dimanche 23 mars 2014

சொல்லோவியம் - [பகுதி - 10]




சொல்லோவியம்

91.
சிவப்புநிறச் சட்டையில
சிந்தனையைச் சிதைக்கிரியே!
தவத்துநிறை தண்டமிழைத்
தழைத்திடவே விதைக்கிரியே!

92.
கறுப்புநிறச் சட்டையில
கருத்தாக நடக்கிரியே!
பொறுப்பாக நம்முடைய
பொருத்தத்தைப் படிக்கிரியே!

93.
ஒத்தையடிப் பாதையில
புத்துலகைக் காட்டியவன்!
சத்தியமா என்னழகைத்
தானுறுஞ்சும் அட்டையவன்!

94.
மல்லாட்ட பொறுக்கையில
மல்லுகட்டும் என்..ராசா!
நல்லாத்தான் பேசற ..நீ
நாணமுறும் இவ்ரோசா!

95.
களைவெட்டும் காலையிலே
கண்ணடிக்கும் நற்கள்ளா!
சுளைசொட்டும் கவிமொழியால்
தூளானேன் நான்..எள்ளா!

96.
வயலாடும் வரப்பினிலே
வம்பாடும் வல்லவனே!
கயலாடும் கண்ணோடு
கவிபேசும் பல்லவனே!

97.
பெண்ணழகைப் பேசுங்கவி
மின்னிடுமே ஓவியமாய்!
மண்ணழகு வாய்த்திடவே
மணந்திடுமே காவியமாய்!

98.
பண்பாளா உனைப்பாட
பண்கோடி வேண்டுமடா!
கண்ணாளா உனைக்காணக்
கண்கோடி வேண்டுமடா!

99.
கண்கவரும் ஆணழகா!
கவிசொல்லும் தேனழகா!
உன்னோடு சேர்ந்தமுதல்
ஒளிர்கின்றேன் நானழகா!

100.
என்மண்ணின் மணமாக
எழுதிவைத்த கவிநூறு!
என்கண்ணின் ஒளியாக
இருக்கின்ற தமிழ்ப்பேறு!

9 commentaires:

  1. அருமையான வர்ணனையை மிகவும் ரசித்தேன் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தேனின் சுவையெனத் தீட்டிய செந்தமிழை
      ஊனின் குருதியென ஓது!

      Supprimer
  2. என்மண்ணின் மணமாக
    எழுதிவைத்த கவிநூறு!
    என்கண்ணின் ஒளியாக
    இருக்கின்ற தமிழ்ப்பேறு!

    பேறு பெற்ற சொல்லோவியம் அருமை..!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      பாட்டரசன் பாரதிபோல் பாவெழுதி வான்புகழை
      ஈட்டரசன் ஆவேன் இனித்து!

      Supprimer
  3. தங்கள் கண்ணின் ஒளியாக
    என்றுமே இருப்பது தமிழ்ப் பேறு

    RépondreSupprimer
    Réponses

    1. கற்றேன் கவியுலகை! கன்னல் தமிழ்பாடிப்
      பெற்றேன் புகழ்எனும் பேறு!

      Supprimer
  4. Réponses

    1. வணக்கம்!

      தண்டமிழ் உண்டு தருகின்ற வாக்கெண்ணிக்
      கொண்டேன் இனிமை கொழித்து!

      Supprimer
  5. அருமையான வர்ணனையை மிகவும் ரசித்தேன் ஐயா...

    RépondreSupprimer