mercredi 3 avril 2013

காதல் ஆயிரம் [பகுதி - 70]





காதல் ஆயிரம் [பகுதி - 70]

திருத்தசாங்கம்

691.
பெயர்
பச்சைக் பசுங்கிளியே! பாவை பெயரறிந்து
உச்சி குளிர உரைத்திடுவாய்! - கச்சணிந்த
வண்ணச் சிலையாக வார்த்த கவியரசி!
எண்ணம் இனிக்கும் இயம்பு!

692.
நாடு
கொஞ்சும் கிளியே! குளிர்கோதை நன்னாட்டை
நெஞ்சம் மகிழ நெகிழ்ந்தோது! - வஞ்சியவள்
எங்கும் எழில்மணக்கும் ஈடில் தமிழ்நாடு!
பொங்கும் புதுமைப் பொலிவு!

693.
நகர்
பேசும் இளங்கிளியே! பெண்ணவள் ஊர்என்ன?
வாசம் அறிந்து வழங்குகவே! - வீசுகின்ற
காற்றில் தமிழ்மணக்கும்! கன்னல் கவிப்புதுவை!
போற்றும் புலவர் பொழில்!

694.
ஆறு
களிக்கும் கனிக்கிள்ளாய்! கன்னி உவந்து 
குளிக்கும் நதியைக் கொடுப்பாய்! - அளிக்கின்ற
இன்றேன் இளையவளின் மென்குரல்! எந்நாளும்
அன்பே அவள்கொண்ட ஆறு! 

695.
மலை
மழலை மொழிக்கிளியே! மங்கை வளஞ்சேர்
அழகு மலையை அளிப்பாய்! - பொழுதும்
விழுங்கும் உணர்வுகளை வெல்லும் மலைகள்
வழங்கும் கவிதை மது!

696.
ஊர்தி
தங்கமனத் தத்தையே! சங்கத் தமிழ்பாடி
மங்கை வளம்வந்த தேர்வரைக! - இங்கவள்
பொன்னொளி மின்னிடப் போகுமெழில் தேராகும்!
இன்னொளி வீசும் இயல்பு!

697.
படை
பவள மணிப்பிள்ளாய்! பாடிக் களிக்கும்
அவளின் படையை அரைவாய்! - சுவை..தேன்
குவளை மலர்கள் கொடுகின்ற வில்கள்
நுவளும் படையென நோக்கு! 

698.
முரசு
சின்ன மணிக்கிளியே! சிங்காரப் பெண்ணவள்
மன்னு புகழ்முரசை வந்துரைப்பாய்! - வென்றிடவே
மோதல் புரிகின்ற மோக விழியிமைகள்
காதல் முரசெனக் காண்!

699.
தார்
கோவைப் பழமூக்கி! கோலத் தமிழ்மணக்கப்
பாவை அணிந்திட்ட தார்..பாடு! - பூவையவள்
வெல்மாலை கொண்டொளிரும் வேந்தரையும் வீழ்த்துகின்ற
சொல்மாலை கொண்டாள் சுடர்ந்து!

700.
கொடி
சின்னஞ் சிறுகிளியே! சித்திரச் செல்வியின்
மின்னும் கொடியை விளம்பிடுக! - இன்பமுற
ஆடி அசையும் கொடியிடை! கற்பனையைக்
கோடி கொடுக்கும் குவித்து!

(தொடரும்)

10 commentaires:

  1. ரசம்!
    காரம்தான்!

    அய்யா-
    உங்கள்
    கவிதை ரசம்-
    ரசனைதான்!

    RépondreSupprimer
  2. ஒரு கவிதை எழுதவே ஒரு மணி நேரம் பிடிக்கிறது.அலட்சியமாக நாளுக்கு பத்து கவிதைகள் எழுதுகின்றீர்களே.கவிதைகள் சிறப்பாக இருக்கின்றன ஐயா

    RépondreSupprimer
  3. ஐயா... திருத்தசாங்கம் என்ற இந்தப் பத்துவகை அங்கங்கள் தாங்கிய வெண்பாக்கள் பாடுவதுண்டு எனக் கேள்விப்பட்டதுண்டு. இன்று உங்கள் வெண்பாக்களால் அதை அறிந்துகொண்டேன்.

    எமக்காவே இலகுவான சொற்பதங்களுடன் பாடியுள்ளீர்கள். அத்தனையும் மிகமிக அழகாக இருக்கின்றன. மிக்க மகிழ்வாயிருக்கின்றது.
    அருமை ஐயா. உங்களின் இந்த அரும்பெரும் சேவையால் எம் தமிழ்மொழி சீர்பெற்று வாழ்வாங்கு வாழும்.

    என் அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா... இணைத்த படமும்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  5. அருமையாக இருக்கு நாடு பற்றிய கவிதை தொடரட்டும் ஐயா !

    RépondreSupprimer
  6. சொல்லச் சொல்ல சுவை மிகும்
    வார்த்தைகளுக்கு ஏது எல்லை
    இன்பக் கவிதை வடித்தே
    இணைந்தே இருப்போம் எந்நாளும்
    வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி
    பகிர்வுகளுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மெல்ல நடந்துவரும் மேகலையை! என்னுயிரைக்
      வெல்ல நடந்துவரும் விண்மதியை! - நல்லமுதை!
      செல்லத் திருமகளை! செம்மலரை! செந்தேனை!
      சொல்லச் சுரக்குமே சொல்!

      Supprimer

  7. எழுநூறு பாக்கள் இயம்பிய இன்பம்
    பழுதொன்றும் இல்லை படிக்க! – முழுதும்
    தொழுதூறும் காதல் துடிப்புகளை எண்ணும்
    பொழுதுலகம் போற்றும் புகழ்ந்து!

    -

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      என்னவள் தந்த எழுநுாறு வெண்பாக்கள்
      இன்..அவல் நல்கும் இனிப்பென்பேன்! - என்னுயிர்க்
      கண்ணவள்! காதல் கனியவள்! இன்பத்தின்
      விண்ணவள் என்றே விளம்பு!

      Supprimer

  8. வணக்கம்!

    மரபுக் கவிநாடி வந்தவரே! தேனாய்
    விரவும் கருத்தை விளைத்தவரே! - திருவின்
    வரவாய் வணங்குகிறேன் உம்மை! இனிய
    பரவும் தமிழைப் படைத்து!

    RépondreSupprimer