jeudi 21 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 59]


காதல் ஆயிரம் [பகுதி - 59]



581.
என்மூச்சு முட்டுதடா! ஈந்தஇன் முத்தத்தால்
என்பேச்சு திக்குதடா! என்செய்வேன்? - உன்னாட்சி
ஓங்கி ஒளிருதடா! ஊர்வசியென் உள்ளத்துள்
தேங்கி நிறையுதடா தேன்!

582.
முத்தாடும் ஆடை! மொழியாடும் தேன்கவிதை!
பித்தாடும் பேரழகு பெற்றவளே! - முத்தாடப்
பஞ்ச நிலையின்றிப் பற்றும் பகலிரவை
நெஞ்ச அறையில் நிறுவு!

583
கண்டு களித்ததுவும் காதல் கவிதைகளை
உண்டு களித்ததுவும் ஓதுகிறேன்! - விண்ணின்
மதியாய் மின்னும் நினைவுகளை! மாதே
இதயமாம் ஏட்டில் எழுது!

584.
செவ்வந்தி சூடிவரும் சின்னவளே! பார்வையால்
இவ்வந்தி மாலை இனித்திடுமே! - செவ்வாழை
முச்சந்தித் தோட்டம்! முழுநிலா ஊர்வலம்!
உச்சென்று வீசும் உணர்வு!

585.
எத்தனைக் கோடி இனிமையடி! உன்னழகில்
பித்தனைப் போன்று பிதற்றுகிறேன்! - முத்தமிழே!
அத்தனைப் பாடிடும் அன்பரைப்போல் உன்திருவாய்
முத்தினைப் பாடிடும் மூச்சு!

586.
என்னடி பெண்ணே! இயற்கை எழிலெல்லாம்
உன்னடி பெற்றே ஒளிருதடி! - உன்னுருவம்
பொன்னடி! பூவடி! நற்புலவன் நான்பாடும்
இன்னடி என்பேன் இசைத்து!

587.
செங்கரும்பே! தேனே! சிரித்தால் சிலிர்க்குதடி
இங்குடம்பே! நெஞ்சிழுக்கும் இன்னரும்பே! - தங்குசுகம்
பொங்கும் விருந்தே! புலவனென் பார்வையில்
எங்கும் இருந்தே இயங்கு!

588.
சங்கொலி ஊதும்! தமிழொளி வந்தில்லம்
செங்கனி தா..வெனச் சேர்த்தனைப்பான்! - தங்கமே!
தொங்கடி தோள்களில் என்பான்! அவன்கவிதை
நுங்கடி என்றே நுவல்!

589.
காசினி எல்லைவரை கற்பனை தொட்டுவரும்!
பூசிணி பூத்ததடி பொற்றோழி! - ஈசனின்
நேசனைச் செந்தமிழ்த் தாசனை! எண்ணியே
வாசனை வீசும் வளர்ந்து!

590.
சூத்திரம் ஆனவளே! சுந்தர தேவியின்
சாத்திரம் ஆனவளே! தண்ணிலவே! - பூத்தாடும்
கோத்திரம் ஆனவளே! கொஞ்சு தமிழ்க்கம்பன்
பாத்திரம் ஆனவளே பாடு!

(தொடரும்)

4 commentaires:

  1. நல்ல தொடர்.....

    நேற்று எனது பக்கத்தில் கவிஞர்களுக்கு ஒரு அழைப்பு விடுத்திருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

    RépondreSupprimer
  2. அழகிய வர்ணனை... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. வணக்கம் ஐயா !
    ஒவ்வொரு தடவையும் அழகான படங்களுடன் இன்பத்
    தேன் சிந்தும் கவிதை வரிகள் தொடரும் விதம் மிகவும்
    அருமையாக உள்ளது .வாழ்த்துக்கள் மேலும் மேலும் சிறப்பாகத் தொடரட்டும் ......

    RépondreSupprimer
  4. எத்தனை கோடியின்பம் எத்தனை எத்தனையோ
    அத்தனையும் ஒன்றாக அணிவகுத்து நிற்குதையா
    வித்தகம் மிகக்கொண்டு வியக்கின்ற கவியில்தந்து
    சித்தமெலாம் தமிழினை சிரித்திடச்செய்கின்றீரே!...

    RépondreSupprimer