dimanche 22 décembre 2013

வலைப்பூ என் கவிப்பூ - பகுதி 22

நண்பா்களின் வலைப்பூக்களில்
என் கவிப்பூக்கள்

வணக்கம்!

பட்டிக் காட்டு எழில்மங்கை!
     பருத்திச் சேலை! நெற்கட்டு!
குட்டிப் போட்டு அவள்ஆசை
     குடும்பம் நடத்தும்! காதலினைக்
கட்டிப் போட்டு வைத்தாலும்
     கனவில் பொங்கும் இன்பநிலை!
முட்டி போட்டுத் தவஞ்செய்யும்!
     மோகத் தீயில் நெய்வார்த்தே!

06.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

முன்னைத் தமிழின் மாண்புகளை
     முற்றும் மறந்த தமிழகமே!
பொன்னைப் பொருளைச் சோ்க்கின்றாய்!
     புகழைப் பொலிவை மறக்கின்றாய்!
தன்னை வளா்க்க அலைகின்றாய்!
     தாயை மறந்து வாழ்கின்றாய்!
உன்னைத் திருத்த என்போன்றோர்
     உயிரைக் கொடுத்தும் பயனென்ன?

காலப் பதிவுகளைக் கற்றுணர, வரலாற்றுக்
கோலப் பதிவுகளைக் கூட்டிடுக! - ஆல
மரமாய்த் தழைத்திடுக! வன்சீனி வாசன்!நன்
வரமாய்த் தமிழை வடித்து!

06.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

வாழ்வின் துணிவை வடிக்கும் வரிகளை
ஆழ்ந்து படித்தல் அழகு

07.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தாகக் கவிபடித்தேன்! தண்டமிழ்ப் பாட்டெழுதும்
தாகம் எடுக்கும் தனித்து

07.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்

ஆண்மகன் என்றால் என்ன?
    பெண்மகள் என்றால் என்ன?
நாண்..முனை போன்றே நீதி
    நடைபெற வேண்டும் என்பேன்!
வீண்மனக் காமம் ஏற
    வெறிமனம் கொண்டே தாழ்வார்!
மாண்மனக் கற்பைப் பேணி
    மகிழ்மனம் காண்க நன்றே!

கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்
                               - மகாகவி பாரதியார்

07.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

என்னுயிரே கண்ணம்மா என்ற பாடல்
     இதயத்தை வருடியது! வாழ்த்து கின்றேன்!
இன்னமுதே தோற்கின்ற சொற்கள் சோ்த்து
     நெல்மணியைப் பால்துளியாய் உவமை இட்டாய்!
பொன்னொளியே! புதுமலரே என்றே போற்றும்
     புலவரெலாம் வியக்கின்ற ஆக்கம் என்பேன்!
தென்மொழியே! செந்தமிழே! வளா்க ஓங்கி!
     தித்திக்கும் கவிதைகளைத் தலைமேல் தாங்கி!

07.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

துளித்துளியாய் மழைதுாறும்! தேனும் சொட்டும்!
     துயா்அடைத்துக் கண்தலையில் கண்ணீா் கொட்டும்!
பனிப்பனியாய்ப் பூவிதழில் ஒழுகும் காட்சி!
     பசும்புல்லில் நீா்முத்து! குளிரின் ஆட்சி!
கொடிக்கொடியாய் மலா்ந்தாடும் காட்டைப் போன்றும்
     குலைக்குலையாய்க் கொழித்தாடும் தோப்பைப் போன்றும்
கனிக்கனியாய்க் கமழ்ந்தாடும் சொற்கள் சோ்த்துக்
     கவிக்கவியாய்ச் சசிகலா வடித்தார் நன்றே!

09.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

தமிழன் தமிழனைப் பாராட்ட வேண்டும்!
அமிழ்தின் சுவையை அளித்து

11.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

சின்னக் கவிதைகள் என்னைக் கவா்ந்தன!
இன்னும் இனிக்க எழுது!

11.01.2013

--------------------------------------------------------------------------------------------

வணக்கம்!

பால கணேசா் படைத்த எழுத்துகள்
கோலமாய் மின்னுமெனக் கூறு!

11.01.2013

--------------------------------------------------------------------------------------------
 
14 commentaires:

  1. குறட்பா, வெண்பா, விருத்தப்பா... அப்பப்பா!..
    அழகிய பாக்கள் அத்தனையும்!

    மிக அருமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெண்பா குறட்பா விருத்தப்பா இங்குத்
      தண்பாகும் தேனும் தரும்!

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா

    கவிப்பூக்கள் மிக அருமை வாழ்த்துக்கள்..ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. மின்னும் கவிப்பூக்கள் மீண்டும் மலா்ந்திங்கே
      இன்னும் மணம்வீசும் ஈா்த்து

      Supprimer
  3. அருமை ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  4. வணக்கம் !
    தேன் சொட்டும் வார்த்தை ஜாலம் கண்டு உள்ளம் குளிர்ந்ததையா .
    வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .
    http://rupika-rupika.blogspot.com/2013/12/blog-post_22.html

    RépondreSupprimer
  5. தங்கள் கவிதைகளின் மூலம்
    நிறையக் கற்றுக் கொள்ள முடிகிறது
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    RépondreSupprimer
  6. தன்னை வளா்க்க அலைகின்றாய்!
    தாயை மறந்து வாழ்கின்றாய்!
    உன்னைத் திருத்த என்போன்றோர்
    உயிரைக் கொடுத்தும் பயனென்ன?

    ஆஹா அனைத்தும் அருமை ரசித்தேன்...! வாழ்த்துக்கள் கவிஞரே...!

    RépondreSupprimer
  7. அனைத்துமே இனிக்கும் கவிதைகள்!

    உங்கள் கவி வாழ்த்துக் கிடைக்கப் பெற்ற எல்லோருமே
    மிக மிக அதிஷ்டமானவர்கள்தான்.!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  8. பின்னூட்ட கவிகளையே
    பிழையின்றி நீரெழுதி
    முன்னோட்டம் விடுகின்றீர்
    முறைப்படுத்தி தந்தீரே

    RépondreSupprimer