jeudi 14 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 52]





காதல் ஆயிரம் [பகுதி - 52]


511.
ஏரெடுத்துப் பார்க்காமல் என்னவளே நீயிருந்தால்
சீரெடுத்த சிந்தனைகள் சிக்கிடுமோ? - நீரிழுத்து
வேரெடுத்து நன்கோங்கும் வேளையிலே வெட்டுவதோ?
பேரெடுத்த பெண்ணழகே பேசு!

512.
கண்ணின் மணியே! கவிதை மலர்க்காடே!
மண்ணின் மணமே! மரகதமே! - விண்மதியே!
பண்ணின் அமுதே! பறந்துவரும் தேவதையே!
எண்ணின் பெருகும் எழில்!

513.
என்யோகம் நீயே! இளமை விருந்தளிக்கும்
இன்யாகம் நீயே! இளங்கொடியே! - என்னுயிர்
வன்தாகம் நீயே! வசந்தமழை ஏந்திவரும்
பொன்மேகம் நீயே! பொழி!

514.
வண்ண உடையணிந்து வந்தவளே! பொங்குகிற
எண்ண மடையுடைக்கும் ஏந்திழையே! - விண்மதியே!
அன்ன நடையழகே! ஆழ்ந்துநான் பாடுகிறேன்
சின்ன சிரிப்பழகின் சிந்து!

515.
உம்மென்(று) இருப்பாள்! ஒடித்து நடந்திடுவாள்!
கும்மென்(று) இருப்பாள்! கொதித்திடுவாள்! - அம்மென்று
கொஞ்சி அழைப்பேன்! குமரியவள் நல்லவளே!
கெஞ்சி அழைப்பேன் கிடந்து!

516.
எப்படிக் கெஞ்சியும் என்னை விரட்டுவதேன்?
அப்படி இன்றென்ன ஆத்திரமோ? - அப்பப்பா
ஆசை பெருக்கில் அவள்மிகவும் கெட்டவளே!
பாசப் பெருக்கில் படர்ந்து!

517.
மணியடிக்கும்! மங்கை வரும்நேரம்! பாடும்
பணியழைக்கும்! சொற்கள் இனிக்கும்! - மணக்கும்
கனியிருக்கும்! வண்ணக் கிளியிருக்கும்! இன்பம்
இனியிருக்கும் என்றே இயம்பு!

518.
வண்ணங்கள் மின்னுகின்ற வானவில்! என்னுடை
எண்ணங்கள் மின்னுகின்ற ஏந்திழை! - இன்மது
கிண்ணங்கள் மின்னுகின்ற கன்னங்கள்! பேரழகை
உண்ணுங்கல் என்றழைத்தே ஊட்டு!

519.
கன்னெஞ்சம் கொண்டதுமேன்? காதல் கவியெனக்குத்
துன்னெஞ்சம் தந்ததுமேன்? சோர்ந்தழுதேன்! - இன்னிசை
பண்கொஞ்சும் பாவையே! பார்க்காமல் பேசாமல்
புண்கொஞ்சும் வாழ்வில் புகுந்து!

520.
குயிலும்! குறுமுயலும்! கொஞ்சும் கிளியும்!
மயிலும்! மதுமலரும்! மானும்! - மயங்கும்!
பயிலும் நடையழகைப் பார்க்கும் மனத்தைத்
துயிலும் தொடுமோ துணிந்து!

(தொடரும்)

7 commentaires:

  1. எழுதுறீங்க அய்யா..!

    காதலில் லயித்து....

    RépondreSupprimer
  2. வர்ணனையை ரசித்தேன்...

    அருமை ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமை உடையவள்! அழகுப்பெண் னவள்!நற்
      பெருமை உடையவள்! பேசு!

      Supprimer
  3. கவிஞரையா! அருமை, அற்புதம் என்பதற்கும் மேலான வார்த்தைகளைத் தேடுகின்றேன். இருப்பின் அதுவும் உங்களுக்கே... வாழ்த்துக்கள்!

    தாகமென காதலின் பண்ணதை உரைக்கும் உங்கள்
    மோகம் தமிழ்மீது யாதென காட்டுகின்றீர் எங்களின்
    யோகம் இதுவெல்லாம் நுகருகின்றோம் அதுவன்றி
    யாகம் வளர்த்தாலும் வாராதே காண்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாகம் தணியத் தமிழ்தொடுத்துப் பாடுகிறேன்!
      மோகம் தணிய முழுகுகிறேன்!- வேகமாய்ப்
      ஓடிவரும் ஆறாக ஓங்கும் உணா்வுகளைத்
      தேடிவரும் இன்பச் செழிப்பு!

      Supprimer

  4. வணக்கம்!

    வண்ணத் தமிழ்நாடி வந்த உறவுகளை
    எண்ணம் இனிக்க இயம்புகிறேன்! - என்வணக்கம்!
    மண்ணுலகில் வண்டமிழ் வாய்த்த வளமறிந்து
    விண்ணுலகோர் காண்பார் வியப்பு!

    RépondreSupprimer