samedi 16 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 54]




காதல் ஆயிரம் [பகுதி - 54]

531.
குடிக்கக் குடிக்கச் சுவைகூடும்! பாட்டில்
வடிக்க வடிக்க வளரும்! - தொடந்து
படிக்கப் படிக்க மனஞ்சொக்கும்! இன்பம்
துடிக்கத் துடிக்கத் துவட்டு!

532.
பேசா திருந்தாள்! பிடிக்கும் கயல்வலையை
வீசா திருந்தாள்? வெறுப்பென்ன? - பாசமே
இல்லா திருந்தாள்! இனிய கவியழகை
நல்கா திருந்தாள் நடித்து!

533.
ஒருநாள் அவளின்றி ஓட மறுக்கும்!
திருநாள் வெறுத்துயிரைத் தீய்க்கும்! - மருண்டே
இருள்நாள் எனஇதயம் எண்ணிக் கிடக்கும்!
அருள்நாள் அவளென ஆடு!

534.
பார்க்கா திருப்பவளே! பாடுபுகழ்ப் பாவலனைச்
சேர்க்கா திருப்பவளே! சேல்விழியே! - வேர்க்குதடி!
கார்காலக் காட்சி கமழுதடி! இன்னமுத
ஊர்கோலக் காட்சி ஒளிர்ந்து!

535.
மை..தீட்டும் கண்கள் மதுவூட்டும்! கோலத்தைக்
கை..தீட்டும்! கன்னியின் கால்தீட்டும்! - மாதவத்
தை..யூட்டும் இன்பமெலாம் தங்கிடவே என்னிதயப்
பை..யூட்டும் பார்வையைப் பார்!

536.
என்னெனக் சொல்ல! இதயம் உருகுதடி
பொன்னென மெல்ல! புதுவகை - இன்பத்தை
விண்ணெனக் கொள்ள! விளைந்த பருவத்தை
உண்ணென அள்ளியே ஊட்டு!

537.
உன்குரல் கேட்டவுடன் ஊஞ்சல் அசைந்தாடும்!
இன்குரல் தேன்பாலை ஈந்தாடும்! - என்னவளே!
வன்குரல் வேங்கையை வாரி அணைத்தாடும்
மென்குரல் மங்கையுன் மெட்டு!

538.
தண்ணீர்க் குடமெடுத்துத் தங்கம் நடந்துவரப்
பன்னீர் மழைபொழியும்! பாதையெங்கும் - பண்ணிசைக்கும்!
எண்ணம் சிலிர்க்கும்! இளமை படையெடுக்கும்!
வண்ணம் பிறக்கும் வளர்ந்து!

539.
காணும் பொழுதெலாம் கம்பன் கவிவளம்
வேணும் எனக்கு! விழிவிருந்தே! - வீணையே!
நாணும் முகத்தழகு நல்கும் நலங்கோடி!
பேணும் தமிழெனப் பீடு!

540.
எண்ணும் பொழுதெலாம் என்மனத்துள் இன்னமுதப்
பண்ணும் படைக்கும் பருவத்தாள்! - வண்ணமலர்க்
கண்ணும் கதைபேசும்! காதல் கலையாவும்
நண்ணும் நடன நடை!

(தொடரும்)

2 commentaires:

  1. ஐயா...

    கவியே உங்கள் ஆற்றல்கூற இப்
    புவியில் எனக்குப் போதுமோ ஆயுள்
    தவிக்கும் தமிழ்த்தாகந்தீரத் தருமும்கவி
    புவிக்கே பெருகுதே சிறப்பு...

    RépondreSupprimer
  2. ஒவ்வொன்றும சுவையே!
    உரைக்கின்ற கவியே
    வாழ்க!

    RépondreSupprimer