lundi 18 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 56]





காதல் ஆயிரம் [பகுதி - 56]


551.
தோளிரண்டும் ஓட்டுதடா தூக்கத்தை! வன்மைசேர்
காலிரண்டும் கூட்டுதடா கற்பனையை! - மாலழகா!
நூலிரண்டும் காட்டுதடா நோக்கத்தை! நீயிருந்த
நாளிரண்டும் வாட்டுதடா நன்கு!

552.
பூக்கும் உணர்வுகள் போராடும்! கண்ணுக்குள்
ஏக்க உணர்வுகள் தாளமிடும்! - பாக்களை
ஆக்கும் உணர்வுகள் ஆடிவர! கொல்லிரவே
தாக்கும் உணர்வுகளைத் தள்ளு!

553.
ஆசை முகம்பார்த்தே ஆறுஏழு வாரங்கள்
ஓசை இலாமல் உருண்டனவே! - வாசமிலாச்
சோலைபோல் வாழ்வு சுருங்குதடி! மூடிய
ஆலைபோல் தூங்கும் அகம்!

554.
கொஞ்சும் கொலுசொலிக்குக் கோடிக் கவிதைகளை
நெஞ்சம் இசைத்து நெகிழ்ந்துருகும்! - வஞ்சியே!
கெஞ்சும் இரவுகளைக் கீழ்த்தள்ளி உன்கனவு
விஞ்சும் இனிமை விளைத்து!

555.
கொலுசொலி கேட்டு நிலம்..குளிர் எய்தும்!
இளசொளிர் புற்கள் எழும்பும்! - களத்தில்
முரசொலி கேட்ட முறுக்குடலை உன்கால்
உரசொலி வெல்லும் உடைத்து!

556.
இன்னும் சிலநாள்கள் என்னவளே சோலையில்
மின்னும் மலர்க்கூட்டம்! மென்குயில்கள் - இன்னிசைக்கும்
எண்ணும் பொழுதினிலே இன்பம் சுரக்குமடி!
கண்ணும் சொருகும் கனிந்து!

557.
எண்ணும் பொழுதினிலே இன்பம் சுரக்கின்ற
பண்கள் படைத்திடும் பாவலனே - முன்னே
பலநாள்கள் பாழாய்க் கழிந்தனவே! இன்னும்
சிலநாள்கள் தேவையா சொல்!

558.
மறந்தால் நினைக்க! மலரே கவிதை
சிறந்தால் உனதருள் சீராம்! - குறைந்த(து)
ஒருகோடி எண்ணளவில் உன்னை நினைந்து
தெருக்கோடியில் உள்ளேன் திரிந்து!

559.
என்னடி செய்கிறாய் ஓரெழுத்து நீஎழுத
முன்னடி தோன்றுமே இன்னலகு! - என்னவளே!
எங்கே இருந்தாலும் என்னுயிர் உன்னிடம்
பொங்கி வருமே புகழ்ந்து!

560.
அன்பே! அமுதே! அருந்தமிழே! ஈடிலா
இன்பே! எழிலே! இளையவளே! - என்மனம்
ஏங்கும் நிலையை எடுத்துரைக்கச் சொல்லேது?
தேங்கும் துயரம் திரண்டு!

(தொடரும்)

10 commentaires:

  1. ஆலைபோல் தூங்கும் அகம் எப்படியெல்லாம் தவிக்கிறது....!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      ஆலைபோல் நெஞ்சம் அவளழைகை நெய்கிறது!
      சோலைபோல் கவிதை சுடா்கிறது! - மாலைபோல்
      கட்டிக் கமழ்கின்ற ஆயிரமும் இன்பத்தைக்
      கொட்டிக் கொடுக்குமெனக் கூறு !

      Supprimer
  2. கெஞ்சி நிற்கும் சலங்கைகளும்
    கொஞ்சு தமிழ் கவி கேட்டிடவே...
    அருமை ஐயா.

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்

      தென்றல் கொடுத்திட்ட தீந்தமிழ்ச் சொல்யாவும்
      என்றன் கவியின் எழில்

      Supprimer
  3. சொற்களே இல்லை பாராட்ட

    RépondreSupprimer
  4. Réponses

    1. வணக்கம்!

      அனைத்துக் கருத்திற்கும் அன்புடன் நன்றி!
      மனத்தை மயக்கும் வரி

      Supprimer
  5. ஐயா...

    ஆர்வமுடன் எமக்கு அருந்தமிழ் படிக்க
    ஓர்மமுடன் நல்ல ஓவியமாய் தரும்கவி
    பேர்விளங்க பெரும் புகழ் துலங்க
    ஊர் விளங்க உரைக்குதே உண்மை...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Supprimer