காதல் ஆயிரம் [பகுதி - 63]
621.
சுகமான பாக்கள் தொடுப்பவனே! உன்னை
அகமான ஆழ்கடலில் வைத்தேன்! - பகல்முழுதும்
சோகத்தில் சிக்கிச் சுருண்டாலும் நல்லிரவில்
மோகத்தில் மூழ்கும் மனம்!
622.
அன்புநிறை தோழி! அருந்தமிழ்ப் பாவலனின்
இன்புநிறை பொங்கல் எழில்வாழ்த்து - நன்புநிறை
தைத்திங்கள் ஆகும்! தனித்தமிழ் ஏந்துகின்ற
கைத்திங்கள் ஆகும் கமழ்ந்து!
623.
ஏக்கம் கொடுத்தவளே! ஈடிலாப் பா..புனைய
ஊக்கம் கொடுத்தவளே! ஊர்வசியே! - பூக்காடே!
தூக்கம் தொலைந்ததடி! தூண்டும் உணர்வலையைப்
போக்கும் வழியைப் புகல்!
624.
மோதல் விழிக்கணைகள் முட்டி எனைக்கவ்வக்
காதல் பிறந்ததடி! கண்நான்கும் - வாதமிடும்
எல்லாப் பொழுதும் இனிக்கும் திருநாளே!
பொல்லா அழகே பொலிந்து!
625.
என்வேலை உன்னையே எண்ணி இருந்துழலல்!
உன்வேலை என்னுயிரை வாட்டுவது! - பொன்மாலை
புண்..வேலைப் பாய்ச்சும்! புலவன் மதியுணர்வில்
கண்..வேலைப் பாய்ச்சும் கனிந்து!
626.
உண்ண மறந்தேன்! உறக்கம் இழந்தேன்!என்
எண்ணச் சிறகுகள் என்றெழுமோ? - கண்மணியே!
வண்ண மலர்க்காடாய் வந்தாடும் பெண்ணழகே!
ஒண்ணத் துடிக்கும் உயிர்!
627.
ஓதல் ஒழுகல் உயரென்பார்! ஒப்பில்லாக்
காதல் திருநாள் கதைத்திடுக! - கோதையே!
மோதல் விழியிணைந்து மோக உணர்வூற
ஈதல் இயற்கை இயல்பு!
628.
ஏக்கம் எதற்கோ? எழுதிடும் பாட்டெல்லாம்
தேக்கம் தெளிவிக்கும் தேனன்றோ! - பாக்காடே!
தூக்கம் தொலைந்தாலும் ஆக்கம் அளிக்கின்ற
ஊக்கம் ஓங்கும் ஒளிர்ந்து!
629.
கரம்பிடிக்கக் காத்திருந்தேன் நாள்களை
எண்ணி!
உரம்பிடிக்க ஓங்கும் வயல்போல் - வரமென
வந்த வளர்மதியே! வாட்டியே என்னுயிரைச்
சிந்தக் குடித்தாய் சிரித்து!
630.
உன்குரலை உள்ளத்தில் கேட்டவுடன் என்னுடைய
மென்குரலில் சொற்கள் மிளிர்ந்தோங்கும்!
- வன்பேசும்
வாய்கூட வாய்மை மொழிந்தோங்கும்! பேய்போன்ற
நோய்கூட ஓடும் நொடிந்து!
(தொடரும்)
/// தூக்கம் தொலைந்தாலும் ஆக்கம் அளிக்கின்ற
RépondreSupprimerஊக்கம் ஓங்கும் ஒளிர்ந்து! ///
மிகவும் பிடித்த வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...
Supprimerவணக்கம்!
பிடித்த படம்போன்று பெண்ணவளை எண்ணி
வடித்த கவிதை மணக்கும்! - படித்து..நான்
துள்ளிக் குதிக்கின்றேன்! துாய தமிழமுதை
அள்ளிக் குடிக்கின்றேன் ஆழ்ந்து!
என் மின்னஞ்சல் ஃ jram178@yahoo.co.in
தொலைபேசிஃ 044-24801690, அலைபேசி-9094766822
கொட்டும் அருவியென் வெண்பாக்கள்! அருமை!
Supprimerவணக்கம்!
கொட்டும் அருவியெனக் கொஞ்சும் கவிதைகளைக்
கட்டும் கயல்விழிக் காரிகையைத் - தொட்டு..நான்
பெற்றசுவைக் கீடேது? பெண்ணழகில் என்மனம்
கற்றசுவைக் கீடேது காட்டு?
தாங்கள் என் வலைப்பக்கம் வந்தது குறித்து பெரிதும் மகிழ்ச்சி அடைந்தேன்.
RépondreSupprimerதங்கள் வலைக்குச் சென்று பார்த்தாலோ அங்கு ஒரு மலர்த்தடாகமே நான் கண்டேன்.
தடாக நீரை அருந்தியவன் களியுண்டபின் கானத்தில் துய்யாது இருப்பானோ ?
அது போல யானும் பாடத்துவங்கினேன். எல்லாம் அல்ல... ஐந்து வெண்பாக்களை மட்டும்.
ஐந்து வெவ்வேறு ராகங்களில். நான் பாடகன் அல்ல.
நான் பாடுவது என் மனதில் ஏற்பட்ட புளகாங்கிதத்தை வெளிப்படுத்தவே .
தங்கள் மின் அஞ்சல் தெரிவிப்பின் பாடலின் தொடர்பினை அனுப்புவேன்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in
Supprimerவணக்கம்!
சுப்புநற் தாத்தாவின் துாயநல வாழ்த்தொலியில்
உப்பும் எனக்குள் உணா்வு!
காதல் மோதல் கவிநடையில் சொல்லி
RépondreSupprimerசாதல் வந்திடும் தமிழில்லை என்றேதான்
பாக்கள் படித்திடும் பாவலரே உம்மேல்
ஈக்களாக நாம் இரைந்திடுவோம் காதினிலே...
Supprimerவணக்கம்!
ஈக்களாய் என்நினைவு என்னவளை மொய்திடப்
பாக்களாய் ஆசை படையெடுக்கும்! - பூக்களாய்
இங்கே பிறந்தவை ஏங்கித் தவமிருக்கும்!
மங்கை அமுத மழை!
தூக்கம் தொலைந்ததடி! தூண்டும் உணர்வலையைப்
RépondreSupprimerபோக்கும் வழியைப் புகல்!
அழகு வரிகள்
Supprimerவணக்கம்!
அழகு வரிகளை அள்ளி அளித்தாள்
பழகும் தமிழால் பரிசு!
கண்..வேலைப் பாய்ச்சும் கனிந்து!.......
RépondreSupprimerபிறவிப் புலவர் நீங்கள்.........
Supprimerவணக்கம்!
பிறவிப் புலவனாய்ப் போ்பெற்றேன்! கோதை
உறவால் வந்த உயா்வு!
தங்களின் வரிகளைப் படிப்பது என்பது ஒரு பரவசமான அனுபவமாக இருக்கிறது.......முதல் விசிறி நான்
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
என்றன் முதல்விசிறி என்றாய்! வணங்குகிறேன்
உள்றன் உளத்தை உவந்து!
நானெல்லாம் எழுதுவது வெண்பாவா என ஒரு நொடி தோன்றுகிறது ஐயா....இயல்பான எதுகை மோனை....பொங்கிப்பெருகும் அருவியொத்த வரிகள் தெறித்து ஓடும் அழகே அழகு
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அழகே அழகென்றே அன்னவளை நாடிப்
பழகே பழகென்றே பாடும்! - ஒழுகுமிதழ்த்
தேனுக் கிணையாய்த் திரண்ட பொருளேது?
வானுக் கிணையாய் வளா்ந்து!
இடுகையிட்டவர் என மாற்றுங்கள் ஐயா...அடியேனின் அன்புக்கட்டளை
RépondreSupprimer
Supprimerவணக்கம்!
அன்பால் அளித்திட்ட ஐந்து கருத்துக்கள்
என்பால் இருக்க இனித்தனவே! - நண்பா!
பெருகும் தமிழுணா்வைப் பெற்றவுன் நட்பால்
உருகும் என்றன் உயிர்!
RépondreSupprimerமின்வலைத தமிழ் உறவுகளே வணக்கம்!
வண்ணத் தமிழ்நாடி வந்த உறவுகளே!
எண்ணம் இனிக்க இயம்புகிறேன்! - என்வணக்கம்!
மண்ணுலகில் வண்டமிழ் வாய்த்த வளமறிந்து
விண்ணுலகோர் கொள்வார் வியப்பு!