mardi 25 septembre 2012

ஏக்கம் நுாறு [ பகுதி - 9 ]



ஏக்கம் நுாறு [பகுதி - 9] 

பளபளக்கும் பாவாடை சட்டை போட்டுச்
     சிலிசிலிக்கச் செய்பவளே! பொற்கால் தண்டை
கலகலக்கும்! கவிஞன்என் காதில் சந்தம்
     கனிந்தொலிக்கும்! கருங்கூந்தல் கமகமக்கும்!
தளதளக்கும் தக்காளித் தோட்டம் நம்மைத்
     தலையசைத்து வரவேற்கும்! தண்ணீா் பாய்ந்து
சலசலக்கும் தொட்டிக்குள் குளிப்போம் வாராய்!
     தவிதவிக்கும் ஆசைகளை அளப்போம் வாராய்! 41

அந்தஒரு பார்வைக்கே என்றன் ஆன்மா
     அக்அக்காய் ஆகுதடி! அன்பே உன்னால்
எந்தஒரு பொருள்மீதும் விருப்பம் இல்லை!
     இனிப்பெதுவும் உன்பெயா்முன் இனிக்க வில்லை!
தந்தஒரு புன்னகையில் தகரம் கூடத்
     தங்கமென மாறுமடி! கண்கள்  கவ்வும்
இந்தஒரு நொடிக்காகத் தவத்தில் நின்றே
     இருக்குதடி நாள்முழுதும்! யாவும் இன்பம்! 42

பொய்பொய்யோ என்றெண்ணும் வண்ணம், பொல்லாப்
     பொன்மேனி தாங்குமிடை! பொங்கும் ஆசை
மெய்மெய்யோ என்றெண்ணும் வண்ணம், காதல்
     விழிநடத்தும் மாயபடை! இளமை ஏங்கக்
கொய்கொய்யோ என்றெண்ணும் வண்ணம்,  பூத்துக்
     குலுங்குதடி எழிற்கொடை! பார்த்துச் சொக்கி
அய்அய்யோ என்றெண்ணும் வண்ணம் நெஞ்சுள்
     அழியாத பேரழகே! அமுதப் பெண்ணே! 43

கற்கண்டுச் சுவைத்தமிழே! கருத்தைக் கவ்வும்
     காப்பியத்தின் கலையொளியே! மின்னும் முத்துப்
பற்கண்டு மல்லிகையும் ஏக்கம் கொள்ளும்!
     பசும்பாலும் உன்னுள்ளம் பார்த்தே ஏங்கும்!
விற்கண்டு பறவையினம் விரைந்தே ஓடும்!
     வெண்ணிலவு தேய்வதுவும் முகத்தைக் கண்டோ!
சொற்கண்டு இனிக்கின்ற அமுதும் தேனும்
     சோர்வுறுமே! சுரந்தோங்கும் கவிதை ஊற்றே! 44

கண்மணியே! முக்கனியே! காதல் பெண்ணே!
     கலைமுகத்தைக் கண்டவுடன் என்றன் நெஞ்சம்
விண்மணியே! வேலவனே என்றா வேண்டும்!
     வெண்மதியே! வேல்விழியே என்றே ஓதும்!
பண்மணியே என்றென்னைப் பாரோர் போற்ற,
     பைத்தியமே என்றிழிவாய் உரைத்தல் ஏனோ!
பெண்மணியே! பேரின்பக் கடலே! எல்லாப்
     பிறவியிலும் உனைப்பாடும் புலமை வேண்டும்! 45
                                                  தொடரும
 

6 commentaires:

  1. எண் சீர் விருத்தம் அருமை!
    //கண்மணியே! முக்கனியே! காதல் பெண்ணே!
    கலைமுகத்தைக் கண்டவுடன் என்றன் நெஞ்சம்
    விண்மணியே! வேலவனே என்றா வேண்டும்!
    வெண்மதியே! வேல்விழியே என்றே ஓதும்!//
    அழகு வரிகள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனியார் இவள்போல் இளமையொளி கொள்வார்?
      கனியாய்க் கமழும் கவி!

      Supprimer
  2. இனிக்க வைக்கும் வரிகள்... அருமை ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இனிக்கத் தமிழ்பேசும் என்னவளைக் கண்டால்
      அனைத்தும் மறக்கும் அகம்!

      Supprimer

  3. துாக்கம் இழந்து துவள்கின்றேன்! நெஞ்சத்தின்
    நோக்கம் இழந்து நொடிகின்றேன்! - ஊக்கத்தைப்
    பூக்கும் உணா்வுகளைப் பொங்கும் கனவுகளைப்
    போக்கும் வழியைப் புகல்!

    RépondreSupprimer

  4. வணக்கம்!

    பெண்ணவள் பேரழகைப் பேணி மகிழ்கின்றேன்
    கண்ணவள் என்றே கவிதந்தேன்! - விண்ணவள்
    தந்திட்ட ஏக்கத்தைத் தண்டமிழ்த் தேனேந்திச்
    சிந்தித்தேன் நெஞ்சம் சிவந்து!

    RépondreSupprimer