சொல்லோவியம்
71.
ஆடுபுலி ஆட்டத்தில்
அசராமல் வெட்டுகிறாய்!
பாடுபுலி போலிங்குப்
பாமாலை கட்டுகிறாய்!
72.
பள்ளாங்குழி ஆட்டத்தில்
பாவையெனை அள்ளுகிறாய்!
முள்ளாஞ்செடி மீசையினால்
மோகத்தைக் கிள்ளுகிறாய்!
73.
தாமரைப்பூ.. குளத்தினிலே
தந்தசுகம் அப்பப்பா!
மாமரையின் மன்னவனே
மணநாளும் எப்பப்பா?
74.
அல்லிப்பூ.. குளக்கரையில்
சொல்லிற்பூ சூட்டியவா!
மல்லிகைப்பூ.. கொடியருகே
மயக்கத்தை ஊட்டியவா!
75.
வாழையிலை பறித்திடவே
வந்தவளைத் தின்றவனே!
ஏழையெனை எளிதாக
ஏமாற்றி வென்றவனே!
76.
மத்தாப்பு வித்தைகளை
மாமா..நீ காட்டாதே!
கொத்தா..பூ பறித்துவந்து
கொடுத்தாசை மூட்டாதே!
77.
குரங்காட்டக் காரனுடன்
கூத்தாடும் கோமகனே!
இரங்காத என்னெஞ்சுள்
இடம்பிடித்த பாமகனே!
78.
கரகாட்டக் காட்சிகளைக்
காணவந்த கலைமகனே!
வரமாக நானுற்ற
வண்டமிழின் தலைமகனே!
79.
கோதையிவள் மயங்கிடவே
குழலூதும் கோகுலனே!
பாதையெலாம் மலர்ந்திடவே
பண்பாடும் பாவலனே!
80.
கண்ணான காதலனே!
கவிபாடக் கற்றவனே!
பெண்ணாகி நான்ஒளிரப்
பேரழகு பெற்றவனே!
(தொடரும்)
வணக்கம் !
RépondreSupprimerசொற்சுவையும் பொருட்சுவையும்
சோர்வின்றி நடை பயில
அற்புதமாய் விளைந்திருக்கும்
அழகிய சொல்லோவியம் ..!!
வாழ்த்துக்கள் ஐயா .
Supprimerவணக்கம்!
அழகிய சொல்லோ லியத்தை அருந்திப்
பழகிட ஓங்குமே பாட்டு!
ரசிக்க வைக்கும் வித்தையான வரிகள் ஐயா...
RépondreSupprimerவாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
தனபாலன் தோழா! தமிழ்வலையை நாளும்
மனப்பாடம் செய்வாய் மகிழ்ந்து!
ஆகா ஆகா
RépondreSupprimerஅருமை.
மோகம் பிறக்க வைக்கும் கவிதை
Supprimerவணக்கம்!
மோகம் கொடுக்கும்! முதிர்ந்தகனி யாயினிக்கும்!
தாகம் கொடுக்கும் தமிழ்!