mercredi 13 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 51]







காதல் ஆயிரம் [பகுதி - 51]


501.
சும்மா இருக்க வழியில்லை! சூடேற்றி
அம்மா அலைகழிக்கும் உன்னழகு! - உம்மா
கொடுத்தால் உயிரும் குளிருமடி! கொஞ்சம்
கொடுத்தால் குறையுமோ கூறு?

502.
சீர்கள் இசைமீட்ட! செவ்வடிகள் தாளமிட!
கூர்விழி யாளே குளிர்ந்திடுக! - ஊரிதைக்
கார்க்குளிர் போர்த்தும்! கனிச்சாறே உன்னுயிரைப்
பார்..கவி போர்த்தும் பணிந்து!

503.
உறக்கம் வராமல் உருகுகிறேன்! நெஞ்சை
அறுக்கும் இரவே அகல்வாய்! - உறவே!
தருக்கம் விடுவாய்! தவழ்மதியே என்மேல்
இரக்கம் அருள்வாய் இனித்து!

504.
இணையெடுத்துச் சொல்ல எளிதாமோ? நாளும்
எனையெடுத்து வாட்டும் எழிலே! - கணக்காய்க்
கணைதொடுக்கும் கண்ணே! கருணை பொழிக!
மனவழுத்தம் போகும் மறைந்து!

505
தாமரைச் செல்வியே! தண்ணிலவே! உன்னருளால்
பாமழை பெய்கின்ற பாவலன்நான்! - காமனைக்
காவல் அமர்த்திடுவோம்! கண்ணே! கவிப்பெண்ணே!
ஆவல் அனைத்தும் அளி!

506.
தேவதைபோல் வந்தவளே! தென்றல் தருஞ்சுகமே!
மாவதைபோல் இன்று வருத்துவதேன்? - பாவையே!
போவதுபோல் காட்டுவதேன்? பொய்யாய் நடித்தென்முன்
ஈவதுபோல் காட்டுவ தேன்?

507.
தேர்வரும் சாலை! திருவிழாக் கொண்டாட்டம்!
ஊர்வரும்! போகும்! உறவாடும்! - சீருடன்
பேர்தரும் பெண்ணுனைத் தேடுகிறேன்! தாகமுடன்
நீர்தரும் பந்தலில் நின்று!

508.
பேசும் இளங்கிளியே! பேரின்பப் பாட்டழகே!
வீசும் குளிர்காற்றே! வெண்னிலவே! - மாசிலா
ஆசு கவியென்னை ஆளும் அருந்தமிழே!
ஏசும் நடிப்பெலாம் ஏன்?

509.
சிலைபேசி நிற்குமோ? சின்னவளே காதல்
வலைவீசி நிற்குமோ? இன்பம் - வளரும்
கலைபேசி நிற்குமோ? நற்கதை பேசித்
தொலைபேசி நிற்குமோ சொல்லு?

510.
மெல்லிடைப் பூங்கொடியே! மேடையில் நீவந்து
சொல்லிடை வைத்த சுகமென்ன? - உள்ளத்துள்
கொள்ளிடம் இன்றிக் கொழிக்கும் உணர்வலைகள்
அள்ளிடும் உன்னை அழைத்து!

(தொடரும்)

8 commentaires:

  1. ரசிக்க வைக்கும் கேள்விகள்...

    புதிய பதிவை வாசிக்க அழைக்கிறேன் ஐயா... நன்றி...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுவைக்கும் எழுத்துக்களைச் சூட்டும் அழகை!
      எவைக்கும் இணையில்லாப் பெண்ணை! - அவைமீது
      நான்கண்டு இன்புற்றேன்! நல்லவளை எண்ணுங்கால்
      தேன்கண்டு இன்புற்றேன் தோ்ந்து!

      Supprimer
  2. //தேவதைபோல் வந்தவளே! தென்றல் தருஞ்சுகமே!
    மாவதைபோல் இன்று வருத்துவதேன்? - பாவையே!
    போவதுபோல் காட்டுவதேன்? பொய்யாய் நடித்தென்முன்
    ஈவதுபோல் காட்டுவ தேன்?//

    காதல் கவிதை [வரிகள்] அழகு..

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சின்னவள் சிந்தும் சிரிப்பழகில் சிக்கிமனம்
      என்னவள்.. என்னவள்.. என்றோதும்! - பின்னிய
      பூவேலை செய்பவளை! பொங்கும் புலமையால்
      பாவேலை செய்பவளைப் பாடு!

      Supprimer
  3. ஐயா!
    உங்கள் கவிகளை என்னவெனச் சொல்லுவது.
    கவிநயமும் தமிழ்ரசமும் அள்ளிப்பருகிட ஆனந்தமே!

    ஊன் உறக்கந்தான் வருமோ
    உம்கவி தனைக்கேட்டால் பார்
    புகழும் நற்தமிழாலே பாடுகின்றீர்
    பாவலரே வாழ்க பல்லாண்டு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      என்னவெனச் நான்எழுத? இன்றேன் கனிகளைக்
      கன்னமென நான்எழுத! காதலின் - சின்னமென
      அன்னவள் பொன்முகத்தை ஆக்கிடலாம்! மாண்புடைய
      தென்னவள் சீா்களைச் செப்பு!

      Supprimer
    2. “காதலின் - சின்னமென
      அன்னவள் பொன்முகத்தை ஆக்கிடலாம்!“

      அடடா.... அருமை! அருமை!

      Supprimer

  4. வலைத்தமிழ் உறவுகளே வணக்கம்

    வெண்பா விருந்துண்டு விந்தைக் கருத்துகளைப்
    பண்பால் படைத்து மகிழ்கின்றீா்! - நண்பா்களே!
    தண்பா மனத்தன் தரும்நன்றி! நட்பேந்தி
    ஒண்பா வழியில் உவந்து!

    RépondreSupprimer