samedi 30 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 68]



காதல் ஆயிரம் [பகுதி - 68]


671.
மெல்லக் கதைபேசி மேனி சிளித்திடவே
செல்லக் கதைபேசிச் செல்வதுமேன்? - உள்ளத்தை
அள்ளிக் கதைபேசி ஆருயிரே! ஆசைகளைத்
துள்ளிக் கதைபேசி தூண்டு!

672.
மணியான பெண்ணே! மணக்கும் கவிதை
அணியான பெண்ணே! அமுதே! - கனிகளுக்கு
இணையான பெண்ணே! இதய உணர்வுக்கு
அணையான பெண்ணே! அணை!

673.
எண்ணும் பொழுதெல்லாம் இன்பம் சுரக்குதடி!
கண்ணும் எழில்மூக்கும் மின்காதும் - கொண்டொளிரும்
பேரழகை! பெண்ணின் பெருந்தக்க யாவுள?
பாரழகை யாவும் படைத்து!

674.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடிபோல் என்னுள்ளம்
பாடிக் கொடுத்த பசும்பாக்கள்! - கோடிமுறை
வந்து மயக்கும் மனத்தைப்! பொழுதெல்லாம்
தந்து மயக்கும் தமிழ்!

675.
ஆண்டாள் அளித்த அருந்தமிழாய் என்னகத்தை
ஆண்டாள்! அளந்தாள்! அமுதளித்தாள்! - தூண்டிலில்மீன்
மாட்டித் துடிக்கும்! மலரவள் பேரழகைத்
தீட்டித் துடிக்கும் திறம்

676.

எள்ளி நகையாடி என்னவனைப் பந்தாடிக் 
கள்ளி களிப்பாளோ? கண்ணாளா! – பள்ளியிலே 
அள்ளி அரவணைத்து ஆரமுதச் சூத்திரத்தைச் 
சொல்லிக் கொடுப்பாய் தொடர்ந்து!  


677.
இளைத்திருப்பாள் என்றே மனஞ்சோர்ந்து காளை
களைத்திருக்கும் காரணம் என்ன? - உளத்துள்
விளைந்திருக்கும் இன்பம்! விரித்திருக்கும் காதல்
நிலைத்திருக்கும் என்றும் நிறைந்து! 

678.
நினைந்திருக்கக் காதல் கவிமழையில் நெஞ்சம்
நனைந்திருக்க நன்றே இனிக்க! - கனிந்து
பிணைந்திருக்க! எல்லாப் பிறவியிலும் உன்னை
இணைந்திருக்க ஏங்கும் இளைத்து!

679.
உன்னை மறப்பதா? ஒப்பில் தமிழ்கமழும்
பண்ணை மறப்பதா? பாவலனே! - பெண்ணுயிர்
தன்னை உணர்ந்திங்குச் சந்தத்தில் பாடிநம்
அன்னைத் தமிழை அளி!

680.
ஏதுமறி யாதவளாய் என்னையே பார்க்கின்றாய்!
சூதுமறி யாதவளாய்ச் சொல்கின்றாய்! - மாதவளே!
மோதுமடி உன்விழிகள்! மூடி மறைக்காதே!
போதுமடி உன்றன் புளுகு!

(தொடரும்)

2 commentaires:

  1. ஐயா வணங்குகிறேன்!
    இன்று நடைபெற இருக்கும் திருக்குறள் அரங்கம் 26 இனிதே நடைபெற நல் வாழ்த்துக்கள்!
    தமிழுக்காக ஆற்றும் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க என் அன்பு வாழ்த்துக்கள்!

    வாழ்க வளமுடன்!

    RépondreSupprimer
  2. மொழியோடு இணைந்து மின்னிடும் பாக்களை
    சுழியோடிச் தருகின்றீர் சுவைக்கத் தேன்
    வழிந்தோடும்! எமதுயிரும் வரும்சேர்ந்து தமிழ்
    எழிலோடு விளையாடிடத் தினமும் தொடர்ந்து...

    RépondreSupprimer