mardi 18 mars 2014

சொல்லோவியம் - [பகுதி - 6]




சொல்லோவியம்

51.
மச்சானே தைமாதம்
அச்சாரம் போட்டிடவா!
உச்சிமுதல் கால்வரையில்
உணர்ச்சிகளை மூட்டிடவா!

52.
வெண்தாழைக் காட்டுக்குள்
பொன்பாதை போட்டவனே!
பெண்போதை பெற்றிடவே
பேரின்பம் மீட்டவனே!

53.
காவிரியின் கரையிரண்டும்
பூவிரித்தே ஆடுதடா!
பாவி..மக நெனப்பெல்லாம்
பாமகனைத் தேடுதடா!

54.
பனி..பொழியும் காலையிலே
கனி..பொழியும் பொற்கவியே!
நனிபொழியும் இன்பத்துள்
நனைக்கின்ற நற்கவியே!

55.
தொழும்பொழுதும் உன்நினைவு
தூபமென மணக்குதடா!
முழுநிலவு வந்தாலே
என்மூச்சுக் கனக்குதடா!

56.
நிலமெல்லாம் உறங்குகையில்
நினைவலையைத் தொடுப்பவனே!
நிலவில்லா நள்ளிரவில்
நித்திரையைக் கெடுப்பவனே!

57.
அரிமுகத்து நாயகனே!
நரிமுகத்தில் முழித்தவனே!
மருக்கொழுந்து மடியினிலே
மாலைவரை கழித்தவனே!

58.
குடித்தண்ணீர்க் குளக்கரையில்
குழலூதி அழைத்தவனே!
அடி..கண்ணே என்றென்னை
அப்படியே அணைத்தவனே!


59.
தெருவெல்லாம் கொண்டாட்டம்!
திருமஞ்சள் தேரோட்டம்!
வருகின்ற மச்சான்மேல்
மகிழ்ந்தாடும் நீராட்டம்!

60.
தேரோடும் வீதியிலே
தேடிவந்த என்..தேவா!
போராடும் இளமையினால்
போகின்றேன் நான்..நோவா!

(தொடரும்)

12 commentaires:

  1. அழகான ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தெம்மாங்குப் பாட்டில் திரண்டொழுகும் தேனுண்டு
      செம்மாந்து வாழ்வோம் சிறந்து!

      Supprimer
  2. காதல் மிளிரும் சிறப்பான சொல்லோவியம். ரசித்தேன்!
    நன்றி!தொடர வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல் கமழும் கவிதையை நாள்தோறும்
      ஓத ஒளிரும் உயிர்!

      Supprimer
  3. #முழுநிலவு வந்தாலே
    என்மூச்சுக் கனக்குதடா!#
    #நிலவில்லா நள்ளிரவில்
    நித்திரையைக் கெடுப்பவனே!#
    இப்படி மாசம் முச்சூடும் தலைவியை தவிக்க விடுவது தலைவனுக்கு அழகா ?
    த ம +1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மெச்சிடும் வண்ணத்தில் மேன்மைதரும் ஓவியத்தில்
      முச்சூடும் மோகம் முளைத்து

      Supprimer
  4. வணக்கம் !
    காதல் தேன் சொட்டச் சொட்டக்
    களித்தேன் மனம் உருகி
    மோதல் தான் வருமோ இங்கே
    மோகனப் புன்னகை தாங்கும் வண்டே !!

    வாழ்த்துக்கள் ஐயா .த .ம .5

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      காதல்தேன் சொட்டுகின்ற கன்னல் கவிதைகளை
      ஓதப் பிறக்கும் ஒளி!

      Supprimer
  5. அழகான காதல் சொல்லோவியம்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓவியக் காதலை ஓதிக் களித்திட்ட
      தேவியே வாழ்க செழித்து!

      Supprimer
  6. ஆசையெல்லாம் சொல்லுகிறாள்
    அம்பலத்தில் அத்தைமகள்!
    ஓசையின்றி இருப்பதேனோ
    உணர்வுள்ள அத்தைமகன்?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      ஓசை தொடா்ந்தோங்கும்! ஒண்கவி பேரழகில்
      ஆசை பெருக்கெடுக்கும் ஆழ்ந்து!

      Supprimer