காதல் ஆயிரம் [பகுதி - 42]
411.
காலை விடியல் கருத்தைக் கவர்ந்திழுக்கும்!
மாலைப் பொழுதும் மனங்கமழும்! - சோலையெழில்!
பாளைச் சிரிப்பு! பசும்வயல்! என்னரசி
ஆளை அசத்தும் அழகு!
412.
பனிபோல் உருகும்! பதமாய்க் குளிரும்!
கனிபோல் கவியும் கமழும்! - மனமே
இதுபோல் இனிமை இனிமேல் வருமோ?
மதுபோல் மயக்கிய மாது!
413.
இச்சென்று நீயிட்ட இன்னமுதம் ஏறுதடி
உச்சி முதல்உள்ளங் கால்வரைக்கும்! - கச்சணிந்தும்
நச்சென்று மேல்குத்தும்! நாள்முழுதும்
மென்மயக்கம்
வச்சென்னை வாட்டும் வளர்ந்து!
414.
வானம் இடியிடித்து மின்னுதடி! வண்ணவிழி
மீனும் எனையிடித்து மின்னுதடி! - தேன்மழையே!
காதல் பயிர்விளையக் கன்னல் கவியுரத்தை
மாதம் முழுதும் வழங்கு!
415.
மழைபொழிய மண்குளிரும்! மாதவளே முத்த
மழைபொழிய உள்குளிரும்! சந்த - மழைபொழிய
பாயும் தமிழமுதம்! பைந்தமிழே உன்னழகை
ஆயும் மனமே அளந்து!
416.
முத்தமிடும் ஓசை! முடிவின்றி எந்நொடியும்
சித்தமதைத் தொட்டுச் சிரித்தாடும்! - முத்தமிழே!
புத்தமுதை யுண்டு புரளும் புலவனுக்கு
நித்திரை யுண்டோ நிலத்து!
417.
கவிதொடுத்தாய்! காதல் கனிந்த மொழிக்குச்
செவிகொடுத்தாய்! சிந்தை மகிழ்ந்து - தவிக்கச்
சுவைகொடுத்தாய்! சொந்தம் எனச்சொல்லி என்னைத்
துவைத்தெடுத்தாய் நெஞ்சைத் துளைத்து!
418.
துடித்தேன்! மனத்தைத் தொடுத்தேன்! அவளைப்
படித்தேன்! கவிதை படைத்தேன்! - கொடியைப்
பிடித்தேன்! கனியைக் கடித்தேன்! மதுவைக்
குடித்தேன் உதட்டைக் குவித்து!
419.
நெஞ்சிக் குழிமேல் நெகிழக் கொடுத்திட்ட
வஞ்சி மலரிதழ் முத்தங்கள்! - மஞ்சத்தில்
பஞ்சு பறப்பது போல்பறந்து நெஞ்சமோ
கெஞ்சும் அவளைக் கிடந்து!
420.
மாந்தளிர் மேனி! மயக்கும் மதுவிழிகள்!
பூந்தளிர் மேவும் புதுப்பொலிவு! - காந்தமென
ஏந்திழை ஈர்த்தென்னை இன்பம் எழுதுகிறாள்
தீந்தமிழ்த் தேனைக் குழைத்து!
(தொடரும்)
யம்மாடி...! மூழ்கி விட்டேன் வரிகளில்...
RépondreSupprimerவாழ்த்துக்கள் ஐயா...
Supprimerவருகைக்கும் கருத்திற்கு நன்றி
ஆளை அசத்தும் அழகு!கவிதைக்குப் பாராட்டுக்கள்..
RépondreSupprimer
Supprimerவருகைக்கும் கருத்திற்கு நன்றி
வார்த்தை ஒவ்வொன்றிலும் தேன் சொட்டுகிறது ஐயா.
RépondreSupprimer
Supprimerவருகைக்கும் கருத்திற்கு நன்றி