jeudi 27 mars 2014

கனிவிருத்தம் - பகுதி 2




கலிவிருத்தம் () கனிவிருத்தம்

6.
உன்னழகு மதுகுடித்து இளநெஞ்சம் உளறுவதால்
கண்ணழகு காட்சிகளில் மலர்மஞ்சம் கமழுவதால்
பொன்னழகு சுடா்பட்டுப் புலவனுளம் பொங்குவதால்
என்னழகு முன்னழகோ? என்னவளே நீ..வேண்டும்!

7.
விழிகேட்ட கேள்விக்கு விடைகேட்டு நிற்கின்றேன்
வழிகாட்டும் மன்மதனோ வந்தம்பை எய்துகிறான்!
மொழிகேட்டு மயங்குகிறேன்! மோகத்தால் வாடுகிறேன்!
பழிபோட்டுப் பார்த்தாலும் பதில்எழுத நீ..வேண்டும்!

8.
கள்கொடுக்கும் சுகமடுத்து! கனிகொடுக்கும் சுவையெடுத்து!
சிள்ளிழுக்கும் இசையெடுத்து! சேர்ந்திழுக்கும் விசையெடுத்து!
சொல்லினிக்கும் அடியெடுத்து! சுரந்தினிக்கும் மதுவெடுத்து!
உள்ளிருக்கும் உணர்வெடுத்து ஓதிடவே நீ..வேண்டும்!

9.
பா..நினைத்த வுடன்பாடும் பைந்தமிழின் செல்லமகன்!
நீ..நினைத்த வுடன்ஆடும் நெஞ்சத்தைப் பெற்றமகன்!
வா..நினைத்த வுடன்அருகே! வற்றாத வளமருகே!
தா..நினைத்த வுடன்சுகத்தை! தந்திடுவாய் பொன்னலத்தை!

10.
மண்ணுக்கு மணமுண்டு! மலருக்குள் மதுவுண்டு!
கண்ணுக்குக் கலையுண்டு! கவிதைக்குக் கருவுண்டு!
பெண்ணுக்குப் பேறுண்டு! பெருமைக்குத் தமிழுண்டு!
என்னிடத்தில் நீயுண்டு! உன்னிடத்தில் நானுண்டு! 

தொடரும்

18 commentaires:

  1. வணக்கம் !
    தித்திக்கும் வார்த்தைகளால்
    தெவிட்டாத கவிதை தந்தாய்
    எத்திக்கும் புகழ் பரப்பி
    என்றென்றும் வாழிய நீ ...

    வாழ்த்துக்கள் ஐயா .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      எட்டுத் திசைகளிலும் இன்பத் தமிழ்க்கவியைக்
      கொட்டி முழங்குவேன் கூா்ந்து!

      Supprimer
  2. https://www.youtube.com/watch?v=WxY5oowyVpU

    இந்த மெட்டில் பாடிப் பார்த்தேன்.

    ஆஹா. என்ன சுகம் !! என்ன இனிமை !
    ஒவ்வொரு எழுத்திலும்
    ஒவ்வொரு சொல்லிலும்
    என்ன ஓர் இளமை !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமை மிளிரும் இளையவளைப் பாட
      வளமை மிளிரும் வளா்ந்து!

      Supprimer
  3. அனைத்தும் அருமை ஐயா... அதிலும் "உண்டு உண்டு" மிகவும் ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இன்பத் தமிழுண்டு எழுதும் கவியனைத்தும்
      என்றும் இருக்கும் இனித்து!

      Supprimer
  4. காயெல்லாம் வந்திருக்கும் கனிவிருத்தம் இனிக்கிறது!
    வாயெல்லாம் பூவாக வளர்தமிழால் மணக்கிறது!
    நோயெல்லாம் பறந்துவிடும்! நுண்தமிழால் கவிபடித்தால்!
    நீ..எல்லாம் எழுதிவிட்டால்.. நானெதைதான் எழுதுவதோ?

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பஞ்சமிலாச் சொல்லிருக்கப் பாமகளே ஏன்வருத்தம்?
      நெஞ்சமெலாம் தமிழிருக்க நோிழையே ஏன்கோபம்?
      கஞ்சமிலாக் கருத்தேந்து! கவிகோடி பிறந்தாடும்!
      வஞ்சமிலாப் புலவன்நான் வாயார வாழ்த்துகிறேன்!

      Supprimer
  5. உள்ளிருக்கும் ஆன்மாவின் உயிரணுவில் துளியெடுத்து
    பள்ளியறைக் கனவுகளின் பவ்வியத்தில் மடலெடுத்து
    வெள்ளிநிலா வெளிச்சத்தில் விரகத்தின் அணையுடைத்து
    அள்ளியின்பக் கவியெழுத ஆசிரியன் நீ..வேண்டும் ..!

    காற்றுக்கும் உயிரூட்டி கருவாக்கும் ஒளிகொடுத்து
    சேற்றுக்குள் தாமரையும் செழித்திருக்க வகைசெய்து
    மாற்றங்கள் செய்கின்ற மகாகவியே உன்போன்று
    ஏற்றங்கள் என்னுள்ளே எழுந்திடவும் நீ..வேண்டும் !

    என்னவென்று சொல்வேன் இன்பக் கவியிதர்க்கு
    பொன்னென்று சொன்னாலும் பொருந்திடுமோ நானறியேன் ,!

    அருமை அருமை கவிஞர் அண்ணா
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
    ( கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழியாய்... என்கிறுக்கல்
    தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் ) த ம 8

    RépondreSupprimer
    Réponses

    1. சிறந்த கருத்தெழுதிச் சிந்தனையைத் தொட்டாய்!
      மறந்தேன் சிலநொடிகள் மண்ணை! - பறந்தேன்
      உன்றன் கவிபடித்து! உள்ளுவந்து வாழ்த்துகிறேன்
      என்றன் தமிழ்போல் எழுது!

      Supprimer
  6. Réponses

    1. வணக்கம்!

      கனிவிருத்தம் உண்டுவந்தால் காதல் பிறக்கும்!
      இனிவருத்தம் ஓடும் எழுந்து!

      Supprimer
  7. பைந்தமிழில் பா தொடுத்து
    பார் முழுதும் மணம் பரப்பும்
    பா வேந்தரே உம்புகழ்
    நிலைக்கட்டும் நிலையாய்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாவேந்தா் பேரேற்றுப் பாடுகின்ற பாவலன்!என்
      நாவேந்தும் நற்றமிழை நன்கு!

      Supprimer
  8. உண்டென்ற வார்த்தையதும் உம்பாடல் கேட்டே பிறந்திருக்குமோ ?
    ஆஹா என்ன அருமையான வார்த்தையாடல் அகமகிழ்ந்தேன் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்லாடும் பெண்ணவள்! சொக்கி எனைநாளும்
      அல்லாடச் செய்யும் அழகு!

      Supprimer

  9. என்னழகுப் பாக்கள்! இனியயென் உள்ளத்துள்
    பொன்னழகு போந்து பொலிந்தனவே! - பன்னழகு
    ஏற்றி இசைக்கும் புலமையினை இவ்வுலகு
    போற்றி இசைக்கும் புகழ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னழகு! என்னவளின் கண்ணழகு! என்சொல்வேன்?
      முன்னழகு! பின்னழகு! பொன்னழகு! - பெண்ணழகே
      என்றுநான் எண்ணியே பின்னிய இன்றமிழ்
      மின்னுமே மண்ணுலகை வென்று!

      Supprimer