jeudi 28 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 66]




காதல் ஆயிரம் [பகுதி - 66]


651.
நலமா நறுந்தமிழே! நாள்கள் இரண்டும்
குலமாய்க் குழப்பின என்னை! - உளம்..மா
துயரில் துவண்டதுவே! நீயின்றி இங்குப்
பெயரில் கிடந்தேன் பிழைத்து!

652.
கடும்சூடு உடல்முழுதும் காய்கிறதா? நெஞ்சம்
விடும்சூடு நாளெண்ணி வேண்டும்! - கொடுமையடி
கொல்லும் குளிர்காலம்! கூடிக் களிக்காமல்
சொல்லும் கவியும் சுடும்!

653.
காய்ச்சல் பறந்தோட என்றன் கவிதைகளைப்
பாய்ச்சல் நடையில் படைக்கின்றேன்! - நோய்க்கண்
படரும் பொழுதெலாம் பாழ்நிலை ஆகுதடி!
உடலும் உயிரும் உறைந்து!

654.
என்னுயிர்ப் பெண்ணே! இனிய தமிழ்ச்சுவையே!
உன்னுயிர் உற்ற துயர்ஒழியப் - பொன்மலர்
மின்னும் இறைவனை வேணடும்! மதுகவி
மன்னும் புலவன் மனம்!

655.
இன்ப மடல்எழுது! என்னுடன் ஒன்றாகி
அன்பின் கடல்முழுகு! ஆருயிரே! - துன்பமெனும்
சொல்லுக்கு இடமில்லை! தூயவளே உன்விழி
வில்லுக்குத் இடரில்லை வீசு!

656.
தலையொளிர் வண்ணம் தமிழொளி வீசச்
சிலையொளிர் பெண்ணே சிரிப்பாய்! - நலமாய்
மலையொளிர் மேனி வடிவொளி பாடக்
கலையொளிர் கண்களைக் காட்டு!

657.
அறஞ்சேர் அழகனிடம் ஆன்மா அடையும்!
மறஞ்சேர் மறவன்நான்! மாதே! - உறவாய்க்
கரஞ்சேர் கனவுகள் கற்பனையை ஊட்டும்
உரஞ்சேர் கவிதைகள் ஊர்ந்து!

658.
நிறைந்தாள் மனத்துள்! நெடுந்தமிழ் பாடி
உறைந்தாள் உணர்வில் உவந்து! - பிறையும்
மறைந்தால் மகிழ்வேது? மங்கையவள் முத்தம்
குறைந்தால் வாடுமென் கூடு!

659.
நடந்தால் நடந்துவரும் என்னிழல் போன்று
நடந்தாள் கவிதை நறும்பெண்! - படர்ந்து
மறந்தால் நினைத்திடலாம்! மாதவள் என்றும்
நிறைந்தாள் மனத்துள் நிலைத்து!

660.
உன்குரல் ஓசை! உணர்வை உசுப்புகின்ற
மென்குரல் ஓசை! வியன்மலரே! - பண்ணிசைக்கும்
இன்குரல் ஓசை! இதயம் இலகுதடி!
பொன்குரல் ஓசை புகுந்து!

(தொடரும்)

4 commentaires:

  1. கடும்சூடு உடல்முழுதும் காய்கிறதா? நெஞ்சம்
    விடும்சூடு நாளெண்ணி வேண்டும்! - கொடுமையடி
    கொல்லும் குளிர்காலம்! கூடிக் களிக்காமல்
    சொல்லும் கவியும் சுடும்!

    காதல் ஆயிரம் அல்ல அதையும் தாண்டி எழுதுங்கள் கவிஞரே வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    RépondreSupprimer
  2. ஐயா... உங்கள் பாக்களை விபரிக்க விமர்சிக்க எனக்குத் திறமை இல்லை. ரசிக்கின்றேன்... அற்புதம்! அருமை!

    பொன்னொளி மின்னிடப் பண்னினைப் பாடும்
    இன்மொழிப் பாவலன் இயற்றிய பாக்களால்
    விண்ணிலே இருக்கும் வெண்ணிலவும் நாணி
    செவ்வென தன்நிறம் சிவந்திடும் காணீர்...

    RépondreSupprimer