சொல்லோவியம்
61.
அரசமரத் தடியினிலே
அன்றாடம் நிற்பவனே!
வருசமெலாம் பரிசளிக்கும்
வளமுடைய கொற்றவனே!
62.
சந்தையிலே எனைப்பார்த்துப்
சந்தங்கள் படிக்காதே!
மொந்தையென என்னழகை
மூச்சுமுட்ட குடிக்காதே!
63.
கோலாட்டம் ஆடுகையில்
குரங்காட்டம் யென்மச்சான்?
பாலாட்டம் நானுருக்கேன்
பசியோடு வா..மச்சான்!
64.
சேலாட்டம்! வேலாட்டம்!
சிறைப்படுத்தும் விழியாட்டம்!
வாலாட்டம் காட்டுவதேன்
மச்சானுன் மொழியாட்டம்!
65.
புலியாட்டம் போட்டுவரும்
பொல்லாத போக்கிரியே!
கிளியாட்டம் இருந்தவளைக்
கேள்விக்குறி ஆக்கிரியே!
66.
சிலம்பாட்டம் ஆடுகின்ற
சிங்கார வன்மறவா!
மலராட்ட மங்கையினை
மணந்தாட வா..உறவா!
67.
குயிற்கூட்டம் கண்டவுடன்
கோதைமனம் வாடுமடா!
மயிலாட்டம் கண்டவுடன்
உயிராட்டம் போடுமடா!
68.
விண்ணுலவும் வெண்மதிபோல்
கண்ணுலவும் பொன்னழகா!
பெண்ணிளகும் வண்ணத்தில்
பண்ணருளும் இன்னழகா!
69.
கோட்டுக்குள் சடு..குடுவைக்
குறும்பாக ஆடுவதேன்?
பாட்டுக்குள் என்பெயரைப்
பக்குவமாயப் பாடுவதேன்?
70.
கோட்டிப்புல் ஆடுகையில
கூர்ந்தென்னை முறைப்பதுமேன்?
வீட்டுக்குள் என்னழகை
விளையாடி இறைப்பதுமேன்?
(தொடரும்)
இனிமையான வரிகள்... ரசித்தேன் பலமுறை...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவணக்கம்!
இளமை இனிமை இசைக்கின்ற பாட்டில்
வளமை பெருகும் வழிந்து!
வணக்கம் !
RépondreSupprimerஅழகான சொல்லோவியம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா .
Supprimerவணக்கம்!
அருந்தமிழ்த் தோழி! அழகோவி யத்தில்
வருந்தமிழ் ஓங்கும் வளா்ந்து!