mercredi 6 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 44]




காதல் ஆயிரம் [பகுதி - 44]


431.
நெஞ்சணை ஏக்கத்தால் மிஞ்சும் நினைவலையால்
பஞ்சணை பாடாய்ப் படுத்தியது! – வஞ்சிநான்
மஞ்சளைப் பூசினேன் மாமாவுன் ஆசையினால்!
கெஞ்சிடும் உள்ளத்தைக் கேள்!

432.
அஞ்சியே வந்தஎனை ஆசையாய்த் தொட்டணைத்துக்
கொஞ்சியே முத்தங் கொடுத்தவனே! - வஞ்சகனே!
கெஞ்சியே இன்றுநான் வந்தாலும் கேளாமல்
மிஞ்சியே போவதேன் மீண்டு?

433.
மாமன் நினப்பினிலே மார்பு சிலிர்க்குதடி!
காமன் மலர்க்கணைகள் கவ்வுதடி - சீம
துரைபோல் வருவான்! எனைத்தூக்கிக் கொஞ்ச!
மரைபோல் மலரும் மனம்!

434.
செவியில் கொடுத்த சிலிர்ப்பூட்டும் முத்தம்!
புவியில் கிடைத்த புதையல் - விழிநான்கும்
சொக்கிச் சுகங்காணும்! சொர்க்க மலர்க்காட்டில்
சிக்கி வழிகாணும் சேர்ந்து!

435.
தன்னந் தனியாகத் தக்காளித் தோட்டத்தில்
அன்னமே நீவந்தாய்! அன்றுநான் - உன்னிதழில்
கண்ட இனிமையைக் கன்னல் கவியாக்க
அண்டத்தைத் தாண்டும் அது!

436.
கள்ளூறும் தேனுதட்டைக் கவ்விச் சுவைத்ததனால்
உள்ளூறும் காதல் உணர்வோங்கும் – கள்ளியே!
சொல்லூறி நன்றாய்ச் சுரந்தாலும் என்நாவோ
சொல்மாறிப் பேசுமே சொல்லு!

437.
வெள்ளை நிறவேட்டி வெண்மஞ்சள் சட்டையுடன் 
கொள்ளை அடித்துக் கொலுகொண்டாய்! - வல்லவனே!
உன்னை மனக்கூட்டின் உள்வைத்துப் போற்றுகிறேன்
என்னை வதைப்பதுவும் ஏன்?

438.
தடையொன்றும் இல்லை தளிர்க்கொடியே! வேலாம்
படைகொண்டும் என்னுயிரைப் பற்ற! - சுடரும்
நடைகொண்டு பாக்கள் நல்க!பொற் காதல்
அடையொன்று காக்கும் அகம்!

439.
பெடையொன்று கொஞ்சும்! பெருகியே ஆசை
மடையொன்று பாயும் மனத்துள்! - கொடியே!
விடையொன்று சொல்க! விருந்தாக முத்தக்
கொடையொன்று ஈவாய்க் குளிர்ந்து!

440.
விழிசிவந்து நோகும்! வெறுத்துளம் வீட்டின்
தொழில்மறந்து நிற்கும் துவண்டு! - எழிலாம் 
மொழிமலர்ந்து என்னுள் முகிழ்த்தாட வா..வா
பொழில்மலர்ந்து ஆடும் பொலிந்து!

(தொடரும்)

4 commentaires:

  1. ஐயா...
    நாயகன் நாயகி உறவாடலை அற்புதமாய்க் கவிதையில் படைத்து அசத்தியுள்ளீர்கள். தமிழ் கொஞ்சிவிளையாடுகிறது உங்களிடம். வாழ்த்துக்கள் கவிஞரே!

    அழகுதனை ஆராதிக்கும்
    அன்புகொண்டு ஆர்ப்பரிக்கும்
    பழகு இன்தமிழினிலே
    பண்புதனை பறைசாற்றும்
    மரபுவழிப் பெருங்கவியே
    மொழிவியந்து ரசிக்கிறேன்
    மனம்நிறைந்து வாழ்த்துகிறேன்!!!

    RépondreSupprimer
  2. அய்யோ அய்யோ அய்யோ .
    நான் எழுத நினைச்சதை எல்லாம் எழுதிப்புட்டீங்களே.

    RépondreSupprimer
  3. ஐயா தமிழ் பருகினேனே... எனக்கு இது போல் மரபு வழியில் சமைக்க ஆசைதான் எங்கே. பெரியவர்கள் பெரியவர்களே.

    RépondreSupprimer