mardi 26 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 64]




 காதல் ஆயிரம் [பகுதி - 64]


631.
பட்டென்(று) ஒருகவிதை பாடிடச் சொன்னவளே!
சட்டென்(று) ஒருமுத்தம் தந்திடுக! - கட்டழகே
கொட்டென்று கொட்டும் கவிமழை! சேர்ந்தாடச்
சிட்டென்று மெல்லச் சிணுங்கு!

632.
முத்துமழை முன்பொழிய முத்தமழை நீ..பொழிய
சொத்துமழை என்றெண்ணிச் சொக்குகிறேன் - முத்தமிழாய்க்
கொட்டுமழை கொட்டுமடி! கோகுலமே செந்தேனில்
இட்டுமழை கொட்டுமடி ஈங்கு!

633.
அவளரு ளாலே அவளெழில் உண்டு
சுவைகவி சூட்டினேன் சொக்கி! - இவை..கவி
என்றுலகம் போற்றும்! இளமையின் வேதமென
நின்றுலகம் போற்றும் நினைந்து!

634.
தலைவலி என்ன? கயல்விழி கண்டால்
மலைவலி கூட மடியும்! - சிலைபோல்
கலையொளிர் பெண்ணின் கவியொளிர் சொற்கள்
இலையெனில் வாழ்வே இலை!

635.
சித்தரும் பக்தரும் உன்முகம் கண்டவுடன்
பித்தராய் ஆகிப் பிதற்றிடுவார்! - சத்தியம்
சித்திரை நிலவே!உன் சிற்றிடை மெல்லசைவால்
நித்திரை இல்லா நிலை!

636.
முத்திரைப் பொன்னே! முழுமதிப் பேரழகே!
இத்திரை நீக்கி எனைப்பாராய்! - வித்தையிடும்
சித்திரை வந்ததடி! கத்தரி காய்த்ததடி!
நித்திரை போகுதே நீத்து!

637.
புத்துரை நூலே! புரட்டுகின்ற பக்கமெலாம்
கொத்துரை போன்று குளிருட்டும்! - வித்தகியே!
சித்திரைத் திங்கள் சிரித்தெனை வாட்டுதடி!
நித்திரை இல்லை நினைந்து!

638.
இத்தரை ஏனோ எனக்கு வெறுக்குதடி!
பித்துறை நெஞ்சாய்ப் பிதற்றுதடி! - முத்தழகே!
சித்தரைத் திங்கள் திரண்டெழும் காதலினால்
நித்திரை நீங்கும் நினைத்து!

639.
முத்தமொன்று தந்துவிடு! மோகத்தில் நீந்தவிடு!
மொத்தமாக இன்பத்தை மூட்டிவிடு! - புத்தமுதே!
சொத்தாக வந்துவிடு! சுற்றுகின்ற கால..முள்
பத்தாகப் போகுதடி பார்!

640.
கற்பனை என்னும் கலமேறி ஆடுகிறேன் 
நற்றுணை நல்குக! இல்லையெனில் - பொற்கொடியே!
கற்புடை நாயகியே! கன்னல் கனிச்சாறே!
விற்படை கொண்டெனை வீழ்த்து!

(தொடரும்)

5 commentaires:

  1. ஐயா...
    சிறப்பென்றால் இதுவல்லவோ சிறப்பு. சித்தரிக்கின்றீர்கள் காட்சிகளைக் கண்முன்னே...
    அற்புதக் கவிஞரையா நீங்கள்!

    அன்பான வணக்கமுடன் வாழ்த்துக்களும்!

    நோயும் நீங்கும் நொடியில் எங்கள்
    தாயும் தமிழும் தந்திடும் பேரின்பம்
    தாவும் மனமும் தினமும் உங்கள்
    பாவும் படிக்கப் பரவுமே பயனே....

    RépondreSupprimer
  2. பாரதி தாசனில்
    கண்டேன்
    கண்ணதாசனை

    RépondreSupprimer
  3. சொக்கித்தான் போனேன்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer

  4. காதல் ஆயிரமும் கற்கண்டாய் இனிக்கின்றன

    RépondreSupprimer
  5. இன்பக் கவிதை இனிதே பிறக்கும்
    அன்பர் மனதில் ஏனோ துயரம் !!..
    விண்ணும் மண்ணும் உள்ள வரைக்கும்
    அன்னை அருளது அனைவர்க்கும் உண்டென
    சொல்லித் தெரிய என்ன இருக்கு ?..சுகமாய்
    கவிதை மழையது பொழியட்டும் .வாழ்த்துக்கள்
    ஐயா ......

    RépondreSupprimer