samedi 23 mars 2013

ஞானத்தைத் தேடி.....




ஞானத்தைத் தேடி.....

கடவுளுக்கு
நூற்றியெட்டுக் குடங்களில்
பால் அபிசேகம்!
கருப்புப் பணம்
வெள்ளையாக....

நூற்றியெட்டுக்
குடங்களில் பால்!
சிலை சிரிக்கிறது!
கோயில் வாயிலில்
குழந்தை அழுகிறது!

ஊரையும் நாட்டையும்
கொள்ளை அடித்தார்!
அதிக செலவில்
கோயிலுக்கு
வெள்ளை அடித்தார்!

இறைவன் முன்
வியாபாரம் நடக்கிறது!
பெரிய தாள்களுக்குப்
பெரிய மாலை!
சிறிய தாள்களுக்குச்
சிந்திய மலர்கள்!

படைத்தவனைப்
பாடியும் பரவியும்
இருள் நீங்கவில்லை - ஆசைப்
பொருள் நீங்கவில்லை!

நித்தியானந்தா
பிரமானந்தா
காவி உடையில்
இருள் பேய்கள்!

வேள்வித் தீயில்
எரிகிறது
பளபளக்கும் பட்டுச்சேலை!
கோயில் வழியில்
அரை ஆடையில்
அமர்ந்திருக்கும் பெண்கள்!

ஒன்றே இறைவன்
என்பது உண்மை!
இறைவன்
மனிதனைப் படைத்தான்!
ஏத்திப் பிழைக்க
எத்தனை.. எத்தனை..
இறைவனை
மனிதன் படைத்தான்!

எல்லா உயிர்களும்
இறைவன் உடலாம்
என்கிறது தத்துவம்!
பிறப்பொக்கும் என்கிறது
உலகப் பொதுமறை!
சாதியை
நெய் ஊற்றி
வளர்கிறது கோயில்!

கோயிலுக்குள்
ஞானத்தைத் தேடி..
கூட்டங் கூட்டமாய்
மக்கள் சந்தை!

நானும்
கோயிலுக்கு வெளியே
ஞானத்தைத் தேடி
அமர்ந்திருக்கிறேன்!

நானும் அவளும்
ஈருடல் ஓருயிர்
சுற்றித் திரிந்தோம்!
இன்பக் காவியத்தின்
எல்லாப் பக்கங்களையும்
இணைந்தே அறிந்தோம்!

ஞானம்பாள் அவளைக்
காதலின்
தேனாம்பால் என்றே குடித்தேன்!

அன்பே!
அமெரிக்கா மாப்பிள்ளை
வந்திருக்கிறது!
ஆனந்த வாழ்வு!
தேடி அழைக்கிறது !
என்னை மறந்துவிடு என்றாள்!

நானும் கோயிலின் வாயிலில்
நீண்ட தாடி!
கிழிந்த சட்டை!
கிழியாத நினைவுகள்!
பைத்தியமாய்....

நானும்
ஞானத்தைத் தேடி
அமர்ந்திருக்கிறேன்!

9 commentaires:

  1. அருமை. உங்கள் கவிகளில் இது இன்னொருவடிவம். அழகிய நடை.
    நல்லபல விஷயங்களை நறுக்கென உள்ளே பொதிந்து அருமையாக இயற்றியுள்ளீர்கள் ஐயா.
    ரசித்தேன்.
    ஞானாம்பாளும் நன்றாகவே இருக்கின்றாள்...:).

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நான்பிடித்த ஞானம்பாள்! நாளும் கவிபாடத்
      தேன்வடித்த செந்தமிழாம் செப்பு!

      Supprimer
  2. பல சாட்டையடி வரிகள் உண்மை ஐயா...



    (அர்ந்திருக்கிறேன்! - அமர்ந்திருக்கிறேன்!)

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சாட்டை அடிகள்! சமூகம் உணா்ந்திட்டால்
      நாட்டை உயா்த்தலாம் நன்கு!

      Supprimer
  3. அருமை !..அருமை !...இன்று சாமியும் நாமும் சங்கடப் படுவதும் சில போலிகளால் தான். இறைவனை உணர்ந்தால் நிட்சயம் இன்பம் பெறலாம்¨! வாழ்த்துக்கள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      போலித் துறவிகள் போந்துள எந்நாடும்
      காலி மனத்தா் களம்!

      Supprimer
  4. //ஊரையும் நாட்டையும்
    கொள்ளை அடித்தார்!
    அதிக செலவில்
    கோயிலுக்கு
    வெள்ளை அடித்தார்!//
    அருமை... வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புதுவைத் தமிழன் புலமையைப் போற்றும்
      மதுரைச் சரவணன் மாண்பு

      Supprimer

  5. வலை உறவுகளே வணக்கம்

    ஞானத்தைத் தேடி நலமுற வந்தவா்க்கு
    மானக் கவிஞனின் வாழ்த்து!

    RépondreSupprimer