vendredi 1 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 39]



காதல் ஆயிரம் [பகுதி - 39]

 
381.
என்னழகாம் என்னழகாம் என்றே மனமேங்கும்!
பொன்னழகு உன்முன் பொடியழகே! - சின்னவளே!
முன்னழகு மூட்டுகின்ற மோகம் தணிந்திடவே
கண்ணழகு வித்தைகளைக் காட்டு!

382.
வாய்ப்பொன்(று) எனக்கு வருமென்றால் வான்மதியே!
காய்,பூ,என்(று) இங்குக் கதைப்பேனா? - ஆய்;..பூவென்(று)
ஓடும் சிறுவண்டாய்த் தேனுண்பேன்! என்மண்டை
ஓடுள் நிரம்பும் உணர்வு!

383.
போகும் இடமெல்லாம் போதையுடன் உன்பின்னே
ஏகும் செயற்கண்டே எள்ளிடாய்! - தாகத்தால்
வேகும் உடலுறும் வேதனையை நீயறியாய்!
நோகும் எனதுயிரை நோக்கு!

384.
உன்னைப்போல் யார்வருவார்? ஓங்கும் புகழ்தமிழ்
அன்னைபோல் சீர்தருவார்? அன்பமுதே! - தென்மொழியை
என்னைப்போல் யார்சுவைப்பார்? இன்பக் கலைபயில்வோம்!
முன்னைப்போல் இன்றும் முனைந்து!

385.
முன்னழகில் மூக்கழகு! முல்லை மலரழகு!
பின்னழகில் பின்னல் குழலழகு! - கண்ணழகில்
சொக்கும் நிலையழகு! தூயவளே என்மனந்தான் 
சிக்கும் அழகுன் சிரிப்பு!

386.
எள்ளி நகையாடி என்னுயிரைப் பந்தாடித்
துள்ளிக் குதிக்காதே தூயவளே! - உள்ளுக்குள்
புள்ளி பலவைத்துப் பூக்கோலம் தான்போட்டுத் 
தள்ளி நடிப்பதேன் சாற்று!

387.
கண்ணழகாம் என்பேன்! மயக்கும் மதிதவழும்
விண்ணழகாம் என்பேன்! விரிமலரே  - மண்ணுலகில்
பெண்ணழகாம் என்பேன்!; பெரும்புலமை பொங்கிவரும்
பண்ணழகாம் என்பேன் படித்து!

388.
பண்ணழகை விஞ்சும்! படைத்த பரம்பொருளின்
விண்ணழகை விஞ்சும்! விளையாடிக் - கொண்டாடும்
மண்ணழகை விஞ்சும்! மணிச்சுடரே! உன்னிரு 
கண்ணழகை விஞ்சுமோ காண்!

389.
பறக்கதடி நெஞ்சம்! பவளமே உன்னால்
பிறக்குதடி மஞ்சம்! பெருகி - நிறைந்து 
மறக்குதடி இவ்வுலகு! மார்பமுதை உண்டு
சிறக்குதடி இன்பம் செழித்து!

390.
சிரிப்புக்குச் சீரமைத்த சிந்தனைச் செல்வி 
விரித்த வலையில் விழுந்தேன்! - சரிந்தேன் 
அரிய கலையை அளிக்கும் அழகே!   
உரிய வழியை உணர்த்து!

(தொடரும்)

8 commentaires:

  1. என் மனம் - தங்களின் எழுத்துகளில் தஞ்சம்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி

      Supprimer
  2. வாவ்! ஒவ்வொரு பதிவிலும் அசத்திகிட்டு இருக்கிங்க ஐயா. வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி

      Supprimer
  3. கன்னல் தமிழழகோ கவிதைதரும் பொருளழகோ
    மின்னலாய் அக்கவியைப்பாடும் ஐயாஉன் திறன்தானழகோ
    சின்னவளின் சிந்தனைக்கெட்டாத சிறப்பழகு எதுவென்பேன்
    இன்னமும் தெரியவில்லை இயம்பவும் முடியவில்லை...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி

      Supprimer
  4. கவிதைத் தேன் அருமையாக அடுக்கின்றீர்கள் காதல் ஆயிரம் தொடரட்டும்!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வருகைக்கும் வளா் கருத்திற்கும் நன்றி

      Supprimer