காதல் ஆயிரம் [பகுதி - 67]
661.
நான்எழுதும் வண்ணங்கள் நல்ல தமிழூறும்
தேன்எழுதும் வண்ணங்கள்! தேவியே! - வான்எழுதும்
வானவில் நல்லழகாய் வந்து மிளிர்பவளே!
கானவில் கண்களைக் காட்டு!
662.
வீசுகின்ற காற்றே! விரிமலர்ச் சோலையில்
பேசுகின்ற பூங்குயிலே! பேரழகே! - வாச
மலர்ககூட்டம் வாடும்! உனைக்காணமல் என்றன்
உளத்தோட்டம் வாடும் உதிர்ந்து!
663.
என்று வருவாயோ? இன்னமுதை நான்பருக
நின்று தருவாயோ? நேரிழையே! - என்னுயிரை
வென்று களித்தவளே! இன்றெனை வாட்டுவதேன்?
நன்றுன் செயலா நவில்?
664.
தொலைபேசி மூலம் அனுப்புமுன் தூது
வலைவீசி என்னை மடக்கும்! - சிலைபோல்
கலைபேசும் கண்ணே! கவிஞன் மனத்தை
விலைபேசும் பெண்ணே விடு!
665.
நானெண்ணும் சிந்தனையை நன்றே செயலாக்கித்
தேனுண்ணும் செல்வச் செழும்பாவாய்! - மானெண்ணும்
வண்ண மலரெண்ணும் மங்கை உறவென்று
சின்ன குயிலெண்ணும் சேர்ந்து!
666.
கண்ணன் குழலிசையில் கட்டுண்ட கன்னியர்போல்
எண்ணம் இழந்தேன்! இசைவாணா! - பண்ணிசைக்கும்
மன்னா! மயக்கும் மணித்தமிழை உன்திருவாய்
சொன்னா சுரக்கும் சுகம்!
667.
அன்புக்(கு) அடித்தளம் ஆனவளே! என்வாழ்கை
இன்புக்(கு) அடித்தளம் இட்டவளே! - மின்னும்
அழகுக்(கு) அடித்தளம் ஆண்டவளே! என்றன்
எழுத்துக்(கு) அடித்தளம் ஈந்து!
668.
வசந்தம் வருகிறது! வானவில் வண்ணம்
திசையெங்கும் மின்னும்! திகட்டா - இசையெங்கும்
மீட்டி விளைக்கும்! விருந்தாக இன்பத்தைக்
கூட்டி விளைக்கும் கொழித்து!
669.
வசந்தம் வருகிறது வாழ்விலெனைத் தேடி!
கசந்த துயர்போகும்! காதல் - உசுப்பும்
அசைந்தாடும் சோலையென அன்பில் முழுகி
இசைந்தாடும் நெஞ்சம் இனி!
670.
பொருந்தியவா! என்னைப் புகழ்ந்தேத்தி இன்பம்
அருந்தியவா! நான்சற்(று) அகல - இருளாய்
வருந்தியவா! வஞ்சியின் நெஞ்சினிக்கப் பாதை
திருந்தியவா! நீ..என் திரு!
(தொடரும்)
கண்ணன் குழலிசையில் கட்டுண்ட கன்னியர்போல்
RépondreSupprimerஎண்ணம் இழந்தேன்! இசைவாணா! - பண்ணிசைக்கும்
மன்னா! மயக்கும் மணித்தமிழை உன்திருவாய்
சொன்னா சுரக்கும் சுகம்!
அருமை !....மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா .
மிகவும் பிடித்தது : 667
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
ஐயா... வணக்கம். பாக்களைப் படிக்குந்தோறும் காணொளியாய்க் காட்சியும் கண்முன் விரிகிறது. மிக மிக அருமை!.... வாழ்த்துக்கள்!
RépondreSupprimerதொன்று தொட்ட தமிழ்மொழி பேரெழிலாய்
மன்றுவந்து உங்களிடம் மாலையிட்டதோ அன்றும்
இன்றும் என்றுமே எமதுயிராக உணர்வாகத்
தென்றலாக வருடுகிறதே உங்கள் பாக்கள்...
‘காதல் ஆயிரம்’ என்று பேர் வைத்திருக்கிறீர்களே, விரைவில் ஆயிரம் வந்துவிடும் போலிருக்கிறதே! அத்துடன் விட்டுவிடுவீர்களா? அற்புதமான கவிதைகள்!
RépondreSupprimerஅருமை அய்யா
RépondreSupprimer