mardi 10 décembre 2013

புகழ்புகழ்

கவிமலர் பாட வேண்டி
     கவியெனை அழைத்தீர்! வண்ணப்
புவிமலர் யாவும் கொய்து
     பூந்தமிழ்த் தாயைப் போற்றி!
குவிமனம் விரிந்து பூக்கக்,
     கொல்மனச் செய்கை நீக்க,
அடிமனம் பொங்கும் பாக்கள்!
     இடியெனத் தாக்கும்! பாரீர்!

நடைபெறும் மூன்றாம் ஆண்டு
     நல்விழா சிறக்க! வள்ளல்
கொடைதரும் மகிழ்வைக் கொஞ்சும்
     குளிர்தமிழ் கொடுக்க! முன்னே
தடைபடும் பகையை மோதித்
     தனிப்புகழ் படைக்க! சந்த
நடையிடும் தமிழே! தாயே!
     நல்லருள் தந்தே காப்பாய்!

மின்னிடும் புகழே! உன்னை
     எண்ணியே மாந்தர் பல்லோர்
இன்னுயிர் ஈந்தார்! வாழ்வில்
     ஈடிலாப் புகழைப் பெற்றோர்
எண்ணிடச் சிலரே உள்ளார்!
     இன்புகழ் சேர்க்கும் பாதை
தன்னலம் கருதாத் தொண்டே!
     தமிழனே உணர்க! வாழ்க!

தன்புகழ் பேசிப் பேசித்
     தமிழனே தாழ்ந்தாய்! சேர்ந்த
முன்புகழ் மாண்பை முற்றும்
     இழந்து..நீ நின்றாய்! தோழா
உன்புகழ் வளர வேண்டின்
     நன்மனம் வேண்டும்! வாழ்வின்
பின்புகழ் நிற்கும்! உன்றன்
     பெருமையை உலகம் காக்கும்!

இப்பயன் வாய்க்கும் என்றே
     ஏற்பது தொண்டா? என்றும்
எப்பயன் கருதா வண்ணம்
     ஏற்று..நீ பணிகள் செய்க!
தப்பிலாச் செய்கை! உண்மை
     தழைத்திடும் வாழ்க்கை! மின்னும்
ஒப்பிலாப் புகழைக் காட்டும்!
     உன்பெயர் உலகே போற்றும்!

மற்றவர் புகழைச் சாய்த்து
     மாய்த்திட இயலா தையா!
நற்றவ மேலோர் பெற்ற
     நறும்புகழ் வாழ்வை வெல்லும்!
கற்றவர் வழியை நாடு!
     கருணையை நெஞ்சுள் சூடு!
பொற்றவம் அன்பே! நன்றே
     பெற்றவர் புகழைக் காண்பார்!

வறுமையைப் போக்கும் திட்டம்!
     வரும்பகை ஓட்டும் வீரம்!
மறுமையை நீக்கும் தூய்மை!
     மதிநலம் தேக்கும் மேன்மை!
சிறுமையைத் தலைமேல் தூக்கும்
     மடமையை மாய்க்கும் தொண்டு!
பொறுமையைக் காக்கும் உள்ளம்
     பொலிந்திடும் புகழை ஈட்டும்!

பிறந்துள நோக்கம் என்ன?
     பிறர்துயர் துடைத்தல்! மீண்டும்
பிறவாதி ருத்தல்! உண்டோம்
     பிழைபடக் கிடந்தோம் என்றால்
இறந்துள நிலையை ஒக்கும்!
     இன்றமிழ் மொழியைக் காப்பீர்!
சிறந்திடும் வாழ்வை ஏற்பீர்!
     செழும்புகழ் தேடும் உம்மை!

அருங்கவி கம்பன் கூட
     அடைந்தனன் துன்பம்! நாட்டுப்
பெருங்கவி மீசைக் காரன்
     பேரிடர் பட்டான்! உண்மை
தருங்கவி வடலூர் வள்ளல்
     தன்னுயிர் வாடி நின்றார்!
பெரும்புகழ் வாய்க்க, வாழ்வைப்
     பின்னிய துன்பம் கோடி!

புகழ்பெறும் மாந்தன் தன்னைப்
     புவியுளார் ஏனோ நாளும்
இகழுறும் வண்ணம் பேசி
     இன்னலை ஏற்கச் செய்வார்!
அகமொளிர் அன்பர் பெற்ற
     அளவிலாத் துயரை இன்று
திகழ்கவி யானும் பெற்றேன்!
     யுககவி யாவேன்! உண்மை!

24-05-2008

13 commentaires:

 1. அகமொளிர் அன்பர் பெற்ற
  அளவிலாத் துயரை இன்று
  திகழ்கவி யானும் பெற்றேன்!
  யுககவி யாவேன்! உண்மை!//

  யுகக்கவி யானீர் நீரே
  இக்கவி ஒன்றே சான்று

  RépondreSupprimer
 2. வணக்கம்
  ஐயா.

  அருமை ரசித்தேன்.. வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
 3. நிச்சயம் யுக கவி ஆவீர் ஐயா

  RépondreSupprimer
 4. அடிமனம் பொங்கும் பாக்கள்!
  இடியெனத் தாக்கும்! பாரீர்!///உண்மை இடியென வே எல்லாக் கவிதைகளும் இருக்கிறது

  RépondreSupprimer
 5. /// பிறந்துள நோக்கம் என்ன?
  பிறர்துயர் துடைத்தல்! ///

  சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...

  RépondreSupprimer
 6. மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

  லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

  RépondreSupprimer
 7. வணக்கம் !
  வாழ்த்துக்கள் ஐயா ........
  இன்னலைப் பெற்றிடினும்
  இனிய கவி இயற்றும் நாவால்
  சொன்னது சொன்னது தான்
  சொற்பனம் கடந்த வார்த்தை !!


  புகழ்பெறும் மாந்தன் தன்னைப்
  புவியுளார் ஏனோ நாளும்
  இகழுறும் வண்ணம் பேசி
  இன்னலை ஏற்கச் செய்வார்!
  அகமொளிர் அன்பர் பெற்ற
  அளவிலாத் துயரை இன்று
  திகழ்கவி யானும் பெற்றேன்!
  யுககவி யாவேன்! உண்மை!

  RépondreSupprimer
 8. தன் புகழ் ஓங்க வேண்டி
  அடுத்தவர் புகழை மாய்த்தல் அழகோ!.. மேலும்,
  தனது புகழ் ஓங்கத் தன்னலம் அற்ற தொண்டே
  சாலவும் நல்லதென மனதில் நிறுத்தி
  வாழ்தல் முறையென சொன்னீர்கள்!..

  மிக மிக அருமை! வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
 9. வாழ்வியல் அர்த்தமதை மிக அழகாக எடுத்து இடித்துரைத்தீர்கள் ஐயா!
  ஆழமான, அற்புதமான அறுசீர் விருத்தங்கள்! மிக அருமை!

  யுக கவி ஆகிவிட்டீர்கள் ஐயா நீங்கள்!
  வேறொருவராலும் இந்த இடத்தை நிரப்ப முடியாது!

  என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  RépondreSupprimer
 10. தமிழ்மணம் +10
  கம்பன் மீது இவ்வளவு பாசமா?

  RépondreSupprimer
 11. அகமது நோக வென்று
  ஆயிரம் உரைப்பர் அற்பர்
  வேலையற்றோர் வெட்டி
  பேச்சை கருத்தினில் கொள்ளல்
  வேண்டாம் வீசிடு குப்பை மேட்டில்
  விரைந்து நீ காண்பாய் மகிழ்வு

  யுக கவி இல்லை என்று
  சொல்லிட வல்லர் உண்டோ
  துயருறும் எண்ணம் ஏனோ
  துணிந்திடு எல்லாம் வெல்லும்.

  அருமை வாழ்த்துக்கள் .....!

  RépondreSupprimer
 12. "தன்புகழ் பேசிப் பேசித் தமிழனே தாழ்ந்தாய்! "- என்றே
  சொன்னதில் உண்மை யுண்டு! சொரணைதான் இல்லை யார்க்கும்!

  RépondreSupprimer