ராகங்கள்
    அன்பில் முகிழ்ந்த அழகு !

    அழகிய வரிகளில் ஆழமான ஏக்கம்
    இனிய வாழ்த்து கவிஞரே
    வாழ்க வளமுடன் 12

    RépondreSupprimer