lundi 9 décembre 2013

தமிழ்த்தாத்தா உ.வே.சா




தமிழ்த்தாத்தா .வே.சா

அங்கும் இங்கும் அலைவதுவோ?
     ஆசை பெருகிக் குலைவதுவோ?
எங்கும் திரியும் தெருநாய்போல்
     இழிந்து கிடந்து நலிவதுவோ?
பொங்கும் அறிவு! பெரும்புலமை!
     புவியைப் புரட்டும் நுண்கவிதை!
தங்கும் புகழை எனக்கீந்து
     தாயே தமிழே காத்திடுக!

மதியார் வாசல் மிதியாதே!
     மனமே! பகைக்குப் பணியாதே!
விதியோன் கையில் பொம்மையென
     விளைந்த காலம்! துவளாதே!
சதியோர் கூட்டு! கலங்காதே!
     தமிழின் வன்மை! இறைத்தன்மை!
மதியின் செல்வர்! .வே.சா
     வாழ்வும் வளமும் தமிழாகும்!

பற்று! பாசம்! புகராசை!
     பதவி! பட்டம்! பேராசை!
சுற்றும் நட்பு! பிறர்பொருளைச்
     சுருட்டும் நினைவு! பொய்நடிப்பு!
சற்றும் என்னைச் சாராமல்
     தமிழே! தாயே அருட்செய்தாய்!
முற்றும் தமிழே! .வே.சா
     முகிழ்த்த வாழ்வைப் பாடுகிறேன்!

தம்மின் வாழ்க்கைத் தழைத்திடவே
     தமிழைச் சொல்லிப் பிழைக்கின்றான்!
செம்பொன் தமிழின் திறமறியான்!
     செம்மை சேர்க்கும் அறமறியான்!
நம்மின் தமிழர் உயர்வின்றி
     நண்டின் கதைபோல் கிடக்கின்றார்!
கும்பென் றிருட்டே! .வே.சா
     கொடுத்த விளக்கை ஏற்றுகவே!

அன்னை இல்லம் பெயர்மட்டும்!
     அம்மா முதியோர் இல்லத்தில்!
பெண்ணை மதியான்! மேடையிலே
     பெண்ணின் உரிமை பேசுகிறான்!
கண்ணை விற்றே ஓவியமா?
     மண்ணை விற்றே புலம்பெயர்வா?
என்னைக் காக்கும் .வே.சா
     ஈடில் அறிஞா் வணங்குகிறேன்!

பொன்னும் பொருளும் சேர்த்திடவே
     போட்டி போடும் தமிழர்களே!
மண்ணும் மணியும் பெருகிடவே
     வாழ்வை இழக்கும் மனிதர்களே!
வண்ணத் தமிழின் ஏடுகளை
     வாழ்வாய் வளமாய் எண்ணிமனம்
உண்ணா துறங்கா(து) .வே.சா
     உழைத்தார்! தமிழின் பொற்காலம்!

சுடரும் புலமை! நறுங்கவிதை
     சுரக்கும் உள்ளம்! நூலாய்ந்து
படரும் அறிவு! சுவடிகளைப்
     பதிக்கும் மாண்பு! எழுத்தாற்றல்!
உடலும் உயிரும் தமிழாக
     ஒளிரும் வடிவம்! எந்நாளும்
தொடரும் புகழ்சேர் .வே.சா
     தொண்டின் இமயம்! போற்றுகிறேன்!

எந்த மொழிக்கும் குறையின்றி
     இருந்த மொழிதான் செந்தமிழும்!
சந்தத் தமிழின் துணைக்கொண்டு
     வந்த மொழிகள் பற்பலவாம்!
சொந்தத் தாயின் நினைவின்றித்
     தூங்கும் தமிழன் விழிப்புறவே
தந்த நூல்கள்! .வே.சா
     தமிழர் வணங்கும் இறையென்பேன்!

நாயும் நரியும் நண்டுகளும்
     நாற்றப் பன்றி கழுதைகளும்
பாயும் புலியும் சிறுத்தைகளும்
     பறக்கும் கழுகு ஆந்தைகளும்
பேயும் பிறவும் அலைமோதும்
     மனிதர் உருவில்! இவைக்கண்டு
காயும் நெஞ்சம்! .வே.சா
     தமிழின் தாத்தா! காத்தருளே!

உண்மை ஒளிரும் இடந்தேடி
     உரிமை முழங்கும் களந்தேடி
வண்மை மின்னும் உளந்தேடி
     வண்ணக் கவிஞன் அலைகின்றேன்!
நுண்மை பொங்கும் மொழியாற்றல்!
     நோக்கம் ஒன்றே! தமிழ்உயர்வு!
திண்மை பொங்கும் .வே.சா
     திறத்தை உடையார் கிடைப்பாரோ?

08-05-2008

18 commentaires:

  1. மிக அருமை ஐயா...உ.வே.சா. மாதிரி இன்னொருவர் வர முடியுமா? அவர் புகழ் என்றும் வாழ்க என்று விரும்பி அவரை வணங்குகிறேன்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வல்ல பெரும்புலவா் உ.வே.சா. வாழ்வினைச்
      சொல்லச் சுரக்கும் சுவை

      Supprimer
  2. அன்னை இல்லம் பெயர்மட்டும்!
    அம்மா முதியோர் இல்லத்தில்!
    பெண்ணை மதியான்! மேடையிலே
    பெண்ணின் உரிமை பேசுகிறான்!
    கண்ணை விற்றே ஓவியமா?
    மண்ணை விற்றே புலம்பெயர்வா?
    என்னைக் காக்கும் உ.வே.சா
    ஈடில் அறிஞா் வணங்குகிறேன்!

    வெகுண்டு எழுந்த வரிகளில் மிகுந்த
    வலியும் வேதனையும் புரிகிறது ஐயா
    எது எப்படியோ மனம் சாந்தி பெற வேண்டும் .
    சிறப்பான வரிகளுக்கு வாழ்த்துக்களும்
    பாராட்டுக்களும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அம்பால் அளித்த அமுதச் எழுத்துக்கள்
      செம்பால் இனிமையெனச் செப்பு

      Supprimer
  3. உவேசாமிநாத ஐயர் உயர் கருத்துகளை
    உணர்வோடேற்றிய உன்னத விருத்தம் மிக அருமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      இளமதி தந்த இனிய கருத்தோ
      உளமதில் நிற்கும் ஒளிர்ந்து

      Supprimer
  4. மிக மிக அருமை ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தனபால் வருகை! தமிழ்ப்பால் இனிமை!
      மனமேல் நிறையும் மகிழ்வு

      Supprimer
  5. தமிழ்த்தாத்தா அவர்களைப் பாராட்டி மிகச்சிறந்த ஆக்கம். அருமை. பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கோபாலா் தந்த குளிர்தமிழ்ச் சொல்லெல்லாம்
      பூபாலப் பாட்டின் பொலிவு!

      Supprimer

  6. எங்கள் தமிழ்த்தாத்தா ஈடில்லா உ.வே.சா
    திங்கள் ஒளியெனச் சீா்பெற்றார்! - எங்கெங்கும்
    ஓடி அலைந்தார்! உயா்தமிழ் ஏடுகளைத்
    தேடி அலைந்தார் தோ்ந்து!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அப்பலா நல்கும் அருஞ்சுவை போன்றதுவே
      ஒப்பிலா உ.வே.ச நல்லுழைப்பு! - உப்பிலாப்
      பண்டம் விழும்குப்பை! பைந்தமிழா! செந்தமிழை
      அண்டம் முழுதும் அள!

      Supprimer
  7. தமிழ்த் தாத்தாவின் நினைவினைப் போற்றுவோம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாத்தா அளித்த தமிழைத் தலைசூடிக்
      கூத்தாடு துள்ளிக் குதித்து!

      Supprimer
  8. பொன்னும் பொருளும் சேர்த்திடவே
    போட்டி போடும் தமிழர்களே!
    மண்ணும் மணியும் பெருகிடவே
    வாழ்வை இழக்கும் மனிதர்களே!
    வண்ணத் தமிழின் ஏடுகளை
    வாழ்வாய் வளமாய் எண்ணிமனம்
    உண்ணா துறங்கா(து) உ.வே.சா
    உழைத்தார்! தமிழின் பொற்காலம்!

    உ.வே.சா வின் தொண்டுக்கு மணிமகுடம் சூட்டி விட்டீர் இக் கவிதை மூலம்
    வெண்பா வேந்தே! நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      புலவா் அளித்த புகழுரையால் என்னுள்
      குலவும் இனிமை குழைந்த

      Supprimer
  9. மிகவும் அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள் ஐயா.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்

      அன்புடன் வந்தீா்! அருந்தமிழ்ப் பற்றேந்தி
      இன்புடன் தந்தீா் இனிப்பு

      Supprimer