dimanche 10 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 48]




காதல் ஆயிரம் [பகுதி - 48]

471.
உனைப்பிடித்த பேயென்றே ஓதடா! இங்கே
எனைப்பிடித்த பாட்டரசே! இன்தேன் - இணையாம்
அணைதடுத்து நிற்கும்! அகத்துள்ளே உன்பாக்
கணைதடுத்து நிற்கும் கமழ்ந்து!

472.
தருங்கலை ஆட்டம்! தமிழிசை யூட்டும்!
வருங்கலைத் தோட்டமாய் வாழ்க! - அரும்பும்
அருங்கலை வாணி! அழகொளிர் மேனி!
பெருங்கலை ஞானப் பெருக்கு!

473.
ஒருதலைக் காதல்! உருகுதே உள்ளம்
பெருங்கலைப் பித்தம் பிடித்து! - வருந்தித்
தெருநிலை உற்றுத் திகைத்தழுவும் என்னிலை
இருதலை கொண்ட எறும்பு!

474.
ஏங்கும் மனச்சுமையாம் இன்னலை எண்ணாமல்
தூங்கும் நிலையேனோ? தூயவளே! - தாங்குமோ?
ஓங்கும் உணர்வுகள் ஓடி உடல்முழுதும்
வீங்கும் இரவை விரட்டு!

475.
ஏமாற்று வித்தைகளை எங்கேநீ கற்றனையோ?
தேமா! புளிமா! தெரிந்தவளே! - தாமரையே!
ஆமா! அழிப்பாயோ? ஆக்கம் அளிப்பாயோ?
பூமாங் குயிலே புகல்!

476.
சூ..சூ.. எனயென்னைத் தூர துரத்தாதே!
சே..சே.. எனயென்னைச் செப்பாதே! - ஈ..ஈ..ஈ
சீ..சீ எனயென்னைச் திட்டாதே! இன்குரலால்
கூ..கூ எனயென்னைக் கூவு!

477.
சந்திரனும் தேயும்! இயந்திமும் தேயும்!நாம்
வந்த வழிகளும் தேயுமே! - சந்தனம்
தேயும்! எனைவருத்திச் செல்பவளே! உன்னினைவால்
தேயும் எனைவந்து தேற்று!

478.
நான்பிறந்த நேரமடி! நாளெல்லாம் உன்னுடைய
தேன்சுரந்த பேச்சில் திளைத்திடுவேன்! - மீன்விழியே
வான்நிறைந்த மீன்களென வந்தொளிரும் ஏக்கங்கள்
ஏன்நிறைந்து உள்ளனவோ எண்ணு?

479.
பாக்கள் அனைத்தும் பசுமைத் தமிழ்மணக்கும்
பூக்கள்! புதையல்! படித்துப்பார் - ஏக்கமெலாம்
நீக்கும்! நினைவில் நிலைத்திருக்கும் நேரிழையே!
தூக்கம் இலையே தொடர்ந்து!

480.
பாட்டெழுத வைத்தவளே மின்னும் பருவமுடன் 
கூட்டெழத வைத்தவளே! கோலமிகு - காட்சிகளை
மீட்டெழுத வைத்தவளே! மெல்லக் கதைபுனையச்
சீட்டெழுத வைத்தவளே! சேர்!

(தொடரும்)

10 commentaires:

  1. /// சூ..சூ.. எனயென்னைத் தூர துரத்தாதே!
    சே..சே.. எனயென்னைச் செப்பாதே! - ஈ..ஈ..ஈ
    சீ..சீ எனயென்னைச் திட்டாதே! இன்குரலால்
    கூ..கூ எனயென்னைக் கூவு! ///

    மிகவும் ரசித்தேன் ஐயா...

    RépondreSupprimer
  2. சந்திரனும் தேயும்! இயந்திமும் தேயும்!நாம்
    வந்த வழிகளும் தேயுமே! - சந்தனம்
    தேயும்! எனைவருத்திச் செல்பவளே! உன்னினைவால்
    தேயும் எனைவந்து தேற்று!///

    பூக்களாய் மலர்ந்த பாக்கள் அருமை ..!
    பாராட்டுக்கள்..

    RépondreSupprimer
  3. இன்பமான வரிகள்.....சிலிர்க்க வைக்கின்றன ஐயா.....

    RépondreSupprimer
  4. பாக்கள் அனைத்தும் பசுமைத் தமிழ்மணக்கும்
    பூக்கள்! புதையல்! படித்துப்பார் - ஏக்கமெலாம்
    நீக்கும்! நினைவில் நிலைத்திருக்கும் நேரிழையே!
    தூக்கம் இலையே தொடர்ந்து!

    adadaaa adadaaaa

    RépondreSupprimer
  5. எனக்கு இப்படியெல்லாம் தோண மாட்டேங்குதே...

    RépondreSupprimer
  6. எதுகையும் மோனையும் எப்படிப் பிடிக்கிறீர்கள் ஐயா...? இயல்பாகத் தெறித்து ஓடுகின்றன‌..........சுவையோ சுவை

    RépondreSupprimer
  7. ஐயா...

    ஏக்கமதாகித் தமிழணங்கில் தூக்கமிழந்து இயற்றும்
    பாக்களால் எமைப் பரவசப்படுத்தித் தமிழ்மொழியில்
    ஊக்கம்மிக ஆக்கும் உங்கள் உயரெண்ணம் ஒருபோதும்
    தேக்கமடையாது திகழ்ந்திடும் காணீர்...

    RépondreSupprimer
  8. இளமை திரும்ப இதயம் நிரம்ப
    வளமாய் கவிகள் வழிந்து - குளமாய்
    பெருகிக் கிடக்க , பருகிப் பருகி
    உருகித் தொலைக்கும் உளம்

    RépondreSupprimer
  9. காதல் கவிதை கூவும் தேன் மொழியால் வார்த்தைகள் இயல்பாக வந்து விழுகின்றது காதல் ஆயிரம் கவர்ந்தது வரிகள் ஐயா!

    RépondreSupprimer